சென்னை : 'செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு, இந்தியாவின் ஒன்பதாவது நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது' என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழக கடலோர பகுதி 1,076 கி.மீ., நீளம் உடையது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு, இந்தியாவின் ஒன்பதாவது நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் 21ம் தேதி வழங்கப்பட்டது.டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு, உலக அளவில் பாதுகாப்பு, துாய்மையான கடற்கரைகளை தேர்ந்தெடுத்து, 'நீலக்கொடி கடற்கரை' என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.தமிழகத்தில் சுற்றுச்சூழல் துறையானது, இப்பணியை செயல்படுத்தும் துறையாக அமைந்துள்ளது.

கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் வகையில், கடற்கரையில் பசுங்கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு 37 வசதிகள் உள்ளன.கடற்கரையில் குளிப்பதற்கான காலமாக, ஜன., 15 முதல், செப்., 15 வரை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை மற்றும் நீரோட்ட நிலையை பொறுத்து இக்காலம் அறிவிக்கப்படும்.பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக, நான்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.அவசர அழைப்பிற்கு உயிர் காக்கும் காவலர்கள்,கண்காணிப்பு கோபுரத்தில்நிறுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரை காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE