தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ., சதித் திட்டம் | Dinamalar

தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ., சதித் திட்டம்

Added : செப் 23, 2021
Share
புதுடில்லி:பண்டிகை காலத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கர தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாக நம் உளவுத்துறை எச்சரித்துள்ளது.டில்லி சிறப்பு பிரிவு போலீசார், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சமீபத்தில் நடத்திய அதிரடி சோதனையின் போது, ஆறு பயங்கரவாதிகளை கைது செய்தனர்.அவர்கள் ஜான் முகமது ஷேக், ஒசாமா, மூல்சந்த், ஸீஷான் குவாமர்,

புதுடில்லி:பண்டிகை காலத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கர தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாக நம் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

டில்லி சிறப்பு பிரிவு போலீசார், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சமீபத்தில் நடத்திய அதிரடி சோதனையின் போது, ஆறு பயங்கரவாதிகளை கைது செய்தனர்.அவர்கள் ஜான் முகமது ஷேக், ஒசாமா, மூல்சந்த், ஸீஷான் குவாமர், முகமது அபூபக்கர், முகமது அமிர் ஜாவேத் என்பது தெரிய வந்தது.இதில், ஒசாமா மற்றும் குவாமர் ஆகியோர் சமீபத்தில் பாகிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ.,யிடம் பயிற்சி பெற்றுள்ளனர். வெடி பொருட்களை கையாள்வது, ஏகே - 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையே நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதால், மக்கள் கூட்டம் அதிகம் கூடும் பகுதிகளில் பயங்கர தாக்குதல்கள் நடத்த, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாக நம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சக்தி வாய்ந்த 'டிபன் பாக்ஸ்' வெடிகுண்டுகளை வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.


பஞ்சாபில் மூவர் கைது

பஞ்சாப் மாநிலத்தின் பாக்., எல்லை அருகே உள்ள கிராமத்தில் கையெறி குண்டுகள், சக்தி வாய்ந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு உள்ளிட்டவற்றை போலீசார் சமீபத்தில் கைப்பற்றினர்; கபூர்தலா பகுதியிலும் டிபன் பாக்ஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பஞ்சாபில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், டார்ன் டரான் மாவட்டத்தின் பகவான்புரா கிராமத்தில் கார் ஒன்றை மடக்கி, போலீசார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். அதில் துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.காரில் இருந்த கமல்ப்ரீத் சிங் மன், குல்வீந்தர் சிங், கன்வர் பால் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X