பழனிசாமி வரவேற்பில் பஞ்சாயத்து அடித்துக் கொண்ட அ.தி.மு.க.,வினர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி வரவேற்பில் 'பஞ்சாயத்து' அடித்துக் கொண்ட அ.தி.மு.க.,வினர்

Added : செப் 25, 2021
Share
சாத்துார்:அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு, சாத்துாரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.,வினர் கோஷ்டியாக பிரிந்து மோதிக் கொண்டனர்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் திருநெல்வேலி, தென்காசியில் நடந்தது.இதில் பங்கேற்க, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி காரில் சென்றார். சாத்துார் வெங்கடாஜலபுரம் விலக்கில், விருதுநகர்
 பழனிசாமி வரவேற்பில் 'பஞ்சாயத்து' அடித்துக் கொண்ட அ.தி.மு.க.,வினர்

சாத்துார்:அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு, சாத்துாரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.,வினர் கோஷ்டியாக பிரிந்து மோதிக் கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் திருநெல்வேலி, தென்காசியில் நடந்தது.இதில் பங்கேற்க, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி காரில் சென்றார். சாத்துார் வெங்கடாஜலபுரம் விலக்கில், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலர் ரவிச்சந்திரன், சாத்துார் கிழக்கு ஒன்றிய செயலர் சண்முக கனி தலைமையில் கட்சியினர் வரவேற்றனர்.

காரில் இருந்தபடி சால்வை, பூங்கொத்துகளை பெற்ற பழனிசாமியிடம், ராமலிங்காபுரம் கிளைச் செயலர் வீரேவு ரெட்டி, ''விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க., தோல்விக்கு காரணமான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஏன் காரில் அழைத்து வருகிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார். இதில் கோபமடைந்த ராஜேந்திர பாலாஜி, காரில் இருந்து இறங்கி, பின்னால் வந்த காரில் இருந்தவர்களிடம், ''இவனை துாக்கி காரில் போடு,'' என கூறி உள்ளார்.

இதன்படி வீரேவு ரெட்டியை தாக்கி காரில் ஏற்ற முயன்றனர்.இதைப் பார்த்த சண்முக கனி, போலீசார் உதவியுடன் வீரேவு ரெட்டியை மீட்டார். ராஜேந்திர பாலாஜி ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் ஆதரவாளர்களும், சண்முக கனி ஆதரவாளர்களும் தாக்கிக் கொண்டனர். போலீசார், கூட்டத்தினரை கலைத்தனர்.

தொடர்ந்து, சாத்துார் நகரச் செயலர் இளங்கோவன், ராஜவர்மனிடம் பேசியதை பார்த்த சண்முக கனி தரப்பினர், 'ராஜவர்மனிடம் ஏன் போகிறாய்?' எனக் கேட்டு, இளங்கோவனை தாக்கினர். இதற்கிடையில் வீரேவு ரெட்டி, தன்னை தாக்கி காரில் ஏற்ற முயன்ற ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது, சாத்துார் டவுன் போலீசில் புகார் செய்தார். ராஜேந்திர பாலாஜி உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X