அமெரிக்க தொழிலதிபர்களுடன் மோடி சந்திப்பு: இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு| Dinamalar

அமெரிக்க தொழிலதிபர்களுடன் மோடி சந்திப்பு: இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (15)
Share
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு முன்னணி தொழிலதிபர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.நான்கு நாள் பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற பிரதமர் மோடி, நேற்று அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களை

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு முன்னணி தொழிலதிபர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.latest tamil news


நான்கு நாள் பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற பிரதமர் மோடி, நேற்று அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களை நேற்று சந்தித்து பேசினார். 'குவால்காம், அடோப், பர்ஸ்ட் சோலார், ஜெனரல் அடாமிக்ஸ், பிளாக்ஸ்டோன்' ஆகிய நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.அடோப் தலைமை செயல் அதிகாரி ஷாந்தனு நாராயணிடம், இந்தியாவில் குவிந்துள்ள பொருளாதார வாய்ப்புகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இந்தியாவுடனான அடோப் நிறுவனத்தின் தற்போதைய கூட்டு மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தியாவின் முன்னணி திட்டமான டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.

தொடர்ந்து 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விவேக் லாலை பிரதமர் மோடி சந்தித்தார்.அமெரிக்காவிடமிருந்து 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு 30 ட்ரோன்களை வாங்க இந்தியா விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதன்பின் குவால்காம் நிறுவன தலைமை நிர்வாகி கிறிஸ்டியானோ அமோனுடன் பிரதமர் பேசினார். இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் மின்னணு துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். மின்னணு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் இந்திய செமி கண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை, அவர்கள் விவாதித்தனர்.

இதையடுத்து பர்ஸ்ட் சோலார் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மரை பிரதமர் சந்தித்தார். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, குறிப்பாக சூரிய சக்தி சாத்தியக்கூறுகள் மற்றும் 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து 450 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை எட்டுவதற்கான இந்தியாவின் இலக்கு குறித்து இருவரும் பேசினர். சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் பிரத்யேக மெல்லிய சுருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தயாரிப்பு வசதிகளை நிறுவுவது குறித்தும், சர்வதேச விநியோக சங்கிலிகளில் இந்தியாவை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


latest tamil newsஉலகின் பிரபலமான முதலீட்டு நிறுவனமான பிளாக் ஸ்டோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் வார்சனை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள துறைகளை தெரிவித்தார்.

தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடியின் சந்திப்பு பற்றி பிரதமர் அலுவலகம் 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:பிரதமர் மோடி உடனான அமெரிக்க தொழில் அதிபர்களின் சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது. இந்தியாவில் தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகளை பிரதமர் மோடி அவர்களிடம் எடுத்துரைத்தார். இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


பயணத்திலும் கோப்புகளை பார்வையிட்ட மோடி


'குவாட்' மாநாடு, ஐ.நா., பொதுச் சபை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க, அமெரிக்காவுக்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். 'டுவிட்டரில்' அவர் நேற்று காலை வெளியிட்ட பதிவில், 'மிக நீண்ட பயணத்தை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் இணைத்திருந்தார். அதில், விமான பயணத்தில் அரசு கோப்புகளை அவர் பார்வையிடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இதை பாராட்டி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட பதிவில், 'பிரதமர் மோடி எப்போதும், தேசத்துக்கும், மக்களுக்கும் பணியாற்றுவதையே நோக்கமாக கொண்டுள்ளார்' என கூறியிருந்தார். பா.ஜ., மூத்த தலைவர் கபில் மிஸ்ரா, விமான பயணத்தின் போது முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி, கோப்புகளை பார்வையிட்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'இரண்டு தலைவர்களுக்கும் தேசமே உயிர் மூச்சு' என கூறியிருந்தார்.


இந்தியர்கள் உற்சாக வரவேற்பு


டில்லியில் இருந்து அமெரிக்காவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட பிரதமர் மோடி, வாஷிங்டன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் மழை துாறியதால், குடை பிடித்தபடி விமானத்திலிருந்து பிரதமர் இறங்கினார்.அமெரிக்க அரசு உயர் அதிகாரி டி.எச்.பிரையன் மெக்கீன், அமெரிக்க நிர்வாகத்துறை இணை அமைச்சர் ஆண்ட்ரூஸ், அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்களும் பெருந்திரளாக கூடி, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து காரில் பயணித்த பிரதமர் மோடி, அங்கு திரண்டிருந்த இந்தியர்களை பார்த்ததும், பாதுகாப்பு வளையத்தை மீறி வாகனத்திலிருந்து இறங்கி வந்து அவர்களிடம் கைகளை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X