சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கட்சியினருக்கு பதவி வழங்க ஸ்டாலின் உறுதி!

Added : செப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கட்சியினருக்கு பதவி வழங்க ஸ்டாலின் உறுதி!''குருநாதர் தந்த பேனாவுல கையெழுத்து போட்டிருக்காரு வே...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அந்த குரு - சிஷ்யன்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தி.மு.க.,வுல ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் சமீபத்துல மனு தாக்கல் செஞ்சாருல்லா... இவர்,

டீ கடை பெஞ்ச்


கட்சியினருக்கு பதவி வழங்க ஸ்டாலின் உறுதி!



''குருநாதர் தந்த பேனாவுல கையெழுத்து போட்டிருக்காரு வே...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாருங்க அந்த குரு - சிஷ்யன்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தி.மு.க.,வுல ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் சமீபத்துல மனு தாக்கல் செஞ்சாருல்லா... இவர், அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் மறைந்த அன்பழகனின் தீவிர ஆதரவாளரா இருந்தாரு வே...

''அன்பழகன் மறைவுக்கு பிறகு அவரது மகன் அன்புசெல்வன், தன் அப்பா பயன்படுத்திய பேனாவை, ராஜேஷ்குமாருக்கு நினைவுப் பரிசா குடுத்தாரு... அதை பத்திரமா வச்சிருந்தவர், மனு தாக்கல் செய்தப்ப, அந்த பேனாவால தான் கையெழுத்து போட்டாரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''சுப்ரீம் கோர்ட் உத்தரவெல்லாம் காத்துல பறந்துடுத்து ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''பெரிய தப்பாச்சே... விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''தேசிய, மாநில நெடுஞ்சாலைகள்ல இருக்கற மதுக்கடைகளால விபத்துகள் அதிகம் நடக்கறதா புகார்கள் எழுந்தன... அதனால, நெடுஞ்சாலைகள்ல இருந்து 500 மீட்டர் தள்ளி தான் மதுக்கடைகள் இருக்கணும்னு, சில வருஷங்களுக்கு முன்னால, உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டுதோல்லியோ...

''இந்த உத்தரவு வந்ததும், நெடுஞ்சாலைகள்ல இருந்த மதுக் கடைகளை எல்லாம் மூடினா ஓய்... ஆனா, இப்ப நிலைமைமாறிடுத்து...

''உதாரணமா, சேலம் மாவட்டம், சங்ககிரி - ஈரோடு மாநில நெடுஞ்சாலையில, சங்ககிரி நகர்ல, 100 மீட்டர் துாரத்துலயே மூணு டாஸ்மாக் கடைகள் இருக்கு... இந்த கடைகளுக்கு பக்கத்துல குடியிருப்புகளும் இருக்கு ஓய்...

''இந்தக் கடைகளை தாண்டி தான் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் எல்லாம் தினமும் போயிட்டு வரா... ஆனா, சுப்ரீம் கோர்ட் உத்தரவு மீறப்பட்டிருக்கறதை யாருமே கண்டுக்கலை ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''பதவிகள் தேடி வரும்னு வாக்குறுதி தந்திருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''எந்தக் கட்சியினருக்கு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமா, முதல்வர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளிடம் சமீபத்துல ஆலோசனை நடத்துனாரு... மாவட்ட வாரியா நிர்வாகிகளை அழைச்சு அறிவாலயத்துல பேசியிருக்காருங்க...

''அப்ப, பல நிர்வாகிகளும், 'நாலு மாத ஆட்சியை மக்கள் ரொம்பவே பாராட்டுறாங்க... ஆனா, தேர்தல்ல கடுமையா உழைச்ச கட்சியினர் தான் கொஞ்சம் அதிருப்தியில இருக்காங்க... பலனை எதிர்பார்க்காம கட்சி பணி செய்றவங்களுக்கு ஏதாவது செய்யணும்'னு சொல்லியிருக்காங்க...

''அதைக் கேட்ட ஸ்டாலின், 'உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சதும், கட்சியினருக்கு பதவிகள் தேடி வரும்'னு சொல்லி, அவங்களை உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''அது சரி... கடமையை செய்துட்டு, கை மேல பலனை எதிர்பார்க்கறது, இன்னிக்கு அரசியல்ல சகஜம் தானே ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-செப்-202115:36:15 IST Report Abuse
D.Ambujavalli உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போடும் எந்த உத்தரவை, எந்த அரசு பின்பற்றியிருக்கிறது? டாஸ்மாக் மூலம் மாமூல் சரியாக வந்துவிட்டால் கோயில், பள்ளி வளாகத்துக்குள் கூட 'ஆறு ஓடும்'
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X