பொது செய்தி

தமிழ்நாடு

இன்று உலக நுரையீரல் தினம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
செப்டம்பர் 25 உலக நுரையீரல் தினமாக கொண்டாடப்படுகிறது. நுரையீரலைப் பாதுகாக்க புகையிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதே உலக நுரையீரல் தினத்தின் கருப்பொருள்.நாம் மூச்சுக்காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உடல் உறுப்பு நுரையீரல். ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், உத்தேசமாக 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.மொத்த நுரையீரலின் கொள்ளளவு
 இன்று உலக நுரையீரல் தினம்

செப்டம்பர் 25 உலக நுரையீரல் தினமாக கொண்டாடப்படுகிறது. நுரையீரலைப் பாதுகாக்க புகையிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதே உலக நுரையீரல் தினத்தின் கருப்பொருள்.

நாம் மூச்சுக்காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உடல் உறுப்பு நுரையீரல். ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், உத்தேசமாக 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்து கெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர்.


பாதிக்கும் நோய்கள்

நுாற்றுக்கும் மேற்பட்ட நுரையீரலை பாதிக்கும் நோய்கள் இருந்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் நுரையீரல் நோய்கள்:கொரோனா, ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் புற்றுநோய், காசநோய், நுரையீரல் தழும்பு, துாக்கத்தில் மூச்சுத் திணறல், நிமோனியா. கொரோனா எனும் தொற்றே இந்த நுாற்றாண்டின் கொடிய நோய். இக்கிருமி பெருமளவில் நுரையீரலைத் தாக்கி மூச்சுதிணறல், இளைப்பு, காய்ச்சல், உடல்சோர்வு, நிமோனியா போன்றவற்றை உண்டாக்குகிறது.

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும் போதும், பேசும் போதும் வெளிவரும் சளிதுகள்கள் மூலம் காற்றில் பரவி, அது மற்றவர்கள் சுவாசிக்கும் பொழுது மூக்கு, தொண்டை வரை சென்று பாதிப்பை உண்டாக்குகிறது. பின்னர் அது நுரையீரலை தாக்கி பெரும்பாதிப்பை உண்டாக்குகிறது.பின்னர் தீவிர நிமோனியாவாக உருவாகி நுரையீரல் பாதிப்பை உண்டாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

கொரோனா நோய்த் தொற்று தற்பொழுது வரை முழுமையாக நம்மை விட்டு நீங்கவில்லை. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் மிக முக்கியமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் இந்நோயில் இருந்து தப்பலாம்.ஆஸ்துமாபனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு.

வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது.ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, துாசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் துாண்டும்போது ஆஸ்துமா வருகிறது.

குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் போன்றவை ஆஸ்துமாவை வரவேற்பவை. நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் துாண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, தொடர் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் தொல்லை போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது.

இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம்.


தவிர்ப்பது எப்படி


ஆஸ்துமாவை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். துாசு, குப்பை, அழுகிய உணவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டில் தேவையில்லாமல் சாமான்களை அடுக்கி வைக்கக் கூடாது.

சுவர்களில் படங்களைத் தொங்க விடக் கூடாது. இவற்றில் ஒட்டடை சேரும் வாய்ப்பு அதிகம். ஒட்டடை இவர்களுக்குப் பரம எதிரி.படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும். இந்த இரண்டும் சுத்தமில்லாவிட்டால் அதில் 'மைட்' எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும், அவை ஆஸ்துமாவைத் துாண்டும்.இவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும்.

வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி) உருவாவதற்கு முதல் காரணம் புகை பிடிக்கும் பழக்கம்.1.புகை பிடிக்காதவர்களும் புகையை அருகிலிருந்து சுவாசிக்கும் போது மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.2. சமையலறையிலிருந்து கிளம்பும் அடுப்பு புகையினால் நுரையீரலுக்கு பாதிப்பு உண்டாகும்.3. சாம்பிராணி, ஊதுபத்தி, கொசுவர்த்தி மூலம் ஏற்படும் புகையினாலும் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு கொசுவர்த்தி சுருளின் பயன்பாடானது நுாறு சிகரெட் புகைப்பதால் ஏற்படும் புகையினால் உண்டாகும் பாதிப்புக்கு சமமானது.4. வாகனங்கள், தொழிற்சாலை கழிவுகளிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையினாலும், பயோ கேஸ் மூலமாகவும் நுரையீரல் பாதிப்படைகிறது.

மூச்சு திணறல், இருமல், சளி போன்றவை அறிகுறிகள். இந்த நோயில் நுரையீரலுக்குச் செல்லும் மற்றும் நுரையீரலில் இருந்து வெளிச்செல்லும் காற்றின் அளவு மட்டுப்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் குறுகிய சுவாசம் அல்லது சுவாசப் பற்றாக்குறை ஏற்படுகிறது.குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குச் சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டுப் பின்னர் அடுத்த வருடமும் இவ்வாறே ஏற்பட்டால் அந்த நபர்களுக்கு சி.ஓ.பி.டி., பாதிப்பு ஏற்பட்டுள்ளது என புரிந்து கொள்ளலாம்.

நுரையீரல் புற்றுநோய்நாம் வசிக்கும், வேலை செய்யும் இடங்களில் டீசல் வெளியேற்றிய புகையை சுவாசிப்பது, ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையின் கீழ் வசிப்பது போன்ற சூழல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இதைத் தவிர புகைப் பிடிப்பவர்களுக்கும் அப்புகையை அருகே இருந்து சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நுரையீரல் புற்றுநோயின் அறிகுறி தெரிந்தவுடன், ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால், அதை முற்றிலும் குணப்படுத்திவிடலாம்!

தொடர்ச்சியாக தொண்டைவலியோ, உணவை விழுங்கும்போது தீவிர வலியோ ஏற்பட்டால், அது டிஸ்பேகியாவாக இருக்கலாம். டிஸ்பேகியா நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது. இது மிகவும் அபாயமான அறிகுறியும்கூட. புற்றுநோய் தொண்டையிலிருந்து உணவுக்குழாய் வரை பரவும்போது, இதுபோன்ற வலிகள் ஏற்படும். சிலருக்கு மார்பகத்தில் நீண்ட நேரத்துக்கு மிதமான வலி இருக்கும். சிலருக்கு நுரையீரலைச் சுற்றி கூர்மையான வலி அவ்வப்போது ஏற்படும். இதனுடன் சேர்ந்து முதுகு, தோள்பட்டையிலும் வலி உண்டாகும். திடீரென அசாதாரணமான அதிகளவு எடை இழப்பு ஏற்படும்.

பொதுவாகவே உடல் எடை அதிக அளவில் குறைவதென்பது, 'உடல் ஆரோக்கியமாக இல்லை' என்பதைக் குறிக்கும். ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இதுவே முக்கிய அறிகுறி. விசில் சத்தம்நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும் போதும், வெளியேற்றும்போதும் விசில் அடிப்பது போன்ற சத்தத்தை உணர்கிறீர்களா? இதற்கு சுவாசப் பாதையிலுள்ள வீக்கம் அல்லது அடைப்பு காரணமாக வரும் மூச்சுத்திணறலே காரணம். பொதுவாக மாசு, அலர்ஜி, துாசியின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆனால் இதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கு ஓர் அறிகுறியாக இருக்கலாம்.

திடீரென்று குரல் கரகரப்பாக மாறி இருக்கிறதா? உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளியுங்கள். அதைச் செய்த பிறகும் குரல் அப்படியே இருந்தால் மருத்துவரை நாடுங்கள். ஒருவேளை, குரல் வளையில் உள்ள நரம்புகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதற்குத் தகுந்த சிகிச்சை எடுக்கவில்லை என்றால், குரல்வளையை இது குலைத்துவிடும்; குரல் வளத்தையும் பாதித்துவிடும்.

சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பது, சமச்சீரான உணவுகளை உட்கொள்வது, சரியான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவது ஆகியவை நுரையீரல் புற்றுநோயில் இருந்து நம்மைத் விலக்கி வைத்திருக்கும். காச நோய்உலகளவில் காசநோய் பாதிப்புக்குள்ளானோரில் 24 சதவிகிதம் பேர் இந்தியர்கள். தொடர்ந்து இருமல், உடல் எடை குறைதல், மாலைநேரக் காய்ச்சல், பசியின்மை, சளியில் ரத்தம் போன்றவை காசநோய் அறிகுறிகள்.

நோயாளிகள் 6 மாதங்கள் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.இந்தியாவில் 10 லட்சம் பேர் காசநோய் பரிசோதனைக்கு வராமலேயே இருக்கின்றனர். சிகிச்சை மேற்கொள்ளாத நோயாளிகள் ஆண்டுக்கு 10 முதல் 15 நபர்களுக்குக் காசநோயை பரப்புகின்றனர்.காற்றின் வழியாகப் பரவக்கூடிய இந்த நோய் 'மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' என்கிற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

இந்தியாவில் 40 சதவிகித மக்களுக்கு காசநோய் கிருமியின் தொற்று உடலில் இருக்கிறது. ஆனால் அது நோயாக மாறாத உள்ளுறைந்த தொற்றாக இருக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நபர்களைத்தான் காசநோயாளியாக மாற்றும். சர்க்கரை நோயாளிகள், மது, போதை பழக்கம், புகையிலை, புகைப்பழக்கம் உள்ளவர்களை காசநோய் எளிதில் தாக்கும்.நுரையீரலில் உண்டாகும் தழும்பு நோய் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

கொரோனாவால் நுரையீரல் அதிமாக பாதிப்படைந்தவர்களுக்கு இந்த தழும்புகள் ஏற்படுகிறது. கொரோனா நோய் முடிந்த பின்னரும் நுரையீரல் தழும்பு நோயிலிருந்து விடுபட முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சி.டி. ஸ்கேன் பரிசோதனையின் மூலம் நுரையீரலில் தழும்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும்.

உடல்பருமன் உள்ளவர்கள், ஹைபோ தைராய்டு உள்ளவர்களுக்கு துாக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. நிமோனியா என்பது நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய். நெஞ்சக எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், ரத்த பரிசோதனைகள் மூலம் எந்தவகை கிருமியினால் இது உருவாகிறது என்று கண்டறிந்து அதற்கு ஏற்ப ஆண்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த வேண்டும்.

நுரையீரல் பாதுகாப்பு முறைநுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு. வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. எளிதாகச் செரிக்கும் வகையில் உணவு இருக்க வேண்டும். இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேற வாய்ப்பு கிடைக்கும். நீராவி பிடிப்பதும் நல்ல பலன் தரும். காலையில் முறைப்படி மூச்சு பயிற்சி, பிராணாயாமம் செய்வது நல்லது. அல்லது காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சியைச் செய்யலாம்.

பெரிய ரப்பர் பலுானை ஊதிப் பயிற்சி செய்யலாம். சிறிய ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதிப் பயிற்சி செய்யலாம். தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கடைபிடிப்பது அவசியம். நீச்சல் பயிற்சி நுரையீரல் பாதுகாப்புக்கு மிக சிறந்தது.துாய்மையான காற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து வகையான சிரமங்களிலிருந்து தப்பிக்கலாம்.

-டாக்டர் மா. பழனியப்பன்
நுரையீரல் சிறப்பு நிபுணர்மதுரை. 94425 24147

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X