புதுச்சேரியில் ரூ.300 கோடியில் புதிய சட்டசபை கட்டடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் ரூ.300 கோடியில் புதிய சட்டசபை கட்டடம்

Added : செப் 24, 2021
Share
புதுச்சேரி, செப்.-புதுச்சேரியில் , ரூ.300 கோடியில், ஒருங்கிணைந்த புதிய சட்டசபை கட்டும், முதல்வரின் கனவு திட்டத்தை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், கூடுதல் விபரங்களை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சி காலத்தில் மருத்துவக் கல்லுாரியாக இயங்கி வந்த கட்டடம், கடந்த 1963ம் ஆண்டு முதல் சட்டசபையாக இயங்கி வருகிறது.பழமையான சட்டசபை வளாகத்தில், சட்டசபை

புதுச்சேரி, செப்.-புதுச்சேரியில் , ரூ.300 கோடியில், ஒருங்கிணைந்த புதிய சட்டசபை கட்டும், முதல்வரின் கனவு திட்டத்தை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், கூடுதல் விபரங்களை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சி காலத்தில் மருத்துவக் கல்லுாரியாக இயங்கி வந்த கட்டடம், கடந்த 1963ம் ஆண்டு முதல் சட்டசபையாக இயங்கி வருகிறது.பழமையான சட்டசபை வளாகத்தில், சட்டசபை அரங்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அறை மட்டுமே இருந்தது. நிர்வாகத்திற்காக சட்டசபை கட்டடத்தை சுற்றி, சட்டசபை அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகம், நுாலகம் உள்ளிட்டவை கட்டப்பட்டது.சட்டசபை ஓரிடத்திலும், தலைமை செயலகம் ஓரிடத்தில் இயங்குவதால் நிர்வாக ரீதியாக பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 2008ல், காங்., ஆட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமி, தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை வளாகம் கட்ட திட்டமிட்டார்.இதற்காக தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகே இடம் தேர்வு செய்து, சட்டசபை கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய கட்சி துவங்கி மீண்டும் ஆட்சிக்கு வந்த ரங்கசாமி, தனது கனவு திட்டமான தட்டாஞ்சாவடியில் புதிய சட்டசபை கட்டடம் கட்டும் திட்டத்தை கையில் எடுத்தார்.அப்போது நிதி பற்றாக்குறையால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதன்பிறகு வந்த காங்., அரசு இத்திட்டத்தை கைவிட்டது.இந்நிலையில், தற்போதை என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு புதிய சட்டசபை வளாகம் கட்டும் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்தது.இதுதொடர்பாக, கடந்த ஜூன் மாதம், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய காணொலி கலந்துரையாடலில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம், சட்டசபை கட்டட நிலமையை விளக்கி, தட்டாஞ்சாவடியில் 15 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த சட்டசபை கட்ட ரூ.300 கோடி நிதி உதவி மானியமாக கோரினார்.இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டில்லி சென்றபோது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரை சந்தித்து, புதிய சட்டசபை கட்டடம் கட்ட நிதியை மானியமாக கோரினர்.அதனையேற்று, மத்திய உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், டில்லியை சேர்ந்த இரண்டு கட்டுமான நிறுவனங்கள், புதுச்சேரியில் புதிய சட்டசபை கட்டடம் கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை சமர்பித்தன.அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு, அனைத்து நிர்வாக கட்டடங்களுடன் ஒருங்கிணைந்த சட்டசபை கட்டடம் கட்ட 2021-22 நிதி ஆண்டில் ரூ. 200 கோடியும், 2022-23 நிதி ஆண்டில் ரூ. 100 கோடி என இரு தவணையாக ரூ.300 கோடி நிதி வழங்கிட வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.அதனை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், இத்திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை மற்றும் கூடுதல் விபரங்களை அனுப்பி வைக்குமாறு, மத்திய உள்துறையின் சார்பு செயலர் அனிதா சைனி, புதுச்சேரி தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.இதன் மூலம், முதல்வரின் கனவு திட்டமான ஒருங்கிணைந்த சட்டசபை கட்டடம் கட்டுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X