சண்டிகர் :பஞ்சாபின் புதிய முதல்வராக பதவியேற்ற சரண்ஜித் சிங் சன்னி, 58, காங்., முன்னாள் தலைவர் ராகுலின், 51, காலைத் தொட்டு ஆசி கேட்டதாக 'வீடியோ' வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் காங்., கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி மோதலில் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.சண்டிகரில் நேற்று முன்தினம் அவர் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
முதல்வராக பதவியேற்ற சன்னி, ராகுலின் காலைத் தொட்டு ஆசி கேட்டதாக 'வீடியோ' ஒன்று சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது; இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.'இதுதான் காங்.,கின் கலாசாரம்' என, எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி, பா.ஜ., விமர்சனம் செய்து உள்ளன.
சிம்லாவில் ஓய்வு!
காங்., தற்காலிக தலைவர் சோனியாவின் மகளும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்காவுக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் பங்களா உள்ளது. அங்கு சோனியா, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோர் ஓய்வு எடுத்து வருகின்றனர்.
சரண்ஜித் சிங் சன்னியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் திட்டம் ஏதும் ராகுலுக்கு இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அந்த விழாவில் பங்கேற்றார். காலையில் சண்டிகருக்கு விமானம் மூலம் வந்த சோனியா, காரில் சாலை மார்க்கமாக சிம்லாவுக்கு சென்றார். பதவியேற்பு விழா முடிந்ததும் ராகுலும் சிம்லாவுக்கு புறப்பட்டு சென்றார்.அடுத்த சில நாட்கள் அவர்கள் அங்கு தங்கி, ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE