கோவை:கோவை சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் இறங்குவதற்கான துாரத்தை குறைக்க புதிய தொழில்நுட்பத்தை புகுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோவை சர்வதேச விமான நிலையத்தில், டில்லி இந்திய விமான நிலைய ஆணையத்தின், விமான நடைமுறைகள் துறை சார்பில், விமான நிறுவனங்கள், அனைத்து பங்குதாரர்கள், விமானிகள், விமான போக்குவரத்து பொது இயக்குனரகம், சூலுார் இந்திய விமானப்படை உடனான ஆலோசனை கூட்டம்நடந்தது.விமான நிலையத்தில் ஏற்படுத்த வேண்டிய புதிய தொழில்நுட்பங்கள், அதற்கான நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:டில்லியில் உள்ள, இந்திய விமான நிலைய ஆணையத்தின் விமான நடைமுறைகள் துறை, கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு தேவையான வழிசெலுத்தல் செயல்திறன் (ஆ.என்.பி.,) அணுகுமுறைகளை வடிவமைத்து வழங்குகிறது. ஆர்.என்.பி., நடைமுறை தற்போதுள்ள கருவிகளை விட மிகவும் துல்லியமானது என்பதால், விமானங்கள் குறிப்பிட்ட பாதையில் எவ்வித இடரும் இன்றி துல்லியமாக பயணிக்க உதவும். ஆனால், பிற கருவிகளை பயன்படுத்தும் போது, தரைத்தளத்திலிருந்து விமானத்தை இயக்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.ஆர்.என்.பி., அணுகுமுறைகள், தரையிறங்கும் விமானங்களுக்கு குறைந்த தெரிவுநிலை (விசிபிளிட்டி) தேவைகளை வழங்குகிறது. விமானங்கள் இறங்குவதற்கான சாய்வு விகிதத்தை குறைக்க இது பெரிதும் உதவும். விமானம் இறங்குவதற்கு தேவையான நீளத்தை குறைப்பதிலும் இது பயன்படுகிறது.இதன் வாயிலாக விமானங்கள் இறங்க தற்போது தேவையான, 2,100 மீட்டர் துாரம், 900 மீட்டராக குறையும். இதனால், எரிபொருள் சேமிப்பு அதிகரிக்கும். தேவைகளை பொருத்து ஆர்.என்.பி., நடைமுறைகள் விமானங்களில் பரிசோதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இதுகுறித்து அனைத்து தரப்பினருக்கும் விளக்கப்பட்டது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.டில்லி இந்திய விமான நிலைய ஆணையத்தின், விமான நடைமுறைகள் துறை இணை பொதுமேலாளர் மொகந்தி ஆர்.என்.பி., நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE