மும்பை:மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, இரண்டு சிறுவர்கள் உட்பட 29 பேர் கடந்த ஒன்பது மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, டோம்பிவிலியில் உள்ள மன்படா போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.அதில், தான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த 29 நபர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக தெரிவித்தார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், 23 பேரை கைது செய்தனர்; அதில் இருவர் சிறுவர்கள். இந்த வழக்கு குறித்து, கூடுதல் கமிஷனர் தத்தாத்ரே கராலே கூறியதாவது: பாதிக்கப்பட்ட சிறுமியின் நண்பர் ஒருவர், ஜனவரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்; அதை, 'வீடியோ'வாக மொபைல் போனில் பதிவு செய்துள்ளார்.அதை, அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு நபர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டியே, 29 பேர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கடந்த ஒன்பது மாதங்களாக பலமுறை அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் உள்ள சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மற்றவர்கள் விரைவில் பிடிபடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE