புதுடில்லி :போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் அடுத்த வாரம், இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம்கூறியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த, 'பெகாசஸ்' நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக உலகெங்கும் 5,000க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களும் அதில் அடங்குவர்.'இந்த ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து
உள்ளனர்.
விசாரிக்க தயார்
பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதா; குறிப்பிட்ட சிலரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்பதில் சட்ட விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டதா என்பது குறித்து பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது.ஆனால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை இருப்பதாக கூறி, இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு மறுத்துள்ளது. அதே நேரத்தில் நிபுணர் குழுவை அமைத்து விசாரிக்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தன் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அப்போது அடுத்த சில நாட்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அமர்வு கூறியிருந்தது.இந்நிலையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு மற்றொரு வழக்கை நேற்று விசாரித்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங்கிடம், நீதிபதிகள் கூறியதாவது: போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி சிலருடன் பேசியுள்ளோம். தனிப்பட்ட காரணங்களால் சிலர் மறுத்துள்ளனர். அதனால் தான், கடந்த வாரமே இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியவில்லை.
புதிய திருப்பம்
வரும் வாரத்துக்குள் நிபுணர் குழு குறித்து முடிவு எடுக்கப்பட்டு விடும். அதனால் அடுத்த வாரத்தில் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்.மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், கடந்த சில நாட்களாக நீதிமன்றத்துக்கு வரவில்லை. அதனால் அவரிடம் இது குறித்து தெரிவிக்க முடியவில்லை. நீங்களே அவருக்கு தெரிவித்து விடுங்கள்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றமே அமைக்க உள்ளதால் இந்த பிரச்னையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் வரவேற்பு
காங்., செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: போன் ஒட்டு கேட்பது என்பது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானதல்ல. நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் சுதந்திரத்துக்கு எதிராக மோடி அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் இது. இந்த விவகாரத்தை விசாரிக்க நிபுணர் குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கக் கூடியது.
உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முழுமையாக விசாரிப்பதே இந்தப் பிரச்னைக்கு உள்ள ஒரே தீர்வு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மற்றொரு செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே கூறியுள்ளதாவது:இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்துவதே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும். எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமல்லாமல் அரசியல் சாசன பொறுப்பில் உள்ளவர்களின் போன்களையும் ஒட்டு கேட்டுள்ளனர். பெகாசஸ் நிறுவனத்தைவிட நம் நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE