பொது செய்தி

தமிழ்நாடு

'அம்ரூத்' பாணியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் : நிதியை முறையாக பயன்படுத்த அரசு கிடுக்கிப்பிடி!

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை : மத்திய அரசின், 'அம்ரூத்' திட்ட பாணியில், தமிழக அரசின், 'கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்' 1,000 கோடி ரூபாயில், இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதில், நிதி முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.தமிழகத்தில் சென்னை தவிர்த்து, 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், புதிதாக வளரும் நகரங்களாக இருந்தாலும், அடிப்படை வசதிகள்


சென்னை : மத்திய அரசின், 'அம்ரூத்' திட்ட பாணியில், தமிழக அரசின், 'கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்' 1,000 கோடி ரூபாயில், இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதில், நிதி முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை தவிர்த்து, 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், புதிதாக வளரும் நகரங்களாக இருந்தாலும், அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாகவே உள்ளன. இவற்றில், மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 11 மாநகராட்சிகள்; அம்ரூத் திட்டத்தில், 28 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்கள் அனுப்பப்பட்டு, மத்திய அரசின் நிதி பெறப்படுகிறது.

இந்நிலையில், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 'கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்' ஒன்றை, சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவித்தது. திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அரசாணை வெளியிட்டதுடன், நடப்பு நிதியாண்டில், 1,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டு வாரியாக ஆய்வு

நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், குடிநீர் விநியோகம், சாலை வசதி, தெருவிளக்கு, மயானம், சமுதாய கூடம், நுாலகம் ஆகியவற்றை மேம்படுத்த, இந்நிதி பயன்படுத்தப்படும். இதற்காக, வார்டு வாரியாக அடிப்படை வசதி பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய நகராட்சிகளும், பேரூராட்சிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.வார்டு நிலையில் உள்ள தேவைகளை கணக்கெடுத்து, அதற்கான திட்டங்களை தயாரித்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுப்ப வேண்டும். அரசு வகுத்துள்ள வழிமுறைகளுக்கு உட்பட்டு இதற்கான நிதி விடுவிக்கப்படும்.

கண்காணிப்பு குழு
உள்ளாட்சி அமைப்புகள் பரிந்துரைக்கும் திட்டங்களை ஆராய்ந்து, நிதி ஒதுக்கீட்டுக்கான இறுதி முடிவு எடுக்க, உயர் அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தலைமையில், நிதித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும்நிதி சேவைகள் கழகமான, 'டுபிட்கோ' தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.இக்குழுவுக்கு 10 வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின், நகர்ப்புற மேம்பாட்டுக்கான, 'அம்ரூத்' திட்ட பாணியில், அதிகாரம் மிக்க அமைப்பாக இக்குழு செயல்படும்.

'டுபிட்கோ' பணி என்ன?

இத்திட்டத்தில், கண்காணிப்பு குழு ஒப்புதலுக்கு வரைவு திட்டங்களை அனுப்பும் பணிகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக, 'டுபிட்கோ' நியமிக்கப்பட்டுள்ளது. நிதி நிர்வாக பணிக்காக, 'டுபிட்கோ'வுக்கு, 12 விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
 நகராட்சிகள், பேரூராட்சிகளில் இருந்து பரிந்துரைக்கப்படும் திட்டங்களின் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, நிதி தேவையை இறுதி செய்யும் பணிகளை மேற்கொள்ளும்

 நிதி ஒதுக்கீடு, நிதியை தேசியமயமாக்கப்பட்ட வங்கி வாயிலாக விடுவிப்பது, திட்டத்துக்கு தேவையான கலந்தாலோசகர் தேர்வு, டெண்டர் பணிகளை டுபிட்கோ கண்காணிக்கும்

 விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது, ஒப்பந்தங்களை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளையும், டுபிட்கோ மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் தலையீடு?

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களில், இதுவரை இல்லாத வகையில், இத்திட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு வழங்கும், 1,000 கோடி ரூபாய் முறையாக வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய இது உதவும்.குறிப்பாக, உள்ளூர் அரசியல் வாதிகள், உள்ளாட்சிகள் வாயிலாக இத்திட்டத்தில் தலையிட முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த, அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏழு பணிகளுக்கு தடை
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், ஏழு வகையான பணிகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 குடியிருப்பு, அலுவலகங்கள் கட்டக்கூடாது

 அரசு உதவி பெறும், சுயநிதி கல்வி நிறுவனங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது
 கடன் தவணை செலுத்த, மத்திய அரசின் திட்டத்தில் பங்களிப்பாக செலவு செய்யக்கூடாது

 நிலம் கையகப்படுத்த இழப்பீடு வழங்க பயன்படுத்தக் கூடாது

 தனி நபர் அல்லது குடும்ப பயன்பாட்டுக்கான வசதியை ஏற்படுத்தக் கூடாது
 வருவாய் ஈட்டும் திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது

 வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான நிலங்களில் மேற்கொள்ளும் திட்டங்களையும் இதில் சேர்க்க கூடாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X