குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஹெராயின்' போதைப் பொருள் சிக்கிய விவகாரம், தலிபான் பயங்கரவாதிகளின் தொடர்பை அம்பலப்படுத்தி உள்ளதால், வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர் உஷாராக இருக்க வேண்டும் என, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இந்திய துறைமுகங்கள் வழியாக போதைப் பொருள் கடத்தல் அதிகரிப்பதால், அவற்றை கண்டுபிடித்து தடுப்பதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில், 'ஐ.இ.கோட் லைசென்ஸ் - இம்போர்ட் அண்டு எக்ஸ்போர்ட் கோட் லைசென்ஸ்' பெற்றவர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் அல்லது இறக்குமதியாகும் பொருட்களுடன் சேர்ந்து, போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை, குஜராத்தில் பிடிபட்ட சம்பவம் உணர்த்தி உள்ளது.
இது குறித்து வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஏஜென்ட்களுக்கு வரும் கன்டெய்னர் என்ற சரக்கு பெட்டகங்களில் போதைப் பொருள் வைக்கப்பட்டு, இந்தியாவில் பிடிபட்டாலும், வெளிநாடுகளில் பிடிபட்டாலும் சிக்கல் தான். வெளிநாடுகளில் போடப்படும் வழக்குகளை இங்குள்ள ஏஜென்ட் சந்திக்க வேண்டும்.
தப்பிக்க முடியாது
'நான் ஒரு ஏஜென்ட். பொருளை ஏற்றுமதி செய்வது வேறு ஒரு ஆள்; அதை பெறுவது, இன்னொரு நபர். கடத்தலில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை' எனக்கூறி யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.ஏற்றுமதியோ, இறக்குமதியோ ஏஜென்ட் பெயரில் தான் கன்டெய்னர் அனுப்பப்படும்; எனவே, அவர்கள் தான் எந்ததவறுக்கும் பொறுப்பு.
அந்த அடிப்படையில் தான், டில்லியைச் சேர்ந்த அமித்துக்காக, சென்னை கொளப்பாக்கத்தைச் சேர்ந்த சுதாகர் பிடிபட்டுள்ளார். அவர் ஏஜென்ட்டாக செயல்பட்டார் என்றாலும், முதலில் சிக்கியவர் அவர் தான். ஐ.இ.கோட் லைசென்ஸ், அவரது மனைவி வைஷாலி பெயரில் உள்ளதால், அவரும் சிக்கியுள்ளார்.எனவே, ஏஜென்ட்டாக செயல்படுவோர் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமாகவும் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி ஓய்வு பெற்ற மதன்குமார், பயங்கரவாதிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தல் குறித்து அவர் கூறியதாவது:ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானுக்கு சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்ட 2,988 கிலோ ஹெராயின், கன்டெய்னர் வாயிலாக அங்கிருக்கும் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து, குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டது. அதை, வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
முக பவுடர் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளோடு கலந்து, ஹெராயின் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள், அங்குள்ள ஏஜென்ட்களை அணுகி, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய கேட்டுக் கொள்வர்.அவர்கள் இந்தியாவில் உள்ள ஏஜென்ட்கள் வழியாக போதைப் பொருளை அனுப்புவர்.
இந்திய ஏஜென்ட் அதைப் பெற்று, உரியவரிடம் கொண்டு போய் சேர்ப்பார். அப்படியொரு ஏஜென்ட் தான், சென்னை கொளப்பாக்கத்தில் சிக்கிய மச்சாவரம் சுதாகர். அவர், 2017ல் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி ஏஜென்ட்களிடம் அலுவலக மேலாள ராக பணியாற்றியுள்ளார். தொழில் நுணுக்கங்கள் தெரிந்த பின், மனைவி துர்கா பூரண வைஷாலி மற்றும் மாமியார் பெயரில் இறக்குமதி, -ஏற்று மதிக்கான மத்திய அரசின் 'லைசென்ஸ்' பெற்று உள்ளார்.
கடந்த காலங்களில் ஐ.இ.கோட் லைசென்ஸ் பெறுவது சுலபமாக இருந்ததில்லை. சென்னை போன்ற பெரிய துறைமுகங்கள் இருக்கும் நகரங்களில், 500 பேர் மட்டுமே இந்த லைசென்ஸ் பெற்று இருந்தனர். தற்போது, 10 ஆயிரம் பேரிடம் இந்த லைசென்ஸ் உள்ளது.
3.5 லட்சம் ரூபாய்
வர்த்தகம் வளர வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, தனி நபர்களுக்கும் இந்த லைசென்சை வழங்க துவங்கியுள்ளது. எனினும், தனி நபர் பெற, பல கட்டுப்பாடுகளும், விதிகளும் உள்ளன. இதை பெற்று தரவும் ஏஜென்ட்கள் உள்ளனர்.ஐ.இ.கோட் லைசென்ஸ் பெற்ற சுதாகர், விற்பனையாளராக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவில்லை; மற்றவர்களுக்கு ஒரு இடைத்தரகராக செயல்படுகிறார்.
இதற்காக, ஒரு கன்டெய்னருக்கு 3.5 லட்சம் ரூபாய் வரை, சுதாகருக்கு கமிஷன் கிடைக்கும். அதில், செலவுகள் போக, ஒரு கன்டெய்னருக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்பதால், கொரோனா காலத்தில் வேலையில்லாமல் இருந்த சுதாகர், இந்த பணியில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். இப்படித் தான், விஜயவாடாவில் இருக்கும் தன் 'ஆஷி டிரேடிங் கம்பெனி' பெயரில், முக பவுடருக்கான மூலப்பொருளை, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வரவழைத்துள்ளார்.
அவரை பொறுத்தவரை, கன்டெய்னரில் முக பவுடருக்கான மூலப்பொருள் தான் வருகிறது என்றே தெரியும். ஆப்கானிஸ்தானில் உள்ள நிட்ரூஸ் மாகாணத்தில் இருந்து, முக பவுடருக்கான மூலப்பொருள், சாலை மார்க்கமாக ஈரான் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வருகிறது என்றே, அரசுக்கு சுதாகர் தகவல் அளித்துள்ளார். அதை, டில்லியில் இருக்கும் அமித் என்பவருக்கு சேர்க்க வேண்டும்.
முறைப்படி, குஜராத்தில் இருந்து கன்டெய்னர், விஜயவாடாவில் இருக்கும் அவரது நிறுவனத்துக்கு தான் செல்ல வேண்டும். ஆனால், டில்லிக்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார் சுதாகர்.இந்த விஷயம், வருவாய் துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது; தொடர்ந்து விசாரித்தனர். மலையை உடைத்து எடுக்கப்படும் சுண்ணாம்பு போன்ற துாள் தான், முக பவுடருக்கான மூலப்பொருள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நிட்ரூஸ் மாகாணம், முக பவுடருக்கான மூலப்பொருள் இருக்கும் மலை பிரதேசம் கிடையாது.பலத்த சந்தேகம் ஏற்பட்டது; முந்த்ரா துறைமுகத்தில் வந்து இறங்கிய கன்டெய்னரை சோதனையிட்டனர். அதில், முக பவுடருக்கான மூலப்பொருளுடன், 2,988 கிலோ ஹெராயின் கலந்து இருந்தது கண்டறியப்பட்டது; அதன் மதிப்பு, 21 ஆயிரம் கோடி ரூபாய்.
இதன்பின், சுதாகர் ஜாதகத்தை, வருவாய் புலனாய்வு துறையினரும், குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு குழுவினரும் அலச துவங்கினர். அவர்களுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் சேர்ந்து கொண்டனர். டில்லி, உ.பி.,யின் நொய்டா உள்ளிட்ட பல இடங்களிலும், தீவிர விசாரணையில் இறங்கினர். ஹெராயின் கடத்தலில் எட்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்களில், நான்கு பேர் ஆப்கானிஸ்தானைச்சேர்ந்தவர்கள்; ஒருவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர்; சுதாகர், அவரது மனைவி வைஷாலி உட்பட மூன்று பேர், இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக, இலங்கையின் கொழும்பு துறைமுகம்; அங்கிருந்து தமிழகத்தின் துாத்துக்குடி, கேரளாவின் விழிஞ்சம் துறைமுகம் மற்றும் லட்சத்தீவுகள் வழியாக, ஏராளமான போதை பொருட்கள் கடத்தப்பட்டன.
கடும் சோதனை
அதேபோல, மும்பை துறைமுகத்துக்கும் ஹெராயின் கடத்தப்பட்டது. இதையடுத்து, அந்த துறைமுகங்களில் கடும் சோதனையும், பாதுகாப்பும் தொடர்கிறது. இதனால், யாரும் எதிர்பார்க்காத குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வாயிலாக இந்தியாவுக்கு போதை பொருட்களை அனுப்ப, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சித்துள்ளனர். அதை, அதிகாரிகள் முறியடித்து விட்டனர்.
எனவே, இந்தியாவில் உள்ள பிற துறைமுகங்கள் மீது, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் கவனம் திரும்பியுள்ளது. ஒடிசாவின் பாரதீப் மற்றும் ஆந்திராவின் கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகங்களுக்கு போதை பொருள் கடத்தப்படலாம். ஈரான், இந்தியாவின் நட்பு நாடு என்பதால், அந்த நாட்டு துாதரிடம், மத்திய அரசு இந்த கடத்தல் குறித்து தகவல் தெரிவித்துள்ளது.
எனினும், இனிமேல் போதை பொருள் கடத்தல் நடக்காது என்று உறுதியாக கூற வாய்ப்பு இல்லை. மலேஷியா, வங்க தேசம், இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகள் வழியாக, இந்தியாவுக்கு போதை பொருள் வர வாய்ப்பு உள்ளது. நைரோபி நாடு வழியாகவும் போதை பொருட்கள் கடத்தல் நடக்கலாம். விமானங்களில் போதை பொருட்கள் பெரும்பாலும் கடத்தப்படுவதில்லை. ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளிலும் துறைமுக போக்குவரத்து அதிகளவில் உள்ளது. துறைமுகங்களுக்கு வரும் அனைத்து கன்டெய்னர்களையும் சோதித்து அனுப்புவது, நடைமுறையில் சாத்தியமில்லாதது.
அதனால், ரகசியமாகவும், ஊர்ஜிதமாகவும் கிடைக்கும் தகவலை வைத்து, சந்தேகத்துக்குரிய கன்டெய்னர்களை மட்டுமே சோதிப்பர்.இது, பயங்கரவாதிகளுக்கு சவுகரியமாக உள்ளது. ஜூன் மாதத்திலும் குஜராத் - முந்த்ரா துறைமுகத்துக்கு, சுதாகர் நிறுவனத்துக்கான கன்டெய்னர் வந்துள்ளது. அது, போய் சேர வேண்டிய இடத்துக்கு சென்று விட்டது; சோதனையிடப்படவில்லை.
இரண்டு கண்டெய்னர்கள்
அதிலும் போதை பொருள் வந்ததா என்பது தெரியவில்லை. தற்போது பிடிபட்டுள்ள கன்டெய்னரை தொடர்ந்து, இரு கப்பல்களில், இரண்டு கன்டெய்னர்கள் சுதாகருக்கு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவை குஜராத்துக்கு வருகின்றனவா அல்லது வேறு திசைக்குத் திருப்பப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு மதன்குமார் கூறினார்.
- நமது நிருபர் --