கோவை : ''கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த, 1,132 கோடி ருபாய் ஒதுக்கி, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது,'' என, கோவையில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
கோவையில், 'கொங்கு குளோபல் போரம்', இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை இணைந்து, மேற்கு மண்டலத்தில் உள்ள எட்டு எம்.பி.,க்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் வேலு, ராமச்சந்திரன் ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு பேசியதாவது:
கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை, தி.மு.க., அரசு எவ்விதத்திலும் புறக்கணிக்கவில்லை. கோவை அவிநாசி ரோடு மேம்பால பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பாலத்தில் ஐந்து இடங்களில் ஏறு வழிகள், இறங்கு வழிகள் ஏற்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். கோவை நகருக்குள் உள்ள ரோடுகளை இணைக்கவும், விரிவாக்கம் செய்யவும் உள்ளாட்சி துறை, மாநகராட்சியின் மறுப்பின்மை சான்று தேவைப்படுகிறது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியை அரசு விரைவுபடுத்தியுள்ளது. நிலம் கையகப்படுத்த தேவையான, 1,132 கோடி ரூபாய் நிதியை மாநில அரசு ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ளது. இந்த பணி நாளை முதல் துவங்கும்.கோவையில் உள்ள எல் அன்ட் டி பைபாஸ் ரோடு தற்போது இருவழி சாலையாக உள்ளது. இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அதை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அமைச்சர் வேலு பேசினார்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி.,க்கள் ராசா, சின்னராஜ், ஜோதிமணி, நடராஜன், சண்முகசுந்தரம், சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொழில்துறை சார்பில், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் பாலசுப்ரமணியம், 'கொடிசியா' தலைவர் ரமேஷ்பாபு, 'சிறுதுளி' அறங்காவலர் வனிதா மோகன், 'சீமா' தலைவர் கார்த்திக், 'சைமா' செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE