புதுச்சேரி-'ஜி.எஸ்.டி. வருமான இழப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துத் தர வேண்டும் என்ற புதுச்சேரி அரசின் கோரிக்கை சரியானது' என, முன்னாள் எம்.பி., ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரிக்கான ஜி.எஸ்.டி., வருமான இழப்பை இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற புதுச்சேரி அரசின் கோரிக்கை சரியானது. ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட போது, மாநில வரி வருவாய்க்கு ஏற்படும் இழப்பை ஜூலை 2022 வரை மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தது.இந்த வாக்குறுதி அடுத்த ஆண்டு ஜூலையில் முடிந்து விடும் என்பதால், புதுச்சேரியின் ஜி.எஸ்.டி. மொத்த வருவாய் ரூ. 400 கோடியிலிருந்து 500 கோடி வரை குறையும் அபாயம் உள்ளது.இந்த 5 ஆண்டு காலகட்டத்தில் 2 ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக, புதுச்சேரியின் பொருளாதாரம், வரி வருவாய் பெருக்கத்தை குறைத்து விட்டது. மத்திய அரசின் மானியமும், உதவியும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊக்குவிப்பு திட்டங்களுக்கு புதுச்சேரி அரசு 40 சதவீதம் பங்கு அளிக்க வேண்டி உள்ளது. மத்திய நிதிக் குழுவிலோ, உள்துறை நிதிக் குழுவிலோ புதுச்சேரி சேர்க்கப்படாததால் நிதி இழப்பு ஏற்பட்டு, அரசு கடன் வாங்க வேண்டியுள்ளது. இதனால், புதுச்சேரி அரசின் ஆண்டுக் கடன் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், திட்ட வளர்ச்சிக்கான முதலீடு அரசின் கைவசம் இல்லாததால், திட்டங்களை செயல்படுத்தி வேலை வாய்ப்பினை பெருக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.எனவே, மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி இழப்பை 2027ம் ஆண்டு வரை நீட்டித்துத் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE