ஸ்தம்பித்தது: வேட்பு மனு தாக்கலால் பி.டி.ஓ., அலுவலகங்கள்...கட்சியினர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்| Dinamalar

தமிழ்நாடு

ஸ்தம்பித்தது: வேட்பு மனு தாக்கலால் பி.டி.ஓ., அலுவலகங்கள்...கட்சியினர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

Added : செப் 23, 2021
Share
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் திரண்டதால் பி.டி.ஓ., அலுவலகங்கள் ஸ்தம்பித்தது. மேலும், சாலையில் குவிந்த கூட்டங்களால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய
 ஸ்தம்பித்தது: வேட்பு மனு தாக்கலால் பி.டி.ஓ., அலுவலகங்கள்...கட்சியினர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் திரண்டதால் பி.டி.ஓ., அலுவலகங்கள் ஸ்தம்பித்தது.

மேலும், சாலையில் குவிந்த கூட்டங்களால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நேற்று 22ம் தேதியுடன் முடிவடைந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனால், வேட்பு மனு துவங்கிய நாளில் இருந்து மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சைகள் மட்டுமே அதிகளவில் மனு தாக்கல் செய்து வந்தனர்.இதையடுத்து, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,விற்கும், தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 20ம் தேதி அ.தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கடைசி நாளான நேற்று, தி.மு.க.,வினர் மற்றும் அ.தி.மு.க.,வினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்ய அந்தந்த பகுதிகளில் உள்ள பி.டி.ஓ., அலுவலகம் முன் குவிந்தனர்.இதனால், மாவட்டத்தில் செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி, காணை, கோலியனுார், மயிலம், மரக்காணம், மேல்மலையனுார், வல்லம் ஆகிய பி.டி.ஓ., அலுவலகங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.இதேபோன்று, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் குவிந்தனர். பி.டி.ஓ., அலுவலகங்களில் குவிந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

மேலும், காணை, கோலியனுார், கண்டமங்கலம் உள்ளிட்ட சாலையோரத்தில் உள்ள பி.டி.ஓ., அலுவலகங்கள் முன் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.மாவட்டத்தில் நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு குவிந்த கூட்டத்தால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X