ஏன் இந்த வேடிக்கை வேலை?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஏன் இந்த வேடிக்கை வேலை?

Added : செப் 22, 2021
Share
ஏன் இந்த வேடிக்கை வேலை?ஆர்.கோபாலன், மகேந்திரகிரி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்செந்துார், சமயபுரம், திருத்தணி கோவில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்திருக்கிறார்.இந்த மூன்று கோவில்களிலும் வழங்கப்படும் அன்னதானத்தால், தினமும் 7,500 பக்தர்கள் பயனடைவர். காலை 8:00 மணி முதல்,


ஏன் இந்த வேடிக்கை வேலை?ஆர்.கோபாலன், மகேந்திரகிரி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்செந்துார், சமயபுரம், திருத்தணி கோவில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்திருக்கிறார்.
இந்த மூன்று கோவில்களிலும் வழங்கப்படும் அன்னதானத்தால், தினமும் 7,500 பக்தர்கள் பயனடைவர். காலை 8:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, அதாவது தினமும் 14 மணி நேரம் உணவு பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.யாரும், மதுரை மீனாட்சி திருமணத்திற்கு வந்த பூத கணங்கள் மாதிரியோ, மாயா பஜார் கடோத்கஜன் மாதிரியோ, 24 மணி நேரமும் வயிற்றுக்குள் உணவை தள்ளிக் கொண்டிருக்க மாட்டார்கள்.பெரும்பாலான மக்கள் காலை, இரவு வேளையில் டிபன்; மதியம் மட்டும் சாப்பாடு சாப்பிடுவது வழக்கம். மூன்று வேளையும் யாரும் சாப்பாடு சாப்பிடுவதில்லை. அந்த மூன்று கோவில்களிலும் தினமும் 7,500 பக்தர்கள் பயனடைவர் என, தி.மு.க., அரசு குறிப்பிட்டு உள்ளது.கோவிலில் தினமும் சராசரியாக 2,500 பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து, அன்னதானம் சாப்பிடுவர் என்பது நிச்சயம் கிடையாது. சில நாட்களில் கூடுதலாகவும் வரலாம்; சில நாட்களில் குறைவாகவும்
வரலாம்.தினமும் 2,500 பேர்களுக்கு உணவு சமைத்து விட்டால், கூடுதலாக பக்தர்கள் வந்தால் என்ன செய்வர்; பக்தர்கள் குறைவாக வரும் நாட்களில் மீதமாகும் உணவை என்ன செய்வதாக உத்தேசம்?கோவிலில் இரவு அர்த்த ஜாம பூஜை முடித்து, 9:00 மணிக்கு நடையை அடைத்து விடுவர். அதன் பின், பக்தர்களை எங்கு அமர வைத்து உணவு பரிமாறுவர்?சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வழங்கும் மதிய உணவை, பிச்சைக்காரர்களும், சிறு கடை வியாபாரிகளும் தான் சாப்பிடுகின்றனர். பக்தர்கள் என்று பார்த்தால் 10 பேர் கூட தேற மாட்டார்கள்.
எதற்காக தமிழக அரசுக்கு இந்த வேண்டாத வேலை?செய்ய வேண்டிய வேலைகள் 1,000 இருக்க, அதையெல்லாம் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டு, கோவில்களில் நாள் முழுதும் அன்னதானம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை அல்லாமல் வேறு என்ன?எட்டு மணி நேரம் உழைக்கும் தொழிலாளர்களையே 12 மணி நேரம் உழைக்க வைத்து, அதற்கு ஈடாக, வாரம் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.இந்நிலையில், கோவில்களில் உணவு சமைப்போரை 14 மணி நேரம் வேலை வாங்க, தமிழக அரசு உத்தேசித்திருப்பது கொடுமை அல்லவா?இவ்வளவு ஆர்ப்பாட்டமாக, விளம்பரத்திற்காக, நாள் முழுதும் உணவு என, வேடிக்கை காட்டும் தி.மு.க., அரசு தான், வாரம் மூன்று நாட்கள் கோவிலுக்குள் பக்தர்கள் நுழையவே தடை விதித்து
இருக்கிறது.கோவிலுக்குள் நுழைய பக்தர்களுக்கு தடை விதித்து விட்டு, நாள் முழுதும் அன்னதானம் என்பது வேடிக்கையாக
இல்லையா?


பூமியை காப்பாற்றுவோம்!குபே.பூபேஷ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம். இது, அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.தமிழகத்தில் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க, 2019 ஜன., 1ம் தேதி முதல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.மூன்று ஆண்டுகளாகியும், இரண்டு அரசுகளாலும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் முழுமை பெற முடியவில்லை. குறிப்பாக சென்னையில் 10 சதவீதம் அளவில் கூட பிளாஸ்டிக் ஒழிக்கும் நடவடிக்கையில் வெற்றியில்லை. காரணம், மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு தான்.
அதிகாரிகள் எப்போதும் சில்லரை விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தி, அபராதம் விதித்து, தம் கடமையை நிறைவேற்றி விடுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் ஒழியவே ஒழியாது!பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் மொத்த விற்பனை நிறுவனங்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அந்த இடங்களுக்கு, 'சீல்' வைத்தால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கலாம்.
மாநிலத்தில் லட்சக்கணக்கான சில்லரை கடைகள் உள்ளன. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் 100 தான் இருக்கும். எதை மூடுவது எளிது?சில்லரை கடைக்காரர்களிடம் அதிரடி காட்டும் அதிகாரிகள், பெரு நிறுவனங்களைக் கண்டால் 'பம்மி' விடுகின்றனர்.பிளாஸ்டிக்கை 100 சதவீதம் ஒழிக்க வேண்டும் என்றால், அதை தயாரிக்கும் இடத்தை முடக்க வேண்டும்.'ஹெல்மெட், மாஸ்க்' அணியாதோர் மீது நடவடிக்கை எடுப்பதை போல, பிளாஸ்டிக் பை எடுத்து செல்லும் மக்களிடம் அபராதம் விதிக்கலாம். உயிர்வாழ, இருக்கும் ஒரே பூமியை காப்பாற்ற வேண்டுமானால், பிளாஸ்டிக் ஒழிப்பு மிக
அவசியமானது.


'110' விதி அவசியமா?ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டசபை விதிகள் இயற்றப்பட்டு உள்ளன; இதில் மொத்தம் 23 அத்தியாயங்களும், 292 விதிகளும் உள்ளன. அந்த விதிகளில் உட்பிரிவுகளும் உண்டு.இதில், '110' விதியின் கீழ், தமிழக அரசு எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அந்த விதி தான் என்ன?முதல்வர் அல்லது அமைச்சர், பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தை பற்றி சபாநாயகரின் அனுமதியுடன், 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்; அந்த அறிக்கையின் மீது எவ்வித விவாதமும்
இருத்தல் கூடாது.அது ஏன் என்றால், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விவாதம் மேற்கொண்டால் கால விரயம் ஏற்படும் என்பதால் தான்.அதாவது, மிக அவசியமான விஷயத்திற்கு மட்டுமே 110 விதியை பயன்படுத்த வேண்டும்.நம் தமிழக சட்டசபையில் அப்படியா நடக்கிறது... எதற்கெடுத்தாலும் 110 விதியின் கீழ் அறிக்கை வெளியிடப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியில் 110 விதியின் கீழ், முதல்வர்களால் அறிவிக்கப்பட்ட 2.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 537 அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாம்.இத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றால், 110 விதியை முறையாக பயன்படுத்தவில்லை என்று தானே அர்த்தம்?தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க., அரசும், தற்போது நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் 110 விதியின் கீழ் பல்வேறு திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
இந்த விதியின் கீழ் வெளியிடப்படும் திட்ட அறிவிப்புகள் பெரும்பாலும், தற்காலிகமாக பொதுமக்களை திருப்திபடுத்த மட்டுமே ஆட்சியாளர்களுக்கு பயன்படுகிறது.
அதனால், முறையாக பயன்படுத்தப்படாத 110 விதியை நீக்கி விடலாம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X