எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லஞ்சம் வாங்குவதற்கு அதிகாரிகள் கொஞ்சம் கூட கூச்சப்படுவது இல்லை' என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட லஞ்சத்தை அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. அதனால், 'கூச்சம்' என்ற சொல்லே அவர்களுக்கு மறந்து விட்டது!'லஞ்ச ஒழிப்பு துறை பெயரளவில் மட்டும் செயல்படுகிறது. வழக்குகள் முறையாக விசாரிக்கப்படுவது இல்லை. லஞ்ச புகாரில் சிக்கியவரின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை செய்வதில்லை' என்றும், நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட எல்லாம் நடந்தாலும், லஞ்ச அதிகாரிக்கு கடும் தண்டனை ஏதும் கிடைக்க போவதில்லை.உண்மையான பயனாளிகள் கூட, லஞ்சம் கொடுத்து தான் அரசின் சலுகையை பெற வேண்டிய அவல நிலை நம் நாட்டில் உள்ளது.அனைத்து துறையிலும் ஆலமரம் போல் விழுது விட்டு பரந்து விரிந்து காணப்படும் லஞ்சத்தை, அவ்வளவு எளிதில் வேரறுத்து விட முடியாது.
'டெண்டர்' எடுத்தல், பயனாளிகள் பட்டியல் தயாரித்தல், பணியிட மாறுதல், மானியம் பெற... இப்படி ரேஷன் அட்டை வாங்குவது முதல் பட்டா மாற்றம் வரை எங்கும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய், பொதுப்பணி, பதிவு துறைகளில் லஞ்சம் இல்லாமல் எந்த கோப்பும் நகராது. 'தவறாமல் லஞ்சம் பெறுவோம்' என்ற கொள்கை முழக்கத்துடன் அங்கு பணியாற்றுவோர் ஏராளம்.
யாராவது ஒரு சில அரசு ஊழியர், லஞ்சம் வாங்க கூடாது என நேர்மையுடன் பணியாற்றினால், பிற ஊழியர்கள் அவரின் பணிக்கு, 'குழி' பறிக்கும் வேலையில் இறங்கி, வெற்றி பெற்று விடுகின்றனர். அரசு அலுவலகங்களில், 'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும்குற்றம்' என்ற அட்டை தொங்குவதால் எந்த பயனும் இல்லை.அதற்கு பதிலாக, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பெயர்களை பொதுமக்கள் எழுதி அனுப்பலாம் என, அரசு உத்தரவிட்டால் போதும்... லஞ்சம் வாங்குவோர் பட்டியல் ஒரு சில மணி நேரத்தில் கிடைத்து விடும்.
அவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுத்தால், அரசு அலுவலகங்களில் மிக சொற்பமான எண்ணிக்கையில் தான் ஊழியர்கள் பணியில் இருப்பர்.அரசு அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க நேர்மையான, உறுதியான ஆட்சியாளர்கள் வேண்டும்.lll
யோசிக்குமா தமிழக அரசு
சி.சிவகுமார், கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தலைவர்களின் நினைவு மண்டபம், மணி மண்டபம் ஆகியவை அவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களில் மட்டும் மரியாதைக்காக கவனிக்கப்படுகின்றன.மற்ற நாட்களில் அந்த கட்டடங்கள் பராமரிப்பின்றி, மக்களுக்கு பயனின்றி உள்ளன என்பதே கசப்பான உண்மை.
இந்நிலையை மாற்றுவதற்கு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முயற்சித்து வருவது வரவேற்கத்தக்கது. கர்ப்பிணி ஆலோசனை மையம், சுயதொழில் பயிற்சி, விவசாய ஆலோசனை மையம், நுாலகம், சேவை மையம், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் இடமாக அந்த கட்டடங்களை பயன்படுத்தலாம்.
கொரோனா தடுப்பூசி போடும் மையமாகவும், 'மினி கிளினிக்' பயன்பாட்டிற்கும் அந்த கட்டடங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம்.பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட அரசு கட்டடம் பயனின்றி இருப்பதை கவனித்து, அதில் மக்கள் சேவைக்கான இடமாக மாற்றினால் சிறந்தது. தமிழக அரசு யோசிக்குமா?
உண்மையை புரிந்து கொள்ளுங்கள்!
க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு பணியாளர்களில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும், ஊதியமும் அடிநிலை ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை.அரசு என்பது அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் மட்டுமல்ல; அரசின் எந்தவொரு திட்டத்தையும், அடிமட்டத்தில் செயலாக்குவோர் ஊழியர்களே.
கொள்கை வகுத்தலும், திட்டமிடுதலும், நிதி ஒதுக்குதலும் மட்டுமே அரசின் உயர்மட்டத்தில் நடைபெறுகின்றன; அதை அமல்படுத்தும் முழு சுமையும் ஊழியர்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது.உதாரணமாக, சுகாதாரத் துறையில் பல்வேறு அடுக்குகள் இருந்தபோதும், குப்பை மற்றும் சாக்கடையை அகற்றும் பணியில் ஈடுபடுவது தொழிலாளர்களே. அந்த பணியை செய்யவில்லை என்றால் திட்டமிடல், நிதி ஒதுக்குதல், கண்காணித்தல் ஆகியவற்றால் எந்த பலன் இல்லை.
இந்தியாவில் ஏராளமான அரசு ஊழியர்கள் தேவையின்றி இருப்பது போன்ற பிரசாரங்கள், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மக்கள்தொகைக்கும், ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதமே, அந்த நாடு மேம்பட்ட சேவையை வழங்குகிறதா என்பதற்கான அளவுகோல்.
கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி, அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 7,681 பணியாளர்கள் சேவை செய்கின்றனர். இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 1,622 அரசு ஊழியர்கள் பணி செய்கின்றனர்.கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்ட நாடுகளில், அரசு ஊழியர் விகிதம் அதிகமாகவே உள்ளது.
அரசு ஊழியர்கள் போராடும் போது கொடுக்கப்படும் புள்ளி விபரங்கள், அவர்களுக்கு எதிரான பகையையும், வன்மத்தையும் உருவாக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்படுகின்றன.தமிழக அரசின் வரவு -- செலவு திட்டத்தில், 71 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே கொடுக்கப்படுகிறது என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. உண்மையில், இந்த தொகை 50 சதவீதத்திற்கும் குறைவாகும்.
ஆரம்ப நிலையில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும், உயர்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும், 1:14 என்ற விகிதத்தில் உள்ளது. இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு தான் ஒட்டுமொத்தமான சம்பள விகிதம் மிக அதிகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.இதை பயன்படுத்தியே, அதிகாரப் பணி நிலையில் உச்சத்தில் இருப்போர், கீழ்மட்டத்தில் இருப்போரின் நியாயமான கோரிக்கைகளை மறுக்கின்றனர்.
தனியார் நிறுவனங்கள், ஊழியருக்கு போதுமான சம்பளம் தரவில்லை என்பதை தட்டிக் கேட்டு சரி செய்ய வேண்டிய அரசு, 'அவர்கள் குறைவாக கொடுக்கின்றனர்; நாங்கள் அதிகமாக தருகிறோம்' என்ற வாதத்தை முன்வைக்கிறது.போராடும் அரசு ஊழியர்களுக்கு எதிராக பொதுமக்களையும், இதர வேலை தேடும் பிரிவினரையும் துாண்டி விடுகின்றனர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விருதுக்கு மரியாதை வேண்டும்!
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசின் கல்வித்துறை சார்பில், ஒவ்வோர் ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன்' விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஆறு முதல் 12 ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
கற்பித்தல் பணி மட்டுமின்றி பள்ளியை மேம்படுத்துதல், பொது சேவை, மாணவர் சேர்க்கையை உயர்த்துதல், சுற்றுச்சூழல் மற்றும் மாணவர் நலனில் அக்கறை, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் ஆய்வு செய்து, விருதுக்கு உரியோர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவும், அதற்கு பின் மாநில அளவில் ஒரு குழுவும், விருது பெறுவோர் இறுதி பட்டியலை முடிவு செய்கிறது.ஆசிரியர்களில் 50 சதவீதம் பேர், 'நான் செய்துள்ள பணியை ஆய்வு செய்து விருது கொடுங்கள்' என்ற நோக்கில் விண்ணப்பிக்கின்றனர்.
மீதமுள்ள 50 சதவீதம் பேர், ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளின் சிபாரிசுடன் விருது வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் தொகையை அன்பளிப்பாக கொடுப்பதன் வாயிலாகவும் விருது பெற முடியும் என்ற நிலை உள்ளது.இதை தடுக்க வேண்டும்.
'சிறந்த ஆசிரியர்' என அரசு முன்மொழியும் நபர், அந்த விருதுக்கு பொருத்தமானவராக இருக்க வேண்டும்.ராதாகிருஷ்ணன் விருதில் அதிக அளவில் அரசியலும், ஊழலும் மலிந்து வருவதால், தகுதியான ஆசிரியர் பலர் அதற்கு விண்ணப்பிப்பதில் இருந்து விலகி நிற்கின்றனர்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர் பற்றி பள்ளி நிர்வாகம், சக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவரிடமும், தேர்வு குழுவினர் விசாரிக்க வேண்டும். குறுக்கு வழியில் விருது பெற முயற்சிப்போருக்கு, ஆதரவு கரம் நீட்ட கூடாது.தகுதியானவருக்கு கிடைத்தால் தான் விருதுக்கு மரியாதை!lll
தமிழகத்தில் ஆள் இல்லையா?
ஆர். கோவிந்தன், பறக்கை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்து வளர்ந்து, சில காலம் அமெரிக்காவிலும் பணியாற்றி, தாயகம் திரும்பிய தி.மு.க., நிதி அமைச்சர் தியாகராஜனின், 'தமிழ் புலமை' பற்றி அனைவரும் அறிவோம்.தமிழை, 'கொத்து புரோட்டா' போடும் அமைச்சர் தியாகராஜனின் ஆங்கில புலமை குறித்தும், நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளும் பேறு சமீபத்தில் கிட்டியிருக்கிறது.
இவர், 'பெட்ரோல் மற்றும் டீசலை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் இணைக்க கூடாது. இணைத்தால், மாநில அரசின் வருவாய் வெகுவாய் பாதிக்கப்படும்' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில், ஜி.எஸ்.டி., செயல்பாடு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் விபரம் ஆங்கிலத்தில் கடினமாக உள்ளது.
சிறு வணிகர்கள், அதை புரிந்து கொள்ள வரி ஆலோசகரை நாடுவதால், அவர்களுக்கு கூடுதல் செலவாகிறது.அதனால், ஜி.எஸ்.டி., நடைமுறையை இணையத்தில் முழுமையாக தமிழ்படுத்த வேண்டும் என, மாநில நிதியமைச்சர் தியாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.இவர், ஆங்கிலம் தெரியாமல் அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றியிருக்க முடியாது. எனவே இவரால், அந்த ஜி.எஸ்.டி., விபரத்தை, எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
இல்லையென்றால், தமிழக அரசின் நிர்வாகத்தில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் வித்தகர்களே!அவர்களின் அறிவை பயன்படுத்தி, ஜி.எஸ்.டி., விபரத்தை தமிழில் மொழி பெயர்த்து சிறு, குறு வணிகர்களுக்கு உதவிடலாம்.இந்த இரண்டையும் செய்யாமல், மத்திய அரசின் உதவியை நாடுவது, மாநில நிதி அமைச்சரான தனக்கும், அரசு நிர்வாகிகளுக்கும் தமிழும் தகராறு, ஆங்கிலமும் கேள்விக்குறி என, ஒப்புதல் அளிப்பது போலுள்ளது.
இதை பார்க்கும்போது ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நினைவுக்கு வருகிறது.அவர்கள், 'வழக்கு விபரங்கள் ஆங்கிலத்தில் உள்ளன; எனவே, அவற்றை தமிழில் மொழி பெயர்த்து கொடுக்க வேண்டும்' என மனு போட்டு, விசாரணையை இழுத்தடித்தனர். அதுபோல, சென்னை கோட்டைக்குள் நடத்தி முடித்து கொள்ள வேண்டிய மொழி பெயர்ப்புக்காக, மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதுவது, மத்திய அரசை சீண்டி பார்ப்பது போலுள்ளது.
இரு மாநில அரசியல்வாதிகள் ஒத்துழைப்பரா?
குணசேகரன், பணி நிறைவு பெற்ற உதவி செயற்பொறியாளர், பொதுப்பணி துறை, சிதம்பரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நான், 1960 ஆக., 31ல் இளநிலை பொறியாளராக பணி ஏற்றேன். அப்போது தான், ஆழியாறு அணை கால்வாய் பணி துவங்கியது. அதன் பின் பரம்பிக்குளம், திருமூர்த்தி அணை, சோலையாறு அணை என, பணிகள் துவங்கி நடந்தன.சோலையாறு அணை 3,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இங்கிருந்து குகைப் பாதை வழியே பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரும். இந்த அணைக்கு, அன்றைய பிரதமர் நேரு அடிக்கல் நாட்டினார்.
அன்றைய கேரள முதல்வர் பட்டம் தாணுபிள்ளை, நம் முதல்வர் காமராஜர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பரம்பிக்குளம் பகுதியிலிருந்து குகை பாதை வழியே காண்டூர் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வந்து ஆழியாறு அணைக்கும், திருமூர்த்தி அணைக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டது.காண்டூர் கால்வாய் 49.30 கி.மீ.,க்கு வெட்டப்பட்டது.
இது மலையின் மீது 1,300 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய், 9 கி.மீ.,க்கு குகைப் பாதை வழியே செல்லும்.கேரளா வழியாக, மேற்கே ஓடுகின்ற தண்ணீரை கிழக்கே திருப்பி, தமிழக வறட்சி பகுதியான பொங்கலுார், தாராபுரம், பொள்ளாச்சி, காங்கேயம் வரை 3 லட்சம் ஏக்கர் கோடை சாகுபடிக்கு தண்ணீர் கொடுத்தோம்.இந்த பணியை ஆறு ஆண்டுகளில் முடித்தோம். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத பணி.
தற்போது பரம்பிக்குளம் திட்டத்தில் மேலும் மூன்று சிறிய அணைகள் கட்டி, தண்ணீரை மேலும் சிறிதளவு கூட்ட முயற்சி நடக்கிறது. இதன் மூலம், கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தேக்கி, தமிழகமும், கேரளமும் கூடுதல் பயன் பெற வழி ஏற்படும்.இந்த அற்புதமான திட்டத்திற்கு, இரு மாநில அரசியல்வாதிகளும் ஒத்துழைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE