புதுடில்லி: திருவண்ணாமலையில் ஓடும் நாகநதி வறண்டு போனதால், வேலூர், திருவண்ணாமலை மக்கள் ஒன்று சேர்ந்து மீட்டெடுத்தமைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இன்றைய ‛மன் கி பாத்' ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும், நாம் மிகவும் கொண்டாட வேண்டிய தினம் உலக நதி தினம். உலக நதிகள் தினத்தை கொண்டாடுவதால், செப்., மாதம் முக்கியமான மாதமாக உள்ளது. நமக்கு தண்ணீர் வழங்கும் நதிகளுக்கு நாம் அளிக்க வேண்டிய பங்களிப்பு குறித்து நினைவு கூற வேண்டிய நாள். ஆண்டுக்கு ஒரு முறை நதி பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது, நதிகள் திருவிழாவை கொண்டாட வேண்டும் . தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு,அதில் கிடைக்கும் தொகை, தூய்மை கங்கை இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
நதிநீர் நாட்டிற்கு மிக முக்கியம். அதனை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது. நதிகளை தூய்மையாக வைத்து கொள்வது நமது கடமை. நதிநீரை வீணாக்காமல், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.மேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானில் நீர் பற்றாக்குறை உள்ளது. கூட்டு முயற்சி மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும். கங்கையை போற்றுவோம் திட்டம் இன்று வெற்றிகரமான திட்டமாக திகழ்கிறது. நதிகளை புண்ணியஸ்தலமாக மக்கள் வழிபடுகின்றனர். கங்கை, யமுனை, ஆகிய நதிகள் புனித நீராடும் இடமாக உள்ளது. அந்த நதிகளை மக்கள் கடவுளாக போற்றுகின்றனர்.

திருவண்ணாமலையில் நாகநதி உள்ளது. ஒரு காலத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்ட இந்த நதி சில ஆண்டுகளுக்கு முன் வறண்டது. வேலூர், திருண்ணாமலை பெண்கள் குழுவினர் ஒன்று சேர்ந்து, தடுப்பணைகள் அமைத்தல் மற்றும் நிலத்தடி நீர் சேகரித்தல் என முயற்சி கொண்டனர். இதன் பலனாக, இன்று அந்த நதி உயிர் பெற்றதுடன், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இது பெருமை அளிக்கிறது. தமிழக சகோதரிகள் போன்று இன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளை பலரும் மேற்கொள்ள வேண்டும்.
காதி மற்றும் கைத்தறி
காதி மற்றும் கைத்தறி ஆடைகளின் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளது. காதி பொருட்களை வாங்கி, நாம் மஹாத்மா பிறந்த நாளை கொண்டாடுவோம். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வது அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. தூய்மை இந்தியா இயக்கத்தை அனைவரும் அர்ப்பணிப்புடன் தொடர வேண்டும். தூய்மையை மக்கள் இயக்கமாக அவர் மாற்றினார்.
தமிழக வீரர் துவாரகேஷ், ஹிமாச்சல் வீரர் உட்பட பலர் சியாச்சின் உச்சிக்கு ஏறி சாதனை படைத்தனர். அவர்கள் முயற்சி வெற்றி பெற்றதை பாராட்டுகிறேன். இது நமக்கு பாடமாக அமைந்து உள்ளது.
கிராமப்புறங்களிலும் மின்னணு பணப்பரிவர்த்தனை தற்போது அதிகரித்து உள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டு உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 350 கோடிக்கும் மேற்பட்ட பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நிதிசார் தொழில்நுட்பம் முன்னேறி வருவது பெருமை அளிக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், உலகிலேயே மிகப் பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.