பொது செய்தி

தமிழ்நாடு

பளபளக்கும் பட்டுச் சேலைகள்... : ஒரே இடத்தில் அணிவகுக்கும் கண்டாங்கி, சுங்குடி

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடியில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கைத்தறி விற்பனை நிலையத்தில் பட்டு ரகங்கள், கண்டாங்கி, சுங்குடி,கோரா காட்டன் சேலை, போர்வை, லுங்கி, துண்டு உள்ளிட்ட அனைத்து ரகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.காரைக்குடி கண்டாங்கி சேலை புவிசார் குறியீடு பெற்றதன் நினைவாக மத்திய அரசு சார்பில் கைத்தறி ரகங்களை ஊக்குவிக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பயன் பெறும்
பளபளக்கும் பட்டுச் சேலைகள்... : ஒரே இடத்தில் அணிவகுக்கும் கண்டாங்கி, சுங்குடி

காரைக்குடி : காரைக்குடியில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கைத்தறி விற்பனை நிலையத்தில் பட்டு ரகங்கள், கண்டாங்கி, சுங்குடி,கோரா காட்டன் சேலை, போர்வை, லுங்கி, துண்டு உள்ளிட்ட அனைத்து ரகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.

காரைக்குடி கண்டாங்கி சேலை புவிசார் குறியீடு பெற்றதன் நினைவாக மத்திய அரசு சார்பில் கைத்தறி ரகங்களை ஊக்குவிக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பயன் பெறும் வகையில் 1.83 கோடி ரூபாய் செலவில் 70 நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பயன் பெறும் வகையில் கைத்தறி ரக விற்பனை நிலையத்தை காரைக்குடியில் துவங்கியுள்ளது. 50 லட்சம் செலவில் சாயம் ஏற்றும் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 14 கடைகளில் 13ல் கைத்தறி தயாரிப்பு விற்பனையும், ஒரு கடை பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனை மையத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


செட்டி நாடு கண்டாங்கி சேலை

செட்டி நாடு பகுதியில் உள்ள நகரத்தார் பட்டு சேலை ரகங்களில் உள்ளதை போல் பருத்தியால் தயாரிப்பது கண்டாங்கி சேலையாகும்.இது பருவ கால மாற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சேலையாகும்.கோடை காலத்தில் வியர்வையை உறிஞ்சும் தன்மையும்,குளிர் காலத்தில் குளிர் தாங்கும் விதத்தில் பயன்படும் பாரம்பரிய சேலை ரகமாகும். இந்தியாவின் புவிசார் குறியீடும், ஐ.எஸ்.ஐ.,முத்திரையும் பெற்றுள்ளது. இந்த சேலைகள் 50 ஆண்டுகளுக்கும் மேல் உழைக்கும் திறன் கொண்டது. குறைந்த பட்சம் 730 ரூபாயிலிருந்து 2350 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.


மதுரை சுங்குடி சேலைகள்

மதுரையில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுாரில் தயாரிக்கப்படும் செடி புட்டா சேலைகள், சில்க் காட்டன் சேலைகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. சுங்குடி சேலைகள் பெண்களை கவரும் விதத்தில் பல்வேறு வண்ணங்கள், டிசைன்களில் உள்ளது. செடி புட்டா சேலைகள் செடிகள் போன்ற டிசைன்களில் உருவாக்கப்படுவதால் இந்த பெயர் பெற்றது.இந்த சேலைகள் அனைத்தும் 850 ரூபாய் முதல் அதிக பட்சமாக 1450 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோரா காட்டன் சேலைகள்


திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்ட நெசவாளர்களால் தயாரிக்கப்படும் கோரா பட்டு, கோரா காட்டன் சேலைகள் பல வண்ணங்களில், புதுப்புது டிசைன்களில் கிடைக்கிறது. இந்த பளபளக்கும் சேலைகள் கைத்தறியில் நெசவு என்பதால் எளிதில் சலவை செய்யவும் முடியும். இதில் உள்ள அனைத்து ரகங்களும் 2 ஆயிரம் முதல் அதிகபட்சம் 9 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


சென்னிமலை போர்வை


ஈரோடு மாவட்டம் சென்னிமலைப்பகுதியில் தயாரிக்கப்பட்ட பெட்ஷீட்,படுக்கை விரிப்பு துண்டு, சால்வை, தலையணை உறை, டர்க்கி துண்டுகள் உள்ளன.இந்த தயாரிப்புகளுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விற்பனை நிலையங்கள் உள்ளன. கேரள மாநிலத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது. மெகா படுக்கை விரிப்புகள் 8 அடி அகலத்திலும், 9 அடி நீளத்திலும் உள்ளது. 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


கடலுார் வேட்டி துண்டுகள்

சேலம் கைத்தறி வேட்டிகள், மதுரை கைத்தறி லுங்கிகள், சட்டைகள், கடலுார் குறிஞ்சிப்பாடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் லுங்கிகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்தது 400 முதல் 590 ரூபாய் வரை வேட்டிகள், லுங்கிகள் 210 முதல் 300 வரையும், துண்டுகள் 65 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.


காஞ்சிபுரம் பட்டு சேலைகள்


திருமண முகூர்த்தத்திற்கான பட்டுப்புடவை பல்வேறு வண்ணங்களில், டிசைன்களில் விற்பனைக்கு உள்ளன. இதில் டபுள் சைடு புடவைகளில் ஜாக்கெட்களுக்கான துணியும் இணைந்துள்ளது. சிங்கிள் சைடு புடவையில் ஜாக்கெட் துணி இல்லை. ஜக்கார்டு டைப், பட்டு செல்ப், பேன்சி ரகங்கள் உள்ளன. இவை அனைத்து 3 இழைப்பட்டுகளால் தயாரிக்கப்படுகிறது. இதில் வெள்ளி ஜரிகையில் தங்கமுலாம் பூசப்பட்டு தயாரிக்கப் படுகிறது. தேவையான டிசைன்களில் ஆர்டராக புக்கிங் செய்தால் 3 மாதத்திற்குள் தயாரித்து வழங்குகின்றனர். இந்த பட்டுப்புடவைகள் அனைத்தும் எடை அதிகமாகவும் ஒரிஜினல் ஜரிகையுடன் தயாரிக்கப்படுகிறது.


திருபுவனம் பட்டுதிருபுவனத்தில் தயார் செய்யப்படும் பட்டு ரகங்களான ஜங்களா, கல்யாணபட்டு, கலர் ஜங்களா, சாமுத்திரிகா பட்டு, எலக்ட்ரானிக் ஜக்கார்டு பட்டு சேலை ரகங்கள் உள்ளன. இவை அனைத்தும் அசல் பட்டு துாய வெள்ளி ஜரிகையால் தயாரிக்கப்படுகின்றன. பல வண்ணங்களில், பல டிசைன்களில் கிடைக்கிறது. திருமணத்திற்கு தேவையான பட்டுப்புடவைகளை ஆர்டர் புக்கிங் செய்தால் 2 மாதங்களில் தயாரித்து வழங்குகின்றனர். திருபுவனம் பட்டுச் சேலைகள் மிக நைஸ் ஆக இருப்பதால் பெண்கள் விரும்பி அணிகின்றனர். 40 கிராம் வெள்ளிக்கு 0.5 கிராம் தங்கம் முலாம் பூசப்பட்ட ஜரிகைகள் இருக்கும். இதன் தரம் அறிய 25 லட்சம் ரூபாயில் இயந்திரங்கள் உள்ளன.குறைந்த பட்சம் 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை புடவைகள் விற்பனைக்கு உள்ளன.


ஆரணி பட்டுஎடை குறைவாக இருக்கும் ஆரணி பட்டு சேலைகள் ஒன் சைடு பார்டர் திரட் ஒர்க், பிளைன் டிசைன் சேலைகள் உள்ளன. பிளைன் சேலைகளில் தேவையான படங்கள் பிரிண்டிங் செய்து கொள்ளலாம். எம்ராய்டரிங் வேலைகள் செய்து இந்த சேலையை பயன்படுத்த முடியும். குறைந்த பட்சம் 3600 முதல் அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரை சேலைகள் உள்ளன. சேலம் பட்டு வேட்டிகள், கல்யாண செட் என மாப்பிள்ளைக்கு தேவையான பட்டு வேட்டி, துண்டு, பெண்ணுக்கு தேவையான பட்டுப்புடவை என அனைத்தும் ஒரே இடத்தில் தேர்வு செய்து கொள்ளலாம்.


காட்டன் புடவைகள்

கோவை, திண்டுக்கல், பரமக்குடி பகுதிகளில் உள்ள காட்டன் சேலைகளில் பிளர் புட்டா, மீனா புட்டா, பம்பர் காட்டன், கட்டம் போட்ட சேலைகள் விற்பனைக்குள்ளன. பாரதியார், பிரதமர் மோடி , முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி படங்கள் டிசைன்களில் சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நெகமம் சேலை, காஞ்சி காட்டன் சேலை ரகங்களும் உள்ளன. குறைந்த பட்சம் 750 முதல் அதிகபட்சமாக 2500 ரூபாய் வரை சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.


குறைந்த விலையில் விற்பனை

இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்தும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதன் காரணமாக குறைந்த விலையில் மக்களுக்கு சேலை, வேட்டி, துண்டு, போர்வைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.

தமிழகத்தில் தலை சிறந்த கைத்தறி ரகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த விற்பனை மையம் தமிழகத்தில் முதன் முறையாக தொடங்கப் பட்டுள்ளது.காரைக்குடிக்கு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். அவர்களுக்கு கைத்தறி அனைத்து ரகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் அதிகளவில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இது போன்று மாவட்டம் தோறும் விற்பனை மையங்களை உருவாக்கினால் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், அவர்கள் உற்பத்தியை சந்தைப்படுத்தினால் நெசவாளர்கள் குடும்பங்கள் பாதிப்பில் இருந்து மீளும். நமது பாரம்பரிய நெசவு தொழிலும் பாதுகாக்கப்படும்.எஸ்.பழனியப்பன்ராஜிவ் காந்தி கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X