நாளிதழ் வாசிப்பே எனது வெற்றிக்கு அடித்தளம்! ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த நாராயண சர்மா பேட்டி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளிதழ் வாசிப்பே எனது வெற்றிக்கு அடித்தளம்! ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த நாராயண சர்மா பேட்டி

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (6)
Share
கோவை:''நாளிதழ் வாசிப்பே எனது வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது,'' என சிவில் சர்வீஸ் தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்ற நாராயண சர்மா கூறினார்.சிவில் சர்வீஸ் தேர்வில் கோவையை சேர்ந்த நாராயண சர்மா மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில், 33வது இடமும் பெற்றுள்ளார். அவர் அளித்த பேட்டி:உங்களை பற்றி?எனது சொந்த ஊர் நாமக்கல், வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவையில் தான்.
 நாளிதழ் வாசிப்பே எனது வெற்றிக்கு அடித்தளம்! ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த நாராயண சர்மா  பேட்டி

கோவை:''நாளிதழ் வாசிப்பே எனது வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது,'' என சிவில் சர்வீஸ் தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்ற நாராயண சர்மா கூறினார்.சிவில் சர்வீஸ் தேர்வில் கோவையை சேர்ந்த நாராயண சர்மா மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில், 33வது இடமும் பெற்றுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:


உங்களை பற்றி?

எனது சொந்த ஊர் நாமக்கல், வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவையில் தான். எட்டிமடை அமிர்தா பல்கலையில் பி.டெக்., 2017ம் ஆண்டு முடித்தேன். தந்தை வெங்கடேஸ்வர சர்மா, தாய் சுஜாதா இருவரும் தனியார் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களின், வழிகாட்டுதலே எனக்கான உத்வேகம்.


இத்தேர்வு எழுத எண்ணம் எவ்வாறு எழுந்தது?

எனக்கு, 25 வயது. கல்லுாரி இரண்டாமாண்டு படிக்கும்போதே பயிற்சியை துவக்கிவிட்டேன். வார நாட்கள் கல்லுாரி பாடங்களுக்கும், வார இறுதிநாட்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கும் என திட்டமிட்டு படிப்பேன். எனது தந்தைக்கு, நான் ஆர்.பி.ஐ., கவர்னர் ஆக வேண்டும் என்பது ஆசை. அதை சொல்லிக்கொண்டே இருப்பார். அதற்கான ஒரு வழியாக ஐ.ஏ.எஸ்., பதவியை தேர்வு செய்தேன்.


தமிழ் வழியில் படித்தவர்கள் தேர்வு எழுத முடியுமா?

நான் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்தவன் தான். மொழி இத்தேர்வுக்கு எவ்விதத்திலும் தடையில்லை. விடாமுயற்சி கட்டாயம் இருக்கவேண்டும். இரண்டு முறை தோல்வியடைந்து, மூன்றாம் முறை தற்போது வெற்றியை பெற்றுள்ளேன். தோல்வியின் அனுபவம் மூலம் பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டும்.


இத்தேர்வு எழுத பொழுது போக்கு தவிர்க்கவேண்டுமா? பயிற்சி மையங்கள் அவசியமா?

கட்டாயம் இல்லை. கல்லுாரி முடித்ததும் படிப்பதற்கான நேரம் போக நானும் நண்பர்களுடன் வெளியில் செல்வதையும், படம் பார்ப்பதையும் வாடிக்கையாகவே கொண்டு இருந்தேன். ஆனால், பொழுதுபோக்கிலேயே அதிக நேரம் செலவிடுவது சரியல்ல. தவிர, பயிற்சி மையம் போனால் தான் வெற்றி பெறமுடியும் என்பது உண்மையல்ல, ஆனால், பயிற்சி மையம் செல்வதால் சீனியர் மாணவர்களின் நட்பு, தேர்வு சார்ந்த பல புரிதல்களை ஏற்படுத்தும்.


தேர்வுக்கு தயாராக விரும்பும் மாணவர்களுக்கு நீங்கள் கூறுவது?

தொடர் பயிற்சி அவசியம். ஒரு தோல்வியடைந்தவுடன் சலிப்படைந்து பலர் பயிற்சியை விட்டு, மீண்டும் இடைவெளிக்கு பின் தொடங்குவர். பயிற்சி தொடர்ந்து வெற்றி பெறும் வரை இருக்க வேண்டும். பாடத்திட்டங்களை புரிந்து நேரம் ஒதுக்கி படிக்கவேண்டும். மாதிரி தேர்வு பயிற்சி அதிகளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். எழுதி, எழுதி பழகினால் மட்டுமே தேர்வு நேரத்தில் நேர மேலாண்மை, விடையில் தரம் சரியாக அமையும்.

தினமும் கட்டாயம் நாளிதழ்களை படிக்கவேண்டும். அதிலுள்ள தகவல் நமக்கு தேர்வில் பல்வேறு வகைளில் உதவியாக இருக்கும். நாளிதழ் வாசிப்பே எனது வெற்றிக்கு அடித்தளம். நேர்காணலில், மனித - விலங்கு மோதல் குறித்து கேள்வி எழுப்பினர். நாளிதழ் வாசிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


வெற்றி பெற்றாகிவிட்டது... அடுத்து உங்கள் திட்டம்?

மகிழ்ச்சியாக உள்ளேன். சிறு வயதில் பெரிய பொறுப்பை வகிப்பதால் அதை சரியாக செய்ய வேண்டும். தமிழகத்தில் ஓர் இடத்தை தேர்வு செய்ய விரும்புகிறேன். தொழில்நுட்பம் தற்போது முக்கியம் என்பதால் அதை பயன்படுத்தி மக்களின் வாழ்கை தரத்தை மாற்ற முடியும் என்பதை கவனத்தில் எடுப்பேன். எளிய மக்களுக்கு உதவும் அதிகாரியாக செயல்படுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X