குழந்தைத் திருமணம் தற்போது மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளது. ராஜஸ்தானில் திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் 2020ல் நாடு முழுதும் அதிக அளவில் குழந்தைத் திருமணம் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.
குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்காக திருமணச் சட்டம் 1978ல் கடைசியாக திருத்தப்பட்டது. அதன்படி, ஆணின் திருமண வயது, 21ஆகவும், பெண்ணின் திருமண வயது, 18ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு குறைவான வயதுள்ள திருமணம் குழந்தைத் திருமணமாக கருதப்படும்.
சிறை தண்டனை
இவ்வாறு குழந்தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்படி, குழந்தைத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
திருமணங்கள் பதிவு செய்யப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2006ல் ஒரு தீர்ப்பு அளித்தது. அதன்படி திருமணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது.'குழந்தைத் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு அங்கீகாரம் கிடையாது' என, அந்த தீர்ப்பில் கூறப்பட்டது. 'குழந்தைத் திருமணம் எங்கெல்லாம் நடக்கிறது என்பதை கண்டறிவதற்காக குழந்தைத் திருமணத்தையும் பதிவு செய்ய வேண்டும்' என, அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்தது. அதன்படி குழந்தைத் திருமணம் நடந்து, அந்த பெண், 18 வயதை எட்டும்போது, அவர் அந்த பந்தத்தை ஏற்றால் மட்டுமே அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்.
இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ள ராஜஸ்தானில், திருமணச் சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
விமர்சனம்
இதுவரை, 21 வயதுக்குட்பட்டோருக்கு நடக்கும் குழந்தைத் திருமணத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்ற பிரிவு திருத்தப்பட்டு, பெண்ணுக்கு 18 வயது மற்றும் ஆணுக்கு 21 வயதுக்குக்கு உட்பட்ட திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம், குழந்தை திருமணத்தை ஊக்குவிப்பதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. ஆனால் அசோக் கெலாட் அரசு அதை மறுத்துள்ளது.
'திருமணத்தை பதிவு செய்வதற்கான வயது மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குழந்தைத் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. 'சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது' என, மாநில சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் சாந்தி தாரிவால் கூறியுள்ளார்.
அதிர்ச்சி தகவல்
இது தொடர்பாக தொடர்ந்து பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2020ம் ஆண்டுக்கான அறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகிஉள்ளது.
அந்த அறிக்கையின்படி நாடு முழுதும் 2020ல், 785 குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் அதிகபட்சமாக, 184; அசாமில், 138; மேற்கு வங்கத்தில், 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில், 77 குழந்தைத் திருமணங்களுடன், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.
கடந்த 2019ல், 523 குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்குகள் பதிவான நிலையில், 2020, 785 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கிட்டத்தட்ட, 50 சதவீத உயர்வு. கொரோனா பரவல், ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் 2020ல் குழந்தைத் திருமணம் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக வறுமை குறிப்பிடப்படுகிறது.
எதிர்பார்ப்பு
வேலை, வருவாயை இழந்த நிலையில் குடும்பத்தை நடத்த முடியாமல் பலர் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தனிகவனம் செலுத்தி குழந்தைத் திருமணங்கள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
சட்டம் என்ன சொல்கிறது?
* சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது, 18; ஆணின் திருமண வயது 21. இதற்கு குறைந்த வயதுடையோருக்கு நடப்பது குழந்தைத் திருமணம்.
* குழந்தைத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்க முடியும்
*ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1929ல் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பெண்ணின் திருமண வயது, 14ஆகவும், ஆணின் திருமண வயது 18ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது
*இதற்கான மசோதாவை ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா என்ற ஆங்கிலேயர் முன் மொழிந்தார். அதனால் அச்சட்டம் 'சார்தா சட்டம்' என அறியப்பட்டு, காலப்போக்கில் சாரதா சட்டம் ஆகிவிட்டது
*சுதந்திரத்திற்கு பின், பெண்ணின் திருமண வயது 15ஆக திருத்தி, 1949ல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.
*கடந்த 1978ல் இந்தச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது. ஆணின் திருமண வயது, 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது, 18ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது
*குழந்தைத் திருமணம் உட்பட அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வதை கட்டாயமாக்கி 2006ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
- நமது சிறப்பு நிருபர் -