பொது செய்தி

தமிழ்நாடு

தலை வெட்டி கொலை சம்பவங்கள்: கொடூர பின்னணியில் இளம் வயதினர்

Added : செப் 24, 2021
Share
Advertisement
தமிழகத்தில், தற்போது தலையை வெட்டி கொலை செய்யப்படும் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன.திருநெல்வேலியில் கடந்த வாரம் அடுத்தடுத்து மூன்று கொலைகள் நடந்தன. பழிக்கு பழியாக நடந்தவை என்றாலும், தலையை வெட்டி கொலை செய்துள்ளனர்.திண்டுக்கல் நந்தவனப்பட்டியில், பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக, நிர்மலா தேவி என்ற மூதாட்டி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில், தற்போது தலையை வெட்டி கொலை செய்யப்படும் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன.திருநெல்வேலியில் கடந்த வாரம் அடுத்தடுத்து மூன்று கொலைகள் நடந்தன. பழிக்கு பழியாக நடந்தவை என்றாலும், தலையை வெட்டி கொலை செய்துள்ளனர்.திண்டுக்கல் நந்தவனப்பட்டியில், பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக, நிர்மலா தேவி என்ற மூதாட்டி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு சில நாட்களுக்கு முன், ரவுடி ஒருவரின் மனைவி தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்.இந்த கொலைகளை நிகழ்த்தியவர்களில், 13 -- 17 வயதுக்கு உட்பட்டவர்களும் உண்டு. படிக்கும் வயதில் அரிவாள் துாக்க வேண்டிய நிலைக்கு, அவர்கள் ஏன் தள்ளப்பட்டனர் என்பது, பெரும் கேள்விக்குறியாக உள்ளது.தென் மாவட்டங்களில், பல ஆண்டு காலம் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய, முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா பாதிப்பு குறைந்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'கிராம உதயம்' என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.அப்போது, மூன்று மாவட்டங்களிலும், 1,800 மாணவ - மாணவியர் பள்ளிகளுக்கு வராதது தெரியவந்தது. அந்த 1,800 பேர் வீடுகளை தேடி சென்ற ஆய்வு குழுவினர், அவர்கள் ஏன் பள்ளிகளுக்கு வரவில்லை என்று குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர். அப்போது, கொரோனாவால் மொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த, அந்த மாணவ - மாணவியர், கூலி வேலைக்கு போவது தெரியவந்தது.இதில், மாணவியர் 55 சதவீதம், மாணவர்கள் 45 சதவீதம். இவர்களுக்கு வாரம்தோறும், 1,000 முதல் 1,500 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. இந்த தொகையில் பாதியை குடும்பத்துக்கு கொடுத்து விடுகின்றனர். அதனால், குடும்பத்தினரும் சந்தோஷம் அடைந்துள்ளனர்.அதேநேரத்தில், மாணவ - மாணவியரின் எதிர்காலம் குறித்த சிந்தனை யாரிடமும் இல்லை. பாதியில் படிப்பை விட்டு விட்டு வேலைக்கு போன மாணவர்கள், குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்களுக்கு பல தவறான பழக்கங்களும் ஏற்பட்டுள்ளன.மொபைல் போன் பயன்படுத்துவதன் வாயிலாக, பல்வேறு சமூக ஊடகங்களின் ஜாதி, மத துாண்டல்களுக்கு ஆளாகியுள்ளனர். போதை பொருளுக்கும் அடிமையாகி விட்டனர். பெண்களும் இப்படி வழி தவறி செல்லும் இக்கட்டுக்கு ஆளாகி உள்ளனர்.மேலும் படிப்பை கைவிட்ட மாணவர்களில் பலர், கூலிப்படையினரிடம் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது. கூலிப்படையை ஏவி கொலை செய்பவர்கள், உள்ளூர் கூலிப்படையினரை நாடுவதில்லை. தென் மாவட்ட ரவுடிகள் மற்றும் கூலிக்கு கொலை செய்வோரை அழைத்து வந்து, வட மாவட்டங்களில் கொலை, கொள்ளைகளை அரங்கேற்றுகின்றனர்.அதேபோல, வட மாவட்ட ரவுடிகள், கூலிகளை வைத்து, தென் மாவட்டங்களில் கொலைகள் செய்கின்றனர். தமிழகம் முழுதும் சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரிக்க இதுவே முக்கிய காரணம்.கடந்த காலங்களில், தென் மாவட்டங்களில் கலவரங்கள் நிகழ்ந்த போது, உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி மறைந்த ரத்னவேல் பாண்டியன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.அவர் தீவிரமாக விசாரித்து, 'படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. அதனால், ஜாதி பிரச்னைகளுக்கு ஆட்பட்டு, கொலை, கொள்ளை, மோதல்களில் ஈடுபடுகின்றனர். இப்படி தான் கலவரங்கள் மூளுகின்றன. தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்' என்று அரசுக்கு அறிக்கை கொடுத்தார். இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.முன்பெல்லாம் குற்றச் சம்பவங்கள் நடக்க உள்ளது பற்றி, உளவுத்துறை வாயிலாக தகவல் கிடைத்தால், கலெக்டர், எஸ்.பி., ஆலோசனை நடத்தி, மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலையாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பர். தற்போது, அப்படி எந்த நிகழ்வும் நடப்பது இல்லை. அதனால், எந்த ஒரு சமூக விரோத சம்பவமும், திட்டமிடப்படும் சூழலிலேயே கிள்ளி எறியப்படாமல், பூதாகரமாக வெடித்து கிளம்புகிறது.இவ்வாறு அவர் கூறினார்.கிடப்பில் அரசு உத்தரவு!தென் மாவட்டங்களில் மூன்று இனத்தவர் இடையே தான் மோதல் வெடித்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, 20 ஆண்டுகளுக்கு முன், 'தென் மாவட்ட உயர் பதவிகளுக்கு, இந்த மூன்று இனத்தை சேர்ந்தவர்களை நியமிக்க கூடாது' என்று அரசு ஒரு உத்தரவு போட்டது. அந்த உத்தரவு தற்போது பின்பற்றப்படுவதில்லை.உளவுத்துறையில் இப்போது முக்கிய பொறுப்பில் இருக்கும் மூன்று மாவட்ட அலுவலர்களும், அந்த மூன்று இனத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் தன் இனத்தை சேர்ந்த ஒருவர், சட்ட விரோதமாக நடந்து கொண்டாலும், அதுபற்றிய தகவலை மேலிடத்துக்கு சொல்வதில்லை. எனவே, சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் அரசின் இந்த உத்தரவை, தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர் - நமது நிருபர் --.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X