இந்திய நிகழ்வுகள்
அவதுாறு 'வீடியோ': 2 பேர் கைது
லக்னோ: உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதுாறாக பேசி 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீபத்தில் 'வீடியோ' வெளியிட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பிரகாஷ் வர்மா, ரமேஷ் யாதவ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
விபத்தில் 4 பேர் பலி
ரேவா: மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், ஒரு டெம்போவில் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் சென்று கங்கையில் நீராடினர். சொந்த ஊர் திரும்பும் வழியில் ம.பி.,யின் ரேவா அருகே அவர்களின் டெம்போ, லாரி மீது மோதியது. இதில் நால்வர் பலியாயினர்.
பண மோசடி வழக்கு: மஹா அமைச்சருக்கு சம்மன்
மும்பை-மஹாராஷ்டிராவில் பண மோசடி வழக்கில் சிக்கி உள்ள மாநில அமைச்சர் அனில் பராபிற்கு, நேற்று இரண்டாவது முறையாக அமலாக்கத் துறையினர் 'சம்மன்' அனுப்பினர்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சராக இருந்த, தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் மீது லஞ்ச புகார் கூறப்பட்டது. மும்பையில் உள்ள ஓட்டல்களில் இருந்து 100 கோடி ரூபாயை லஞ்சமாக வசூலித்துத் தரக்கோரி, அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கியதை தொடர்ந்து, அமைச்சர் பதவியை தேஷ்முக் ராஜினாமா செய்தார்.இந்த வழக்கை அமலாக்கத் துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
இதில் பணியிட மாற்ற உத்தரவை திரும்பப்பெற, போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து அனில் தேஷ்முக்கும், சிவசேனா மூத்த தலைவரும், மாநில போக்குவரத்து துறை அமைச்சருமான அனில் பராபும், 40 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றது தெரியவந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகக்கோரி அனில் பராபிற்கு சமீபத்தில் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், தன் பணியை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றார். இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் அனில் பராபிற்கு சம்மன் அனுப்பினர். அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக நிகழ்வுகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்
மேட்டுப்பாளையத்தில், இந்து முன்னணி நிர்வாகி சந்திரசேகர், 35, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்லில் வரும்போது, பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இரும்பு ராடால், அவரை தாக்கியுள்ளனர். காயமடைந்த சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக, கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி, எஸ்.பி., செல்வநாகரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3,500 மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
வானுார் : புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி - திண்டிவனம் சாலை மொரட்டாண்டி டோல்கேட் அருகே ஆரோவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற டெம்போ டிராவலர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 70க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் 3,500 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
மதிப்பு 2 லட்சம் ரூபாயாகும்.தகவலறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அருண் சம்பவ இடத்திற்கு வந்து, டிரைவரிடம் விசாரணை நடத்தினார்.அதில், புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் மகன் பாலமுருகன், 25; என்பதும், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பாளர்கள் ஆதரவாளர்களுக்கு விநியோகிக்க கடத்திச் சென்றது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து போலீசார், பாலமுருகனை கைது செய்து, வேன் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது: மாநிலம் முழுதும் அதிரடி
சென்னை-தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை வாயிலாக, 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, ஐந்து துப்பாக்கிகள், 929 கத்திகள் உட்பட 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தர வில், மாநிலம் முழுதும் 23ம் தேதி இரவு முதல், அதிரடி நடவடிக்கையாக ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.இதன் வாயிலாக, 36 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 370 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 2,512 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 244 பேர், நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணையின்படி கைது செய்யப்பட்டனர்.பல்வேறு குற்ற வழக்குகளுக்காக 733 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் 1,927 பேரிடம் நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப் பட்டனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து ஐந்து நாட்டு துப்பாக்கிகள், 929 கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் என 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கொலை குற்றங்களில் ஈடுபடுகிற ரவுடி களுக்கு எதிரான, காவல் துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள்தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உரம் கலந்த தண்ணீர் குடித்த 17 தொழிலாளர் அட்மிட்
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே, உரம் கலந்த தண்ணீரைக் குடித்த 17 விவசாய கூலித் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த பழையநன்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி, சக்கரவர்த்தி. விவசாயிகளான இவர்களது நிலத்தில் நேற்று 20க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகள் வேர்க்கடலை அறுவடை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது, பக்கத்து நிலத்தில் உள்ள அங்கமுத்து என்பவர் சொட்டு நீர் பாசனத்திற்காக உரம் கலந்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். இதை அறியாமல், வேர்க்கடலை அறுவடை செய்து கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட தொழிலாளிகள்17 பேர் உரம் கலந்ததண்ணீரைக் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அவர்கள் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதற்கிடையே அந்த தண்ணீரைக் குடித்த அப்பகுதியில் மேய்ந்த மூன்று பசு மாடுகளும் மயங்கி விழுந்தன.
ஊட்டி அருகே பெண் வெட்டி கொலை
ஊட்டி:ஊட்டி அருகே, பெண்ணை அரிவாளால் வெட்டி கொன்ற நபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.ஊட்டி அருகே கல்லட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 30. கழிவுநீர் பிரச்னை காரணமாக, இரு வீட்டாருக்கும் அடிக்கடி பிரச்னை இருந்து வந்துள்ளது. நேற்று காலை தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த மணிகண்டன், புஷ்பராஜின் மனைவி சோபனா குமாரியை அரிவாளால் தலை, முதுகு பகுதிகளில் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த சோபனாகுமாரி கோவை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.புதுமந்து போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார், மணிகண்டனை தேடி வருகின்றனர்.
உலக நிகழ்வுகள்
உடலை தொங்கவிட்டு தலிபான் அராஜகம்
காபூல்-ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தவரின் உடலை ராட்சத 'கிரேன்' ஒன்றில் தலிபான் அமைப்பினர் கட்டித் தொங்கவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல், அனைத்து உலக நாடுகளின் கவனமும், ஆப்கன் பக்கம் திரும்பி உள்ளது. அடக்குமுறைகளை தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் கட்டவிழ்க்கலாம் என சர்வதேச நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இங்குள்ள ஹெராட் நகரில் நேற்று கிரேன் ஒன்றில் உயிரிழந்தவரின் உடலை தலிபான் அமைப்பினர் கட்டித் தொங்கவிட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்த சம்பவத்தை நேரில் பார்த்த வாஜிர் அகமது சித்திக் என்பவர் கூறியதாவது:ஹெராட் நகரில் உள்ள மைய சதுக்கத்திற்கு, உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை தலிபான் அமைப்பினர் எடுத்து வந்தனர். பின், அதிலிருந்த ஒரு உடலை மட்டும், அவர்கள் ராட்சத கிரேனில் கட்டி தொங்கவிட்டனர்.மீதமுள்ள மூன்று உடல்களும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இவர்கள் நான்கு பேரும் கடத்தலில் ஈடுபட்டபோது சிக்கியதாக தலிபான் அமைப்பினர் தெரிவித்தனர். இந்த காட்சியை பார்த்த மக்கள் பீதியடைந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.