தேவகோட்டை;சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த காங்., ஆலோசனை கூட்டத்தில், எம்.எல்.ஏ., மாங்குடி ஆதரவாளர்களும், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி ஆதரவாளர்களும் சிவகங்கை எம்.பி., கார்த்தி முன்னிலையில், நாற்காலிகளை வீசி மோதலில் ஈடுபட்டனர்; இதில், இரண்டு பேர் காயமடைந்தனர்.தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர்சத்தியமூர்த்தி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராமசாமி, எம்.பி., கார்த்தி, காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, திருவாடானைஎம்.எல்.ஏ., கருமாணிக்கம்பங்கேற்றனர்.மதியம் 12:20 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு கார்த்தி, மாங்குடி வந்ததுமே, வட்டார தலைவர்கள் பிரபாகரன், லோகநாதன், ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சி பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம். ஆனால், வேறு நபர்களிடம் தகவல் தெரிவிக்கிறீர்கள் என கார்த்தியிடம் கூறினர்.
கோபமடைந்த கார்த்தி, சத்தம் போட்டு பேசாதீர்கள். தள்ளி போங்கள் என்று கட்சியினரிடம்கூறினார். இந்த வாக்குவாதத்தை கட்சிக்காரர் வீடியோ எடுக்க முயன்ற போது, கார்த்தியின் உதவியாளர் அலைபேசியை பறிக்க முயன்றார். இதற்கு ராமசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துகூச்சலிட்டனர்.
ராமசாமி சமரசம் செய்து பேசுகையில், ''இப்பகுதியில் இதுவரை இல்லாத கோஷ்டி உருவாக்கப்படுகிறது. மாங்குடி ஆதரவாளர்களை கூட்டத்திற்கு நான் பல முறை அழைத்தும் வரவில்லை,'' என்றார்.நிகழ்ச்சிகளில் ராமசாமியின் படம் சிறியதாக போடப்படுகிறது.எம்.எல்.ஏ., கருமாணிக்கம் படத்தை போடுவதில்லை. 50 ஆண்டுகளாக இல்லாத கோஷ்டி பூசலை தற்போது மாங்குடி வளர்க்கிறார். இதற்கு பதில் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்று ராமசாமி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.மீண்டும் அலைபேசியில் வீடியோ எடுத்ததை பார்த்து கோபப்பட்ட கார்த்தி, அந்த நபரிடம் அலைபேசியை பறித்து உதவியாளரிடம் கொடுத்தார்.அப்போது கார்த்தி, மாங்குடியுடன் வந்தவர்களுக்கும், ராமசாமிஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுநாற்காலிகளை எடுத்து வீசினர்.இதில், ராமசாமி ஆதரவாளர் பாலமுருகன், மாங்குடி ஆதரவாளர் வினோத் காயமடைந்தனர். டி.எஸ்.பி., ரமேஷ் தலைமையில் போலீசார் கட்சியினரை வெளியேற்றினர்.
அன்றே சொன்னது தினமலர்
சிவகங்கை மாவட்ட காங்கிரசில் நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதில்லை என ராகுல், மாநில தலைவர் அழகிரிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் புகார் அனுப்பினர். இதுகுறித்து செப்.,16ல் தினமலர் நாளிதழில் 'சிவகங்கை காங்கிரசில் புகைச்சல்' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. அதை நிரூபிக்கும் விதமாக தேவகோட்டை காங்., அலுவலகத்தில் நேற்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தொண்டர்கள் மோதிக்கொண்டனர்.