மதுரை:மணல் திருட்டு வழக்கு விசாரணையை கண்காணிக்கத் தவறியதாக துாத்துக்குடி எஸ்.பி.,மீது தானாக முன்வந்து ஏன் அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கமளிக்க அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார். அவரது விளக்கத்தை ஏற்று வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
துாத்துக்குடி மாவட்டம் முடிவேந்தல் முத்துக்குமார். இவர் உட்பட சிலர் சட்டவிரோதமாக ஆற்று மணலை டிராக்டரில் கொண்டு சென்றதாக 2019 ல் சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிந்தனர். சிலர் இவ்வழக்கில் ஜாமின், முன்ஜாமின் பெற்றனர். இவ்வழக்கில் தொடர்புடையோர் தனிநபர் பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக மணல் எடுத்தது தொடர்பாக துாத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க 2019 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாயர்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கில் 2021 ஜூலை 22 ல் முத்துக்குமார் கைது செய்யப் பட்டார். அவர் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.ஏற்கனவே நீதிபதி பி.புகழேந்தி உத்தரவு: ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மணல் திருட்டை தடுக்க வேண்டிய பொறுப்பு வி.ஏ.ஓ.,மற்றும் வருவாய்த்துறையினருக்கு உள்ளது. அவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துாத்துக்குடி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணல் திருட்டு வழக்கில் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரின் விசாரணையை துாத்துக்குடி எஸ்.பி., கண்காணிக்க இந்நீதிமன்றம் 2019 ல் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் முன்னேற்றம் இல்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதால் எஸ்.பி.,மீது இந்நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்பதற்கு அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். துாத்துக்குடி எஸ்.பி.,ஜெயக்குமார் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கை: இனிமேல் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளப்படும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க மற்றும் எனது கவனத்திற்கு கொண்டுவர எஸ்.பி.,அலுவலகத்தில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதை வாரந்தோறும் கண்காணிப்பேன் என குறிப்பிட்டார். இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE