உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
எம்.கே.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஆயுள் முழுவதும் நாத்திகம் பேசி, பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவாக பேசி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வ உருவங்களை மட்டும் நிந்தித்து வாழ்ந்து, மறைந்தவர், 'நாத்திக பேரொளி'யான தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி. அதாவது அவரை பொறுத்தவரையில் ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகம். மற்ற மதங்களை ஆதரிப்பார்.
கருணாநிதி வழியில் வந்த அவரது மகன் முதல்வர் ஸ்டாலினும், அதே கொள்கையை தான் கடைப்பிடிக்கிறார். முதல்வரானதும், கோவில்களில் மட்டும் தமிழில் அர்ச்சனை செய்யும்படியும், தமிழே சரியாக உச்சரிக்க தெரியாதோரை அர்ச்சகராக நியமித்தும் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பெயர் தான் மதசார்பின்மையா?
கொரோனா நோய் பரவல் காரணமாக, கோவிலுக்குள் நுழைய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உண்டியல்கள் காலியாக தான் இருக்கும். புதியதாக நியமிக்கப்பட்டோருக்கு எவ்வாறு சம்பளம் கொடுக்க முடியும்?

குருக்களையும், பட்டர்களையும் இழிவுப்படுத்தும் வகையில் சரியான பயிற்சி இல்லாதோரை, அர்ச்சகர்களாக நியமித்திருக்கிறார், முதல்வர் ஸ்டாலின். 'சீர்திருத்தம்' என்ற பெயரில், காலங்காலமாக கோவில்களில் நடந்து வரும் பூஜை முறைகளை களங்கப்படுத்தும் முயற்சியில், முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
இந்த சீர்திருத்த நடவடிக்கையை, பிற மதங்களில் செயல்படுத்த கனவிலும் அவர் நினைக்க மாட்டார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஏப்., 14ம் தேதி தமிழ் புத்தாண்டை, ஜன., 14ம் தேதிக்கு மாற்றினார். கிறிஸ்துமஸ் தினத்தையோ, பக்ரீத் மற்றும் ரம்ஜான் தேதிகளையோ அவ்வாறு மாற்ற முடியுமா?
கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், சர்ச் மற்றும் மசூதியில் தமிழ் தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்த முடியுமா? கோவில்களில் இருக்கும் அறநிலைய துறை அலுவலகங்கள் போல, சர்ச் மற்றும் மசூதியில் ஏதும் கிடையாது; அது ஏன்?
கோவில் வருமானம் அரசுக்கு செல்ல வேண்டும்; சர்ச் மற்றும் மசூதியில் கிடைப்பது மட்டும் அந்தந்த மதத்தினருக்கு மட்டும் கிடைக்க வேண்டுமா? என்னங்க அரசின் நியாயம்? முதல்வர் ஸ்டாலின், கோவில் விஷயத்தில் தலையீடு செய்வதை விட, விலைவாசி குறைப்பு, தரமான கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.