பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுப்புற கலைகளின் ‛அண்ணாவி': நான்காவது தலைமுறை பயணத்தில் அழகுசெல்வம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
ஒரு தவில், ஒரு தாளக் கருவி, ஒரு நாதஸ்வரம் இருந்தால் தமிழர்களின் அனைத்து வகை நாட்டுப்புற ஆட்டக் கலைகளையும் தாளத்துடன் ஆடி அசத்தி விடலாம். நாட்டுப்புற இசை கேட்டாலே எப்பேர்பட்ட கல் மனமும் கரைந்து விடும். இயல்பான மனித பண்புகளை வளர்க்கும் திறன் இந்த கலைகளுக்கு உள்ளது என்கிறார் மதுரை நாட்டுப்புற கலைஞர் அழகுசெல்வம். தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அவர்
நாட்டுப்புற கலைகளின் ‛அண்ணாவி': நான்காவது தலைமுறை பயணத்தில் அழகுசெல்வம்

ஒரு தவில், ஒரு தாளக் கருவி, ஒரு நாதஸ்வரம் இருந்தால் தமிழர்களின் அனைத்து வகை நாட்டுப்புற ஆட்டக் கலைகளையும் தாளத்துடன் ஆடி அசத்தி விடலாம்.

நாட்டுப்புற இசை கேட்டாலே எப்பேர்பட்ட கல் மனமும் கரைந்து விடும். இயல்பான மனித பண்புகளை வளர்க்கும் திறன் இந்த கலைகளுக்கு உள்ளது என்கிறார் மதுரை நாட்டுப்புற கலைஞர் அழகுசெல்வம்.

தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அவர் நம்மிடம்…சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே துத்திக்குளம் என் சொந்த ஊர். தாத்தாவின் அப்பா அழகு வாத்தியார், தாத்தா பரமன், அப்பாஆதிநாதன், வரிசையில் அவர்களுக்கு அடுத்து 4வது தலைமுறையாக நாட்டுப்புற, தற்காப்பு கலைகளை கற்றுத்தருகிறேன். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு கலைக் கல்லுாரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறேன்.

மதுரையில் 22 ஆண்டுகளாக 'கூடல் கலைக் கூடம்' நடத்தி வருகிறேன். நாடகம், நாட்டுப்புற கலைகளை கற்றுத்தரும் வாத்தியார்களை 'அண்ணாவி' என்பர். இதனால் 'அழகு செல்வம்' ஆகிய நான் 'அழகு அண்ணாவி' ஆகிவிட்டேன். கரகம், ஒயிலாட்டம், மரக்கால் ஆட்டம், பறையாட்டம் என ஆட்டக் கலைகளும், சிலம்பு, மான் கொம்பு என தற்காப்பு கலைகளையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்கிறேன்.

கலைக்குழு சார்பில் மத்திய, மாநில அரசு திட்டங்கள், சுற்றுச்சூழல், எய்ட்ஸ், தாய்சேய் நலம், பேரிடர் மேலாண்மை, முதியோர் கல்வி, போலியோ, கொரோனா விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றி வருகிறோம். சொந்த கதைக் கரு, வசனம் எழுதி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி நாடகங்களை நடத்தியுள்ளோம்.

தென் மாவட்டங்களில் நாட்டுப்புற ஆட்டக் கலைகளில் நுாற்றுக்கணக்கான தலைமை பயிற்சியாளர்களை உருவாக்கியுள்ளேன். அவர்களின் கீழ் ஏராள கலைக் குழுக்கள் செயல்படுகின்றன. தற்போது இக்கலைகளை கற்க இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

பள்ளி, கல்லுாரிகளில் நாட்டுப்புற கலைகள் குறித்த பாடமும் இடம் பெற வேண்டும். இயல், இசை, நாடக மன்றத்தின் கிளையும், டில்லியில் உள்ள தேசிய நாடக பள்ளி (என்.டி.எஸ்.,) மையமும் மதுரையில் அமைய வேண்டும். அதற்கான அத்தனை தகுதியும், பாரம்பரியமும் மதுரை மண்ணிற்கு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கை களால் தமிழகத்தில் பாரம்பரிய நாட்டுப்புற கலைகள் பாதுகாக்கப்படும். நாட்டுப்புற கலைகள் ரசிப்பதற்கு மட்டுமல்ல; மனிதர்கள் உணர்வுகளை மென்மையாக மாற்றும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்கும்.

'கலை வழி மானுடம் வளர்ப்போம்' என்ற நோக்கத்தை முன் வைத்துள்ளோம். இதன் மூலம் மரபு கலைகளை பாதுகாப்பது, இளைய தலைமுறைக்கு கொண்டு செல்வது, ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பது போன்ற இலக்குகளை கொண்டுள்ளோம். அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளில் தமிழ் குழந்தைகளுக்கான அரசு பாடத்திட்டத்தில் நாட்டுப்புற கலைகளை சேர்க்கும் வரைவு திட்டம் எங்கள் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 'கலை வழி மொழி கற்பித்தல்' என்ற எங்களின் பாடத்தொகுப்பும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.

இதுதவிர அமெரிக்காவில் உள்ள கொம்பு மரபிசை மையத்துடன் இணைந்து நாதஸ்வர கலைஞர் சிவசங்கர சுப்பிரமணியம் ஏற்பாட்டில் அந்நாட்டிலுள்ள தமிழ் குழந்தைகளுக்கு ஆன்லைன் வழி நாட்டுப்புற ஆட்டக் கலைகள் கற்றுத்தருகிறோம். சாப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்ட வேலைகளில் உள்ள தமிழ் இளைஞர்களும் ஆன்லைன் வழி இக்கலைகளை கற்கின்றனர். நாட்டுப்புற கலைகள் பல பணிச்சுமைகளுக்கு இடையே நல்லமன அமைதியை தருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழர் மரபு கலைகளுக்கு என்றும் அழிவில்லை என்பது நிதர்சன உண்மை என்கிறார், இந்த 'அண்ணாவி'.

இவரை 94434 54446ல் வாழ்த்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X