செய்திகள் சில வரிகளில்... ரோடுகளில் மக்கள் திண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... ரோடுகளில் மக்கள் திண்டாட்டம்

Added : செப் 25, 2021
Share
பொள்ளாச்சி நகரம் முழுவதிலும், பல இடங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக ரோடுகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் பணிகள் நிறைவடைந்தும், தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.கோட்டூர் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடைவீதி, ராஜா மில் ரோடு என, பொள்ளாச்சி நகரம் முழுவதிலும், பார்க்குமிடமெல்லாம் ரோடுகள் சிதிலமடைந்து

பொள்ளாச்சி நகரம் முழுவதிலும், பல இடங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக ரோடுகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் பணிகள் நிறைவடைந்தும், தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.கோட்டூர் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடைவீதி, ராஜா மில் ரோடு என, பொள்ளாச்சி நகரம் முழுவதிலும், பார்க்குமிடமெல்லாம் ரோடுகள் சிதிலமடைந்து காணப்படுகிறது.

ரோடுகளில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள், அடிக்கடி தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைத்து, பாதுகாப்பாக பயணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க.,வினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்ககுமார். இவர் அ.தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறி தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வில் இணைந்தார். இவர், கடந்த, 2018 இறுதியில் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி அ.ம.மு.க., சென்றார். அதன்பின், 2019ல் அ.தி.மு.க.,வில் இணைந்து, தற்போது தி.மு.க.,வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உரிமம் பெற சிறப்பு முகாம்

வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை அறிவித்துள்ளபடி, உணவு பாதுகாப்பு தர நிர்ணய உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
வால்பாறையில், தனியார் ஓட்டலில் நடந்த முகாமில், துறை அலுவலர் காளிமுத்து கலந்து கொண்டு, வியாபாரிகளுக்கு உரிய சான்றிதழ் வழங்கினார். வால்பாறைநகர், ரொட்டிக்கடை, சோலையாறு நகர், முடீஸ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.முகாமுக்கான ஏற்பாடுகளை, வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ், பொதுச்செயலாளர் ஷாஜூஜார்ஜ், பொருளாளர் ஜேசுதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

விளையாட்டு போட்டிக்கு அனுமதி
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் விளையாட்டுகளில் ஈடுபட முடியாமல் இருந்தனர். இந்நிலையில், வெளி விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடத்த அரசு அனுமதித்துள்ளது.இதனால், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல், பள்ளி மற்றும் கல்லுாரிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'மாவட்ட மற்றும் மாநில அளவில், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் வாயிலாக விளையாட்டுப் போட்டிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளி மற்றும் கல்லுாரி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, உரிய பயிற்சி அளிக்கப்படும்,' என்றனர்.

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலை அரசு போக்குவரத்துக்கழக கிளை முன், தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து, நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப்., கிளைச்செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு எதிர்ப்பு, உட்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில், சி.ஐ.டி.யு., மண்டல துணை பொதுச்செயலாளர் விஸ்வநாதன், நிர்வாகிகள், ராஜா, விஜயகுமார், ராதாகிருஷ்ணன், பாபு, கார்த்திகேயன், ஐ.என்.டி.யு.சி., கிளைத்தலைவர் சிவக்குமார், எம்.எல்.எப்., சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உதவி

வால்பாறை அடுத்துள்ள, பாரி ஆக்ரோ எஸ்டேட் சார்பில், சோலையாறு நகரில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, கட்டில், மெத்தை, சேர், எடைபார்க்கும் கருவி, குளுக்கோஸ்லேப் மிஷின், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ேஷக்கல்முடி குரூப் பொதுமேலாளர் பாலாஜி, உதவி பொதுமேலாளர் போபி ஆகியோர் கலந்து கொண்டு, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணனிடம், மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

ஆக்கிரமிப்பு அகற்றி சாக்கடை கட்டுங்க
குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியில் இருந்து, அம்மாபட்டி கிராமத்துக்கு செல்லும் இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோட்டை, அம்மாபட்டி, பொட்டையம்பாளையம் உட்பட பல கிராம வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சோமவாரப்பட்டி பகுதியில், இந்த ரோட்டை ஒட்டி, சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. முறையாக அளவீடு செய்யாமல், மேற்கொள்ளப்படும் கட்டுமான பணியால், ரோடு மேலும் குறுகலாகி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் என கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே, ரோட்டுக்குரிய இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர், சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

ஜி.எஸ்.டி., உயர்வுக்கு கண்டனம்

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தாலுகாவில் தென்னை சாகுபடி அதிகம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால், உலகம் முழுவதிலும் தொழில்துறையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால், கொப்பரையை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத சூழலால், பெரும் அளவு தேங்கியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு, தேங்காய் எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது.அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலின் வரியை குறைத்துள்ளது. இதனால், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கை குறையும்; விவசாயிகள் வாழ்வாதாரம் பெரும் அளவு பாதிக்கும்.விவசாயிகளை பாதுகாக்க தேங்காய் எண்ணெய் மீதான, ஜி.எஸ்.டி., வரி உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

'போஷன் மா' ஆன்லைன் நிகழ்ச்சி
மத்திய அரசின் போஷன் மா என்ற நிகழ்ச்சி, ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முனைவர் கவிதா ஸ்ரீ 'நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள்' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை ஆன்லைன் வழியாக தெரிவித்தார். இதோடு மண்புழு உரம் தயாரித்தல், இயற்கை மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்து விளக்கப்பட்டது.இதற்கு பின்பு, அரசின் உதவிகள் தொடர்பாக பணியாளர்களின் மொபைல்போன் இணையவழியில், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் விளக்கம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை போசன் அபியான் வட்டார ஒருங்கிணைப்பாளர் கவுதமன் மற்றும் குழுவினர் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X