புதுடில்லி: டில்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டட பணிகளை, இரவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.
டில்லியில் உள்ள, பார்லிமென்ட் கட்டடம், கடந்த 1927ல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. பழைய கட்டடத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, 971 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லி கட்டடத்தை கட்ட, மத்திய அரசு திட்டமிட்டது. கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி, கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

பழைய கட்டடத்துக்கு அருகிலேயே, கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள், அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் முடிந்து, புதிய பார்லி., செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திற்கு, இன்று(செப்.,26) இரவு 8.30 மணிக்கு, பிரதமர் மோடி நேரில் சென்றார். தலைக்கவசம் அணிந்தபடி, சுமார் ஒரு மணி நேரம் அங்கு செலவிட்ட மோடி, கட்டுப்பான பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும், பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடனும் அவர் உரையாடினார். புதிய பார்லி., கட்டட தளத்திற்கு, பிரதமர் மோடி வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE