ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் இழுபறி : உள்நாட்டு போர் மூளும் என இம்ரான் எச்சரிக்கை | Dinamalar

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் இழுபறி : உள்நாட்டு போர் மூளும் என இம்ரான் எச்சரிக்கை

Updated : செப் 24, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (9)
Share
காபூல் :தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி அமைவதில் இழுபறி தொடர்கிறது. தலிபான்களை ஆதரிக்க, அனைத்து நாடுகளும் தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ''அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை தலிபான்கள் கொடுக்காவிட்டால், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படும்,'' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக
ஆப்கன், தலிபான்கள் ஆட்சி ,இழுபறி! உள்நாட்டு போர்  இம்ரான் எச்சரிக்கை

காபூல் :தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி அமைவதில் இழுபறி தொடர்கிறது. தலிபான்களை ஆதரிக்க, அனைத்து நாடுகளும் தயக்கம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், ''அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை தலிபான்கள் கொடுக்காவிட்டால், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படும்,'' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள், கடந்த மாதம் வெளியேறின. இதையடுத்து, தலிபான் பயங்கரவாதிகள் கையில் ஆப்கன் மீண்டும் சிக்கியது. அதிபராக இருந்த அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், ஆப்கனில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் தலிபான்கள் ஈடுபட்டனர். ஆனால், அவர்களுக்கு அது எளிதாக இல்லை. அதிகாரத்தை வரையறுப்பதில், தலிபான் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள ஏற்பட்டன.பின், ஒரு வழியாக இடைக்கால பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார். முல்லா கனி பராதர் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்; 70க்கும் மேற்பட்டோர் அடங்கிய இடைக்கால அமைச்சரவை யும் நியமிக்கப்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் துணைப் பிரதமர் முல்லா கனி பராதர், பாக்., ஆதரவு ஹக்கானிகளால் ஓரங்கட்டப்படுவதால், தலிபான்களுக்குள் பிளவு ஏற்பட்டு உள்ளது. சில வாரங்களுக்கு முன், பராதர் ஹக்கானி, தலைவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் உலவின. தலிபான்கள் இதை மறுத்தாலும், பராதர் இன்னும் மக்கள் முன் நேரிடையாக தோன்றவில்லை.

ஆப்கனில் தலிபான்களால் அமைச்சரவையை அறிவித்தும், அவர்களால் இடைக்கால அரசை அமைக்க முடியாததால், அங்கு இழுபறி நீடிக்கிறது. அதோடு, ஆப்கனில் இடைக்கால அரசில் இடம் பெற்றுள்ள அனைவருமே ஆண்கள். பெண்களுக்கு அரசியலில் இடமில்லை என தலிபான்கள் அறிவித்து விட்டனர். அது மட்டுமின்றி மத சிறுபான்மையினருக்கோ, மொழி வாரியான குழுவினருக்கோ ஆட்சியில் இடம் தரப்படவில்லை.

ஆப்கனில் 1990களில் தலிபான்கள் ஆட்சி நடந்த போது, கொடூர சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. பெண் சுதந்திரம், பெண் கல்வி என அனைத்தும் முடக்கப்பட்டன. இதனால், 1990களில் இருந்த தலிபான் ஆட்சி போலவே, ஆப்கனில் மீண்டும் அதே ஆட்சி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இல்லாத நிலையில், தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்க, உலக நாடுகள் அனைத்தும் தயக்கம் காட்டி வருகின்றன. இதையடுத்து, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறப்பு துாதர்கள், காபூலுக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் தற்காலிக பிரதமர் முல்லா முகமது ஹசன் அகுந்த் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசினர். முன்னாள் அதிபர் அமித் கர்சாயையும் அவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கன் நிலைமை பற்றி, பிரிட்டன் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:தலிபான்கள் மனித உரிமைகளை மதிக்க வேண்டும், மற்ற பயங்கரவாத அமைப்புகள், ஆப்கன் மண்ணை, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும்.

தலிபான்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை தர வேண்டும். இல்லாவிடில், உள்நாட்டுப் போர் மூள்வதைத் தடுக்க முடியாது. அப்படியேதும் நடந்தால், ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு உகந்த இடமாக மாறிவிடும். அது, ஆப்கனுக்கு மட்டுமின்றி, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும் ஆபத்து. இவ்வாறு இம்ரான் கூறியுள்ளார். இம்ரான் ஏற்கனவே இதே போன்றதொரு யோசனையை தெரிவித்திருந்தார். அதற்கு தலிபான்கள், 'எங்களுடைய ஆட்சி எப்படி அமைய வேண்டும் என பாகிஸ்தான் சொல்லத் தேவைஇல்லை. 'எங்களை பாகிஸ்தான் உட்பட, வேறு எந்த நாடும் வழிநடத்த முடியாது' என பதிலடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


'சார்க்' மாநாடு ரத்து'சார்க்' எனப்படும், தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பில், இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா.வின் 76வது பொது சபை கூட்டம் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு இடையே, சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், 25ல் சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில், 'ஆப்கன் வெளியுறவு அமைச்சர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என, பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதற்கு, இந்தியா உட்பட மற்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உறுப்பினர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், சார்க் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.


ஐ.நா., துாதர் யார்:தலிபான் போர்க்கொடிகடந்த மாதம் ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அதன் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீ, ஐ.நா., துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து தலிபான் அமைப்பு, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், 'ஆப்கனில் தலிபான் அரசு அமைந்துள்ளதால், முந்தைய அரசின் ஐ.நா., துாதர் கிராம் இசாகுசய் நியமனம் செல்லாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஐ.நா.,வின் புதிய துாதராக, சுஹைல் ஷாஹீ நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தற்போது நடைபெறும் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், ஆப்கன் சார்பில் பேச அனுமதிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது நடந்து வரும் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், ஆப்கன் துாதர் கிராம் இசாகுசய் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதற்கிடையே, தலிபானை ஐ.நா., உட்பட பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், அதன் புதிய துாதர் நியமனம் ஏற்கப்படுமா என தெரியவில்லை. இது குறித்து, ஐ.நா., அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆப்கன் துாதராக கிராம் இசாகுசய் தான் உள்ளார். தலிபான் துாதர் நியமனம் குறித்து, ஐ.நா., குழு ஆராய்ந்து முடிவெடுக்கும். அதுவரை தலிபான் துாதருக்கு பொதுச் சபை கூட்டத்தில் தற்காலிக இருக்கை ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X