சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நம் தேச பெருமையை உணர்வோம்!

Updated : செப் 27, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
வெளிநாடு சென்று வந்தோர், இன்னும் பயணம் மேற்கொள்ளாதோரிடம், அயல் நாட்டு கலாசாரம், வாழ்க்கை முறைகள், பிரமாண்ட கட்டடங்கள், சுற்றுலா தலங்கள் என, பலவற்றின் சிறப்புகளை விவரித்து, 'அவசியம் ஒரு முறையேனும் அவற்றை கண்டு வர வேண்டும்' எனக் கூறுவதுண்டு. அது போல், பிற நாடுகளின் மொழி வளம், இலக்கிய வளம், கல்வி முறைகள் என பலவற்றையும் சிலாகித்துக் கூறுவர். ஆயினும், இவர்கள் மறந்து
 நம் தேச பெருமையை உணர்வோம்!

வெளிநாடு சென்று வந்தோர், இன்னும் பயணம் மேற்கொள்ளாதோரிடம், அயல் நாட்டு கலாசாரம், வாழ்க்கை முறைகள், பிரமாண்ட கட்டடங்கள், சுற்றுலா தலங்கள் என, பலவற்றின் சிறப்புகளை விவரித்து, 'அவசியம் ஒரு முறையேனும் அவற்றை கண்டு வர வேண்டும்' எனக் கூறுவதுண்டு. அது போல், பிற நாடுகளின் மொழி வளம், இலக்கிய வளம், கல்வி முறைகள் என பலவற்றையும் சிலாகித்துக் கூறுவர். ஆயினும், இவர்கள் மறந்து விடும் ஒரு விஷயம் தான் நம்மை வருத்தம் கொள்ளச் செய்கிறது.


திட்டம் தீட்டினர்

அது, நம் நாட்டிலும் பெருமைக்குரிய பல சங்கதிகள் உள்ளன என்பதே. அதைப் பற்றி எடுத்துரைத்தாலும், இவர்கள் உதாசீனப்படுத்துவது வேதனையானது.நம் நாட்டின் கலாசாரம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பெருமை பெற்றது; நம் நாகரிகத்தின் அருமை, பெருமைகள் தொன்மையானவை; நம் நாட்டின் கல்வியறிவு மிகவும் மேம்பட்டது; நம் கலைகள் உன்னதமானவை. எல்லாவற்றிற்கும் மேலாக நம் பாரத தேசம் மாபெரும் ஆன்மிக பூமி.

நம் மன்னர்கள் நீதி வழுவாமல் நெறியான ஆட்சி புரிந்து குடிமக்களை காத்து வந்துள்ளனர். இயற்கை நமக்கு நல்ல வளங்களை அளித்து வந்துள்ளது. பிரமிக்கத்தக்க கட்டுமானங்களை நம் நாடு கொண்டு உள்ளது. நம் வணிகர்கள் முத்து, பவளம், வைரம், துணிகள், தந்தம், ஏலக்காய், மிளகு, மஞ்சள் மற்றும் பல பொருட்களை, பல நாடுகளுக்கும் எடுத்து சென்று வர்த்தகம் செய்துள்ளனர்.

நம் நாட்டுடன் வணிகம் செய்ய ஆவல் கொண்ட பல நாட்டு வணிகர்கள், அவர்கள் தேசத்து பொருட்களுடன் நம் நாட்டிற்கு வந்துள்ளனர். பல துறைமுகங்கள் நம் நாட்டின் நுழைவாயில் களாக, முக்கிய வியாபார கேந்திரங்களாக உருவாகி வளம் பெற்றன. வியாபாரிகள் வாயிலாக நம் நாட்டின் வளம் பற்றி அறிந்த அந்நாடுகளின் மன்னர்கள், முதலில் நம் நாட்டை காணவும், கைப்பற்றவும் ஆவல் கொண்டு, பின் செல்வங்களைக் கொள்ளை அடித்து செல்லவும் திட்டம் தீட்டினர்.

இவ்வாறு ஆரம்பித்தது தான், நம் நாட்டின் மீதான பல்வேறு படையெடுப்புகள். யவனர், அரேபியர், துருக்கியர், பாரசீகர்கள், மங்கோலியர், போர்ச்சுக்கீசியர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், முகலாயர், ஆங்கிலேயர் என பலரும் வர்த்தகத்தில் ஆரம்பித்து, நாடு பிடிக்கும் படையெடுப்புகளை நடத்தினர். இதில் பலர், பல முறை தோற்றும் ஓடியுள்ளனர்.

ஆயினும், சிறிது சிறிதாக உள் நுழைந்து, நம் செல்வங்களை எடுத்து சென்றதுடன், நம் கலாசாரத்தை சிதைத்து, அவர்களது சித்தாந்தங்களை நம் மீது திணித்து சென்றனர். நம் கல்வி முறைகள், வாழ்வியல், சிகிச்சை முறைகள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசியல் என எல்லாவற்றிலும் அவர்களது சிந்தனைகள் புகுத்தப்பட்டன. நாம் நம் பாரம்பரியத்தை இழக்க ஆரம்பித்தது மட்டுமின்றி, அவற்றை இழிவாகக் கருதவும் பழக்கப்படுத்தப்பட்டோம். மிக உயர்ந்த நாகரிகம் கொண்டிருந்த நாம், அவற்றை காட்டுமிராண்டித்தனமானது என அருவருக்கவும் தலைப்பட்டோம்.

குருகுலம் முதல், பல்கலைக்கழகம் வரை ஏற்படுத்தி, சிறந்த கல்வியை வழங்கி, கணிதம், மருத்துவம், வான சாஸ்திரம் என அனைத்து துறைகளிலும் சிறந்த கல்வியை வழங்கிஉள்ளனர் நம் முன்னோர்.வெறும் படிப்பு மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்து, ஒவ்வொரு மாணவனையும் ஒரு சிறந்த கல்வியாளனாக மட்டுமின்றி, நற்பண்புள்ள முழு மனிதனாக மிளிரச் செய்துள்ளனர்.இன்று அதன் அருமை, பெருமை தெரியாமல், 'அன்னியர்கள் ஏற்படுத்திய கல்வித் திட்டமே சிறந்தது; அவர்களது கலாசாலைகள் தான் சிறந்தவை' என்றும் கூறிக் கொள்கிறோம்..

ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலைக்கழகங்களை வியந்து நோக்கும் நாம், நாளந்தா, தக் ஷ சீலா போன்ற நம் பல்கலைக்கழகங்களை மறந்து விட்டோம்.கணிதத்தில் பூஜ்யமே நம்மால் கண்டுபிடிக்கப்பட்டது தான் என்பதை மறந்து, நாமே பூஜ்யமாக நிற்கிறோம். நம் முன்னோர் அறுவை சிகிச்சை முறைகள் பற்றி அறிந்திருந்தனர் என்றால், கேலியாக நகைக்கிறோம். மேலை நாட்டு அறிஞர் பாஸ்கலை அறிந்த நம் மாணவன், நம் நாட்டு பாஸ்கராவை அறியவில்லை. அரிஸ்டாட்டிலையும், ஐன்ஸ்டீனையும் படித்தவன், ஆதிசங்கரரையும், ஆர்யபட்டரையும் படிக்க முயற்சிக்கவில்லை.

ஹோமர் எழுதிய இதிகாசங்களை படியுங்கள்; கூடவே வியாசர், வால்மீகி, கம்பர் போன்றவர்களின் இதிகாசங்களையும், காப்பியங்களையும் படித்து பாருங்கள். காளிதாசரை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். நாஸ்ட்ராடாமஸ் கணித்தவை உண்மை என ஏற்றுக் கொள்வோர், நம் ஜோதிடக் கலையை ஆராயக் கூட மறுப்பது விந்தை. அரிச்சுவடி முதல் அண்ட வெளி வரை, இல்லற தர்மம் முதல் இயற்பியல் வரை, காவியங்கள் முதல் கணிதம் வரை, மாந்திரிகம் முதல் மருத்துவம் வரை, வேதம் முதல் வேதியியல் வரை நம் அறிஞர்கள் சிறந்து விளங்கினர்.'பாலே' நடனத்தை காணும்போது, பரதமும் கவனத்தில் இருக்கட்டும். ஆயக் கலைகள் 64ஐயும் நமக்குக் கற்றுத் தந்த கல்வி முறை எத்தனை அருமையானது. இன்று உலகமே பின்பற்றும் யோகக் கலை, நம் நாட்டில் தோன்றியது என்பது ஒரு பெருமை அன்றோ?

ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு என, பல மொழிகள் கற்க ஆர்வம் கொள்கிறோம். ஆனால் நம் தொன்மையான தமிழ், சமஸ்கிருத மொழிகளை துச்சமாக கருதுகிறோம். யுனானி, ஹோமியோபதி, ஆங்கில மருத்துவம் என பலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளோம். சித்தா, ஆயுர்வேதம் என அரிய வகை மருத்துவ முறைகளை இழந்து வருகிறோம்.ஏதென்ஸ் நகரத்தை கண்டு மலைக்கும் நாம், மக்கள் தொடர்ந்து வாழும் உலகின் மிகத் தொன்மையான காசி நகரைக் காண செல்வதில்லை. கட்டடக் கலையின் சிறப்புகள் நிறைந்த நம் கோவில்களில் இல்லாதது வேறெந்த கட்டடத்தில் காண முடியும்?

நம் கோட்டைகள் கொண்டிராத அற்புதங்களும், ஆச்சரியங்களும் பிற நாட்டில் உண்டா... நம் நாட்டின் இயற்கை அழகு வேறு எங்கும் உள்ளதா... நம் காடுகளின் வளம் எத்தனை; நம் நீர்வீழ்ச்சிகளின் அழகை நாம் முழுதுமாகக் கண்டு ரசித்துள்ளோமா? நம் நாட்டில் உள்ள உயரமான ஜோக் நீர்வீழ்ச்சி, அகலமான சித்ரகூட் நீர்வீழ்ச்சி போன்றவற்றை நாம் ஏன் பிரபலப்படுத்துவதில்லை... டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் போதிக்கும் வானவியல் அர்த்தங்களை அறிந்து கொண்டோமா?

குடவோலை முறையில் தேர்தல் நடத்தி, மக்களாட்சிக்கு வித்திட்ட அளவுக்கு நாகரிக வளர்ச்சி பெற்றவர்கள் நம் முன்னோர். சிந்து சமவெளி நாகரிகம் வியக்கத்தக்கது. நம் ஆடை, ஆபரணங்கள் மற்றும் அலங்காரங்களின் சிறப்பை விளக்க தனி புத்தகமே வேண்டும். பல நாடுகளிலும் மக்கள், இடையில் ஒரு துணியை மட்டும் சுற்றித்திரிந்த காலத்தில், நம் மக்கள் விதவிதமான ஆடைகளையும், ஆபரணங்களையும் நேர்த்தியாக தயாரித்து, நாகரிகமாக அணிந்து வந்தனர்.

உணவை விருந்தாகவும், மருந்தாகவும் பயன்படுத்திய நம் சமையல் கலைஞர்களின் கைவண்ணம் எத்தனை பாரம்பரியமானது!இன்று, ஏதோ ஆங்கிலேயர்கள் வந்து தான் நமக்கு ஆடை உடுத்த கற்றுத் தந்தனர் என்ற மாய பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர் சிலர். அவர்கள் நம் கோவில் சிற்பங்களை சரியாகக் கண்டிருந்தால் இவ்வாறு கூற மாட்டார்கள். கலை நயம் மிக்க கோவில் சிற்பங்கள் எத்தனை நுணுக்கங்கள் கொண்டவை... அவற்றை நாம் உணர மறந்து விட்டோம்.நம் அண்டை மாநிலமான கேரளாவின் மன்னர் ரவி வர்மா வரைந்த ஓவியத்தின் அருமையை நாம் ரசிக்கிறோமா?

சிறு தீப்பெட்டிக்குள் மடித்து வைத்து விடும் அளவுக்கு மெல்லிய நுாலில் முழு புடவையை நெய்த நம் நெசவாளர்களை நினைத்து பெருமைப்படுவதில்லை.நதிகளை நம் முன்னோர் தெய்வமாக கொண்டாடி வழிபட்டனர்; உழவுக்கான மாடுகளையும் ஆராதித்து பூஜை செய்தனர். இவை எவ்வளவு உயர்ந்த பண்புகள் என்பதை நாம் உணரவில்லை.


ஹளேபேடு சிற்பங்கள்

முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் பல 100ஆண்டுகளுக்கு முந்தையது நம் வரலாறு. அது நமக்கு தெரியவில்லை. அதன் நினைவுகள் கூட நமக்கு வருவதில்லை. கர்நாடக மாநிலம் ஹம்பிக்கு சென்றால், விஜய நகர பேரரசின் நினைவுச் சின்னங்கள் நமக்கு நினைவூட்டும். பேலுார், ஹளேபேடு சிற்பங்கள் நம் சிற்பிகளின் சிறப்பை புரிய வைக்கும்.

பிரமாண்ட தஞ்சைக் கோவில் நம் கலைஞர்களின் கட்டுமானத் திறமையை பறைசாற்றும். 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட போதும், மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட குஜராத்தின் சோம்நாத் கோவில் நம் செல்வ வளத்தை உணர்த்தும். கொற்கையும், கோழிக்கோடும், பூம்புகாரும் நம் கடல் வாணிபத்தை கண் முன் நிறுத்தும். ராஜபுதனத்துக் கோட்டைகள், அந்த வீரர்களின் தீரச் செயல்களை மனதில் கொணர்ந்து நிறுத்தும்.

மராட்டிய கோட்டைகள் மாவீரன் சிவாஜியை நினைவுபடுத்தும். காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரையிலும், அருணாசல பிரதேசம் முதல் மஹாராஷ்டிரம் வரை இந்த பரந்துபட்ட பாரத தேசத்தில், சூறையாடப்பட்டது போக இன்னும் பல அதிசயங்கள் நிறைந்து தான் உள்ளன. குற்றாலத்தில் சாரலையும், குமரியில் முக்கடல் கூடும் இடத்தில் சூரியோதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளையும் அனுபவித்தது உண்டா?

அஜந்தா, எல்லோரா, சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள், மாமல்லபுர சிற்பங்கள், திரிபுராவின் பாறை வெட்டு சிற்பங்களை பற்றி அறிவீர்களா; ஒடிசாவின் கோனார்க் நகரின் சூரியக் கோவிலின் சிறப்பு தெரியுமா? அன்னியருக்கு சிலைகளும், சமாதிகளும் அமைக்கும் நம் நாட்டில், ராஜராஜன் போன்ற மாமன்னர் புதைக்கப்பட்ட இடத்தை புல் மண்டிப் போக விட்டுள்ளோம். எந்த நாட்டிற்கும் செல்லலாம்; அவற்றின் உயர்வுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். அதன் அழகினை அள்ளிப் பருகலாம்.

ஆனால், நம் நாட்டில் என்ன இருக்கிறது என எள்ளி நகையாடும் போக்கு வேண்டாம். நமக்கென்று ஒரு பெரும் பாரம்பரியம், உன்னத கலாசாரம், பெருமை தரும் பல்வேறு சாதனைகள் உள்ளன என்பது நம்மால் உணரப்பட வேண்டும். நம் நாட்டின் பெருமையை, மறைந்துள்ள பெரும் வரலாற்று சிறப்புகளை நாம் அறிந்தால் தான், அடுத்தவருக்கு விளக்க முடியும். அதற்கான உள்நாட்டு சுற்றுலாவை நாம் மேற்கொள்வோம்.அவரவர் விருப்பப்படி பயண ஏற்பாடுகளை செய்து, நம் நாட்டின் வரலாற்றை உணர்வோம். நம் பெருமையை எண்ணி தலை நிமிர்ந்து நடக்கலாம்!
ச.பாலசுப்ரமணியன்
பொதுத்துறை வங்கி ஊழியர்
(ஓய்வு)சமூக ஆர்வலர்

தொடர்புக்கு:இ - மெயில்: balucbeu@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
26-செப்-202111:11:06 IST Report Abuse
chennai sivakumar உண்மை. ஆரம்ப பள்ளி நிலையிலேயே எல்லாம அழிந்து கொண்டு வருகிறது. பின் பாஸ்கல் மட்டும் தான் நமது வரும் தலை முறைக்கு தெரிகிறது. கல்வி திட்டங்களில் பூர்ட்சிகரமான மாற்றம் இல்லாவிட்டால் வரப்போகும் தலைமுறைக்கு திருவிளையாடல் புராணம், அகத்தியர் எல்லாம் 👽 எலியேன் ஆகி விடுவார். நான் கற்ற தமிழ்நாடு டெக்ஸ்ட் book society புத்தகங்களுக்கும் இப்போது( more than 50 years) yegapoatta மாற்றங்கள் உள்ளது. நிறைய சரித்திரங்கள் மறைக்கப் பட்டு உள்ளது என்பதை கூற விரும்புகிறேன். இப்போது உள்ள தலைமுறை சரித்திரங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை ஆர்வமும் இல்லை. இதுதான் இன்றைய நிலை
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
26-செப்-202110:33:20 IST Report Abuse
sahayadhas நாம் தேச பெருமையை உணராமல் அமெரி, ஐரோப் கு பிழைப்பு தேடி செல்லும் உன் போன்ற சமுகத்திரை புரியவை பப்பா.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-செப்-202106:58:22 IST Report Abuse
Kasimani Baskaran (ஆ)பாசப்பேச்சாளர் பாட நூல் எழுதினால் என்னவாகும் என்பதை சொல்லவும் வேண்டுமா? சராசரிக்கு கீழான சந்தர்ப்பவாத மற்றும் வெறுப்பை விதைக்கும் பேச்சாளரான ஈரோட்டு ஈர வெங்காயத்தை தெற்காசிய சாக்ரடீஸ் அளவுக்கு உயர்த்தியவர்களை பகுத்தறிவு பகலவன்கள் என்று ஏற்றுக்கொள்ளும் நாம் எப்படி நமது கலாச்சாரத்தின் உயர்வை அறிய முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X