புதுடில்லி :'பி.எம்., கேர்ஸ்' மத்திய அரசின் நிதி அல்ல. அதில் வசூலிக்கப்படும் தொகை, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு செல்வது இல்லை' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டில்லியைச் சேர்ந்த சாம்யக் கங்க்வால் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
என்ன பிரச்னை
அதன் விபரம்:கொரோனா தொற்று பரவலின் போது பொது சுகாதார அவசர தேவைகளுக்காகவும், பொது மக்களின் மருத்துவ நல திட்டங்களுக்காகவும், 'பி.எம்., கேர்ஸ்' நிதி என்ற அறக்கட்டளையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மார்ச்சில் துவக்கினார். பிரதமர், ராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்டோர் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக உள்ளனர்.இந்த அறக்கட்டளையை மத்திய அரசின் உயர் அதிகாரிகள் நிர்வகிப்பதன் வாயிலாக இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவது தெளிவாகிறது.எனவே அறக்கட்டளை வெளிப்படை தன்மையுடன் இயங்க வேண்டும். பி.எம்., கேர்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்படும் நன்கொடை தொடர் பான விபரங்கள், செலவுகள் உள்ளிட்டவை அவ்வப் போது தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.இது தொடர்பாக பதில் அளிக்கும்படி பி.எம்., கேர்ஸ் அறக்கட்டளைக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பி.எம்., கேர்ஸ் சார்பில், அதன் கவுரவ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள, பிரதமர் அலுவலக சார்பு செயலர் பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா பதில் மனு தாக்கல் செய்தார்.
அதன் விபரம்:பி.எம்., கேர்ஸ் நிதி வெளிப்படை தன்மையுடன் இயங்க வேண்டும் என்பதில் மனுதாரருக்கு அக்கறை இருப்பதாக கூறுகிறார். அப்படி இருக்கையில் அது அரசியலமைப்பின் கீழ் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருப்பதும், தனி அமைப்பாக செயல்படுவதிலும் மனுதாரருக்கு என்ன பிரச்னை என புரியவில்லை.
பி.எம்., கேர்ஸ் நிதிக்கு பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் 'ஆன்லைன்' வாயிலாகவும், காசோலை கள் மற்றும் வரைவோலைகளாக மட்டுமே பெறப்படுகின்றன.அவை பட்டைய கணக்காளர் உதவியுடன் தணிக்கை செய்யப்பட்டு இணையதளத்தில் வரவு - செலவு கணக்குகள் முறையாக தாக்கல் செய்யப்படுகின்றன.
கவுரவப் பொறுப்பு
இந்த அறக்கட்டளையின் நிதி, இந்திய அரசின் நிதி அல்ல. இதில் வசூலிக்கப்படும் தொகை, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு செல்வது இல்லை.பார்லிமென்ட் அல்லது மாநில சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினாலோ, அரசியலமைப்பு விதிகளின்படியோ இந்த அறக்கட்டளை நிறுவப்படவில்லை. இது மற்ற அறக்கட்டளை களை போன்றதொரு தொண்டு நிறுவனம்.மத்திய அரசு அதிகாரியாக இருப்பினும், கவுரவப் பொறுப்பாக இப்பணியை செய்து வருகிறேன்.இவ்வாறு பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE