'நீட்' தேர்வு மட்டுமல்ல, பன்னிரெண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த மறுதினமே, மாணவர்களின் தற்கொலை செய்தியை நாளிதழ்களில் பார்க்கலாம்.மற்ற தேர்வுகளுக்கான தற்கொலை செய்திகள் எல்லாம், மாணவர்கள் தோல்வியை எதிர்கொள்ள பயந்து எடுத்த கோழைத்தனமான முடிவாக பார்க்கும் போது, நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்யும் போது மட்டும், அதில் அரசியல் கலந்து விடுகிறது.
தேர்வில் தேர்ச்சி
தமிழகத்தை எடுத்துக் கொண்டால், உயர் பதவிகளான துணை ஆட்சியரில் ஆரம்பித்து, ஆரம்ப பணியான தட்டச்சர் வரை, டி.என்.பி.எஸ்.சி., என்ற தேர்வு அமைப்பு நடத்தும் தகுதி தேர்வின் மூலம் தான் தேர்ந்தெடுக்கின்றனர்.மத்திய அரசின் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற உயர்பணிகளுக்கு யு.பி.எஸ்.சி., என்ற அமைப்பு நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் தான் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
அது மட்டுமல்ல... ஸ்டாப் செலக் ஷன், ரயில்வே, அஞ்சல் துறை என பல துறையிலும் போட்டித் தேர்வுகள் மூலம் தான் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இவ்வளவு ஏன்... ஒருவர் பல 'டாக்டர்' பட்டமே வாங்கியிருந்தாலும், கல்லுாரியில் விரிவுரையாளர் ஆக, அதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தான் ஆக வேண்டும்.ஆனால் இன்று நம் அரசியல் தலைவர்கள், நீட் என்ற பரீட்சை மட்டுமே, தமிழகத்தில் தகுதி தேர்வாக நடப்பது போலவும், அதனால் மட்டுமே, ஒவ்வோர் ஆண்டும் பல உயிர்கள் பலியாவதைப் போலவும், மக்கள் மனதில் பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ 'சீட்' கொடுத்தால் என்ன... எதற்காக நுழைவு தேர்வு என்ற ஒன்றை நடத்த வேண்டும் என்ற இந்த கல்வி வியாபாரிகளின் வாதத்தின்படி பார்த்தால், குழப்பம் தான் மிஞ்சும்.எந்த நுழைவுத் தேர்வுமே நடத்த வேண்டாம்... கல்லுாரியில் முதல் மதிப்பெண் பெற்று விட்டாரா... அவருக்கு துணை ஆட்சியர் பதவி கொடுத்து விடலாம். குறைவான மதிப்பெண் பெற்று இருக்கிறாரா... அவருக்கு இளநிலை உதவியாளர் பதவி அல்லது பதிவறை எழுத்தர் பணி கொடுத்து விடலாம்...
எதற்காக போட்டி தேர்வு மூலம் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?மனப்பாடம் செய்யும் தகுதி மட்டும் இருந்து விட்டால் போதும்; ஒருவர் அதிகப்படியான மதிப்பெண்ணை, எஸ்.எஸ்.எல்.சி., அல்லது பிளஸ் 2 தேர்வில் பெற்று விடலாம். ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவரை கூப்பிட்டு, சுயமாக ஏதாவது விஷயத்தை பற்றி ஒரு பக்கம் எழுதச் சொல்லுங்கள்; நிச்சயம் அந்த மாணவரால் முடியாது. ஏனென்றால், மெக்காலே என்ற பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வி அதிகாரியாக இருந்தவர், தந்து விட்டு போன கல்வித்தரம், மாணவர்களின் மனப்பாடத்திறனை வெளிப்படுத்தும் கருவியாக மட்டுமே உள்ளது.
பிளஸ் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவரால் ஏன் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை... ஏனென்றால், மதிப்பெண் பெற அவரின் மனப்பாடம் பண்ணும் திறமை மட்டும் போதுமானதாக இருந்தது.நுழைவுத் தேர்வு என்றால், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்த வேண்டி உள்ளது. இரண்டு கேள்விகளுமே ஒரே புத்தகத்தில் இருந்து தான் கேட்கப்படுகின்றன. என்ன படித்தோம் என புரிந்துக் கொள்ளாமலே படித்து, அதை அப்படியே தேர்வு தாளில் வாந்தி எடுத்தால் போதும். பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து விடலாம்.
ஆனால், நுழைவுத் தேர்வுக்கு, படித்ததை மனதால் நன்கு ஜீரணிக்க வேண்டும். புரியாமல் படிப்பதால் தான், நீட் தகுதித் தேர்வு என்றாலே பயம் வருகிறது. சொல்லப் போனால் மாணவர்களுக்கு பயம் வருகிறதோ இல்லையோ... அவர்களை வைத்து அரசியல் செய்யும் கட்சித் தலைவர்களுக்கு பயம் வந்து விடுகிறது.
நமது மக்கள் போராட வேண்டியது நம் கல்வித்தரத்தை உயர்த்த சொல்லியே தவிர, தகுதி தேர்வை ரத்து செய்ய சொல்லி அல்ல.நீட் தேர்வு தோல்வியால் மட்டுமல்ல, பிற அற்ப காரணங்களுக்காகவும் பதின் பருவத்தினர் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி விட்டது. பரீட்சையில் தோல்வியா... ஆசிரியர் திட்டி விட்டாரா... நினைத்த படிப்பிற்கான இடம் கிடைக்க வில்லையா... ஆசைப்பட்ட பொருள் கிடைக்கவில்லையா... தற்கொலை என்ற அளவில், மிக அற்பமான விஷயங்களுக்கு கூட தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மன அழுத்தம்
எல்லாவற்றையும் விட சமீபத்தில், இரண்டு பெண்களை வகுப்பில் இடம் மாற்றி உட்கார வைத்ததற்காக தற்கொலை செய்ததை படித்ததும், 'பகீர்' என்று ஆகி விட்டது. இப்படி, சின்னப் பிரச்னை என்றால் கூட அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல், எதற்கெடுத்தாலும் பதின் பருவத்தினரை தற்கொலைக்கு துாண்டுகின்றனரே என்ற வேதனை எழுகிறது.அதற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமே காரணம் இல்லை; பெற்றோரும் ஒரு காரணம்.இன்றுள்ள பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள், நல்ல குணமுள்ள பிள்ளைகளாக வளர வேண்டும் என்பதை விட, அதிக மதிப்பெண்களை வாங்கக்கூடிய எந்திரங்களாகத் தான் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
அதனால் படிப்பு, படிப்பு என்று பிள்ளைகளுக்கு அதிகமான மன அழுத்தத்தை கொடுக்கின்றனர். நம் மக்களுக்கு மருத்துவம், பொறியியல் இந்த இரண்டை விட்டால், வேறு கல்வி இருப்பதே தெரியாது.அதுவும் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு போன்ற அரசு தேர்வு எழுதுபவர்களாக இருந்து விட்டால் போதும்.
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரத்தக் கொதிப்பு அதிகமாகி விடும்.அந்த அளவிற்கு பிள்ளைகளையும் வருத்தி, தங்களையும் வருத்திக் கொள்கின்றனர். அதனால் மதிப்பெண் குறைந்து விட்டால் அல்லது பாடத்தில் தோல்வி அடைந்து விட்டால், பெற்றோர் என்ன சொல்வரோ என்ற பயத்தில், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், அனிதா என்ற மாணவி, நீட் பரீட்சையில் தோல்வி அடைந்ததால், மருத்துவ கல்லுாரியில் சேர முடிவில்லையே என்பதற்காக தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் அவரை ஒரு போராளியாக, வீரப் பெண்மணியாக பெரும்பாலான கட்சிகளும் சித்தரித்து வருகின்றன. அதைத் தொடர்ந்து, பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அனிதா என்ற அந்த மாணவியின் மரணம் வருந்தத்தக்கது தான். வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்டாரே என்று மனசு பாரமாகத் தான் செய்கிறது.
எனினும், அந்த மாணவி போராடி வாழ்க்கையில் ஜெயித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு முயற்சி செய்து, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்திருக்க வேண்டும்.மருத்துவ படிப்பு இல்லாவிட்டால் இன்னும் எவ்வளவோ துறைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒன்றில் படித்து சாதனைப் பெண்ணாக மாறி இருக்க வேண்டும். தான் நினைத்த படிப்பை படிக்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்திருக்க கூடாது.
அனிதா மட்டுமல்ல. அதன் பிறகு, நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்பவர்களை பற்றிய செய்தியை, அரசியல் கட்சிகள் பூதாகரமாக மாற்றுகின்றன. இன்று, தனியார்மயமாக உள்ள மருத்துவ கல்லுாரிகள் எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டு விட்டால், கட்சிகளின் கல்வி வியாபாரிகள், நீட் தற்கொலை விவகாரங்களை பெரிதுபடுத்த மாட்டார்கள்.
வெற்றியாளர்கள் வலம்
தென்காசிக்கு அருகே, ஆய்க்குடியில் 'அமர் சேவா சங்கம்' என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை மையம் நடத்திக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ணனை எத்தனை பேருக்கு தெரியும்?ராணுவத்தில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் ராணுவ பயிற்சியில் சேர்ந்தார். ஆனால் பயிற்சியின் போது அடிபட்டு, கழுத்துக்கு கீழே முழு இயக்கமும் பாதிக்கப்பட்டு விட்டது. அந்த நிலையிலும் அமர் சேவா சங்கம் என்ற சேவை மையத்தை ஆரம்பித்து, இன்று எத்தனையோ மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிக் கொண்டிருக்கிறார்.
பள்ளி இறுதி தேர்வில், ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடனே தற்கொலை செய்திருந்தால், தலைசிறந்த விளையாட்டு வீரர் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.அன்று ஆங்கில பாடத்தில் அவர் தோல்வி அடைந்தார். இன்று ஆங்கில பாடப்புத்தகங்களில், பாடமாகவே அவர் இடம் பெற்றுள்ளார்.இது தான் சாதனை.
கண், காது செயல் இழந்த நிலையில், பல மொழிகளைக் கற்று, சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர் ஆன ஹெலன்கெல்லரை பற்றியும், இரண்டு கால்களும், கைகளும் இல்லாமல் போனாலும், அதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன் பேச்சால் உலகத்தையே கவர்ந்து கொண்டிருக்கும் நிக் உஜிசிக்கை பற்றியும் இன்றைய வளர் பருவத்தினர் அறிய வேண்டும்.
அவர்களை மாதிரி எத்தனையோ பேர் தங்களின் குறைகளையெல்லாம், தங்களது மன வலிமையால், தன்னம்பிக்கையால் நிறைகளாக்கி, வெற்றியாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.அவர்களை போராளிகளாக, வீரப்பெண்ணாக, வீரமகனாக வளர் பருவத்தினருக்கு அடையாளப்படுத்துங்கள். இன்றைய வளர் பருவத்தினர் சரியான வழி காட்டுதல் இல்லாமல், வழி தெரியாமல் கடலில் பரிதவிக்கும் நாவாய் போன்று தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர்.
கலங்கரை விளக்கம் போல, அவர்களுக்கு சரியான வழிகாட்ட வேண்டிய கடமை பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமல்ல; ஊடகங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் என்ன பண்ணுகின்றன... சின்ன பிரச்னைக்கு பயந்து உயிரை மாய்த்துக் கொள்பவர்களை போராளிகளாக அடையாளப்படுத்து கின்றன.
அதுபோல, தவறாக முடிவெடுப்பவர்களுக்கு கிடைக்கும் பேரையும், புகழையும் பார்க்கும் பதின்ம வயதினர், 'தற்கொலை செய்து கொண்டால் இவ்வளவு புகழ் கிடைக்கிறதா...இத்தனைப் பேர் பாராட்டுவரா; நமக்கும் அதுபோலத் தான் கிடைக்கும்' என தவறாக எண்ணி, சின்ன பிரச்னை என்றாலும் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர்.தங்களுக்கு கிடைக்கும் புகழையோ, பேரையோ பார்க்க, தாங்கள் இருக்கப் போவதில்லை என்ற உண்மை அவர்களுக்கு உரைப்பதில்லை.
ஒரு பரீட்சையில் தோல்வியடைந்தால் மறுபடியும் படித்து வெற்றி பெறலாம். எந்த தோல்வி யையுமே வெற்றின் படிக்கல்லாக மாற்றி, அதன் மீது ஏறி வெற்றிக்கனியை அடையலாம்.
போராட்டம்
ஆனால் உயிரை மாய்த்துக் கொண்டால், மறுபடியும் உயிருடன் வரவே முடியாது என்பதை, வளர் பருவத்தினர் மனதில் பதிய வைக்க முயற்சி செய்யுங்கள். பதின் பருவத்தினரை வழி நடத்த வேண்டியதில் அரசியல் கட்சிகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை நிலைநிறுத்த, எதை வைத்தும் அரசியல் செய்ய காத்துக் கொண்டு இருப்பர்... ஆனால் ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு துணை போய்விடக் கூடாது.
'வாழ்க்கை என்றாலே போராட்டம் தான். அதில் போராடி, வெற்றி பெற தான் முயற்சி செய்ய வேண்டுமே தவிர, பிரச்னைகளை பார்த்து பயந்து பின்வாங்கி தற்கொலை செய்யக் கூடாது' என்ற எண்ணத்தை, வாழ்க்கையில் போராடி முன்னேறியவர்கள் மூலம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.ஓடுதளம் முடிந்து விட்டதென எந்த விமானமும், தன் பயணத்தை நிறுத்தி விடுவதில்லை. அதன் பிறகு தான் பறக்கவே ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் ஒரு தோல்வி என்றால், அதை கண்டு பயந்து விடக்கூடாது. தோல்வியை வெற்றியாக்க வேண்டும்!
வாகைச்செல்வி
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
இ-மெயில்: kumar.selva28769@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE