தி.மு.க., அரசு 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., அரசு 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (43)
Share
சென்னை: ‛‛நான்கு மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக் கண்டத்திலேயே தி.மு.க., அரசாகத்தான் இருக்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 25) சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் அமர்வதற்கு
தமிழகம், திமுக அரசு, 202 வாக்குறுதிகள், நிறைவேற்றம், முதல்வர் ஸ்டாலின், பெருமிதம்

சென்னை: ‛‛நான்கு மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக் கண்டத்திலேயே தி.மு.க., அரசாகத்தான் இருக்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 25) சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் அமர்வதற்கு அடித்தளமாக அமைந்தது. இவர்களுக்கு வாக்களித்தால், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள். மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார்கள் என்று நம்பி நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள்.

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை நாங்கள் இம்மியளவும் பிசகாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். சட்டசபை தேர்தலுக்கு முன்னர், தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். நான் அதை வெளியிட்டபோது, தலைவர் கருணாநிதி பாணியில் 'சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம்' என்று சொன்னேன். ஆட்சிக்கு வந்து இன்றோடு 4 மாதங்கள்தான் கடந்துள்ளன. இந்த நான்கு மாதங்களுக்குள் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றைச் செய்துவிட்டோம். 505 வாக்குறுதிகளைத் தந்தோம். அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம்.


latest tamil news


மே 7-ம் தேதி பதவியேற்ற சில மணி நேரத்தில் ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
* 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதியுதவி.
* ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.
*. மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
* மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை.
* தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு.

இந்த ஐந்தில் முதல் நான்குமே தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை.

இதன் தொடர்ச்சியாக,* வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியான ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
*. கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.
* தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
* பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
* ஊரகப் பகுதிகளில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்துவது.
* 'நமக்கு நாமே' திட்டத்தை உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்துவது.
* 'இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்' என்ற உன்னதத் திட்டம் நடப்பு 2021-22-ம் ஆண்டு செயல்படுத்துவது.
* அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைத்தல் மற்றும் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல்.
* ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளிப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்குதல்.
*. மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான சட்ட முன்வடிவை சட்டசபையில் தாக்கல் செய்தல் மற்றும் தீர்மானம் நிறைவேற்றுதல்.
* கொரோனா சிகிச்சைப் பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை.
* கொரோனா நோய்த்தொற்றால் காவல்துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை.
* தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட 'முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.
* மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.
* அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்வு.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

கவர்னர் அறிக்கையில் 51 வாக்குறுதிகளும், எனது பதிலில் இரண்டு வாக்குறுதிகளும், நிதிநிலை அறிக்கையில் 43 வாக்குறுதிகளும், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும், அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 64 வாக்குறுதிகளும், இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. நான்கு மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக் கண்டத்திலேயே தி.மு.க., அரசாகத்தான் இருக்கும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X