ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று மேலும் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம், 2017ம் ஆண்டு, ஏப்., 24ம் தேதி நடந்தது. காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். சம்பவத்தின் போது, 6 பேர் கும்பல் கூடலூர் வழியாக கேரளாவுக்கு தப்பினர். அதில், சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோர் இருந்துள்ளனர். இவ்வழக்கில், இருவரும் ஜாமினில் உள்ளனர். நேற்று, இருவரிடம், ஊட்டி பழைய எஸ்.பி., அலுவலகத்தில் நீலகிரி எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தலைமையில், தனிப்படை போலீசார், 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கில், இன்று ஜாமினில் உள்ள, சதீஷன், பிஜின் குட்டி ஆகியோரிடமும் ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை குழு, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

கால அவகாசம்!
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, இவ்வழக்கில் கூடுதல் தகவல் பெற அரசு சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் தாக்கல் செய்த மனுவை அடுத்து, ஊட்டி செஷன்ஸ் கோர்ட் நான்கு வார கால அவகாசம் அளித்து வழக்கை, அக்., 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. போலீசார், விசாரணைக்கு தேவைப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி மறு விசாரணையை ஆக., 17ம் தேதி முதல் நடத்தி வருகின்றனர். இது வரை, 31 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இதில், முக்கிய சாட்சியான கிருஷ்ணதாபாவிடம் விசாரணை நடத்த அழைத்து வர உள்ளோம். கடந்த முறை அவரை அழைத்து வந்து, இங்கு ஒரு மாதம் தங்க வைத்ததற்கு 8 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இதுவே போலீசாருக்கு பெரும் தலைவலி. இத்தொகையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து போலீசாருக்கு தலைவலியாக உள்ளது.
இந்நிலையில், மீண்டும் நேபாளம் சென்று அவர் எங்கு வசிக்கிறார் என்பது குறித்து தேடி அழைத்து வர சிரமமாக உள்ளது. இது போன்ற பல்வேறு சிரமங்களால், மறு விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கேட்க உள்ளோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE