திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 35 அங்கன்வாடி மையங்களும் உணவு பாதுகாப்புத் துறையின் பதிவுச்சான்றிதழ் பெற்றுள்ளதாக, நியமன அலுவலர் சிவராம பாண்டியன் கூறினார்.
உணவு பொருள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் கீழ் உரிமம் மற்றும் பதிவுச் சான்று கட்டாயம் பெற வேண்டும்.ஓட்டல்கள், மளிகை கடைகள், உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள், வணிகம் செய்பவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கு உணவு வழங்கும் ஒவ்வொரு அங்கன்வாடி மையமும் பதிவுச்சான்று பெற்றிருப்பது அவசியம். திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 35 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான உணவு அவசியம். இதை உறுதி செய்ய ஓட்டல்கள், உணவுப் பொருள் தயாரிப்பகங்கள் மட்டுமின்றி அங்கன்வாடி மையங்களுக்கும் 'ஹைஜீன் ரேட்டிங்' சான்றிதழ் வழங்கப்படுகிறது.இச்சான்று பெற அங்கன்வாடி மையத்தில் சமையல் கூடமும், பாத்திரங்களும் துாய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்.
உணவுப் பொருட்கள் தரமாக இருப்பதை ஒவ்வொரு முறையும் சரிபார்க்க வேண்டும். பணியாளர்கள் துாய்மையான ஆடை அணிய வேண்டும்.இவ்விஷயத்தில் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக திண்டுக்கல்லில் 2,035 அங்கன்வாடி மையங்களும் 'பதிவுச்சான்று' பெற்று, புதுப்பித்து வருகின்றன.நியமன அலுவலர் சிவராம பாண்டியன் கூறுகையில், ''பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களும் பதிவுச்சான்று பெற வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணத்தை அரசே செலுத்துகிறது. திண்டுக்கல்லில் 6 அங்கன்வாடி மையங்களுக்கு 'ஹைஜீன் ரேட்டிங்' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE