பயணங்கள் தொடரட்டும் இன்று உலக சுற்றுலா தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயணங்கள் தொடரட்டும் இன்று உலக சுற்றுலா தினம்

Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
மனித வாழ்வில் யதார்த்தங்களைத் தாண்டிய யுகமாக உருவெடுத்திருப்பது கடந்த இரு ஆண்டுகளே. கனவிலும் கண்டிராத புதுப்புது அனுபவங்கள், தலைக்கவசத்தோடு உயிர்க்கவசமான முகக்கவசம், தலைகீழாய் மாறிப்போன வர்த்தக நிலைமை, தலைதுாக்கிய இணையதளக் கல்வி முறை, தடம் தெரியாமல் போன பல தொழில்கள், புதுப்பரிமாணம் பெற்ற தொழில்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.பலமாய் பாதிக்கப்பட்ட துறைகளுள்
 பயணங்கள் தொடரட்டும்  இன்று உலக சுற்றுலா தினம்

மனித வாழ்வில் யதார்த்தங்களைத் தாண்டிய யுகமாக உருவெடுத்திருப்பது கடந்த இரு ஆண்டுகளே. கனவிலும் கண்டிராத புதுப்புது அனுபவங்கள், தலைக்கவசத்தோடு உயிர்க்கவசமான முகக்கவசம், தலைகீழாய் மாறிப்போன வர்த்தக நிலைமை, தலைதுாக்கிய இணையதளக் கல்வி முறை, தடம் தெரியாமல் போன பல தொழில்கள், புதுப்பரிமாணம் பெற்ற தொழில்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.பலமாய் பாதிக்கப்பட்ட துறைகளுள் முக்கியமானதொன்று
சுற்றுலாத்துறை.

சுற்றமும், சுற்றுலாவும் மனிதனின் மனதிற்கு புத்துணர்வூட்டும் கண்கள். சுற்றம் சூழ வாழ்வதும், சுற்றுலாவில் இணைவதும் மனிதனின் தலையாய பண்புகள். வாழ்வில் பயணிக்கத் தவறியவர்கள் இறைவனின் படைப்பைப் பருகத் தவறியவர்கள் என்றே கூறலாம். மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகும், பல்வேறு கலாசார உண்மைகளும் காட்சியாக்கப்படுவது நம்முடைய பயணங்களில்தான். பயணிப்பதன் நோக்கம் பொழுது போக்குவதற்கல்ல, அறிவை விசாலமாக்குவதற்கும், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் மூளையின் அயர்வைப் போக்கு
வதற்குமேயாகும்.


கொலம்பஸின் பயணம்

ஆதிகால மனிதனின் பயணமே பரிணாம வளர்ச்சியானது. பயணமே புதிய கண்டுபிடிப்பானது. கொலம்பஸின் பயணம் புதிய இடங்களைக் கண்டறிந்தது.கட்டுச்சோற்றைக் கட்டிக்கொண்டு கட்டை வண்டியில் பயணம் செய்த காலம் முதல் கணப்பொழுதிலும் உலகை வட்டமிடும் காலம் வரை சுற்றுலா என்றாலே மகிழ்ச்சிக்கு வானமே எல்லை.

சுற்றுலாக்கள் சந்தோஷத்தை மட்டுமல்ல, அறிவின் பார்வையையும் விசாலமாக்குகிறது. அரண்மனைக்குள் இருந்த சித்தார்த்தன் நகர்வலம் வந்து உலக அறிவைப் பெற்ற பின் புத்தராக மாறினார். சுதந்திர தாகத்தை நாடு முழுவதும் பரப்பச் சென்ற காந்தியின் கனிவான பார்வையில் பட்ட அரையாடை மனிதர்களால் மகாத்மாவின் 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் மனப்பாங்கை உலகம் அறிந்தது.

பலபெருந்தலைவர்கள் மேற்கொண்ட அறிவார்ந்த சுற்றுலாதான் இந்தியாவில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத் தலங்களின் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த அளவிற்கு ஒரு நாட்டின் சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு வருவாயும் அதிகமாகிறது.


வாழ்க்கை பாடங்கள்

நாட்டின் கலாசாரப் பெருமையையும், கலைகளின் பாங்கையும் உணர்த்துவது சுற்றுலா மையங்களே. பல நாடுகளைத் தொட்டபலரின் பயணக்கட்டுரைகள் வாழ்க்கைப் பாடங்களாக மாறியுள்ளன. இந்த கோவிட் கால கட்டத்தில் மட்டும் சுற்றுலா இல்லாததன் காரணமாகபல கோடி பொருளாதார இழப்பு உலக அளவில் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாவை நம்பியுள்ள பல கிளைத் தொழில்களான உணவகங்கள், போக்குவரத்து,
சாலையோரக்கடைகள் என பலரின் தாக்கமும் இதில் அடங்கும். ஒரு நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் நேர்மறை தொடர்பு கொண்டவை.அறிவார்ந்த சுற்றமும், அறிவார்ந்த சுற்றுலாவும் நாம் நம் சந்ததியினருக்குத் தரும் அரிய பொக்கிஷங்களாகும். வெறும் பயணங்களோடு நில்லாமல் அதைப்பற்றிய அனுபவங்களையும் நாம் பதிவிடுவது அவசியமாகும்.

பலரின் பயண அனுபவங்கள் மிகச்சிறந்த வாழ்க்கைப்பாடங்களாக மாறியுள்ளன. தனக்கென ஒரு சொகுசான சூழலைத்தாண்டி அனைத்து சூழலிலும் வாழ முடியும் என்ற புரிதலைப் பயணங்கள் தருகின்றன. உண்மையில் பயணங்கள் உலகை மட்டும் அல்ல நம்மை நமக்கே அறிமுகப்படுத்துகின்றன. மனநலத்தைக் காப்பதற்கான அருமருந்து நமது பயணங்களே ஆகும். கடுமையான வேலைப்பளுவிற்கிடையில் எடுக்கப்படும் சிறிய பயணங்கள் கூட பெருமளவு மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. டோபோமைன், செரடோனின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் நம்முடைய பயணங்களின்போது அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


கிணற்று தவளையாய்

ஒரு கிணற்றில் நிறைய தவளைகள் வாழ்ந்து கொண்டிருந்தன. அப்பொழுது திடீரென பெரிய ஏரியில் இருந்த தவளை ஒன்று தெரியாமல் அடித்து வரப்பட்டு கிணற்றுக்குள் சிக்கியது. அந்த புது தவளை எப்படியாவது இங்குள்ள மற்ற தவளைகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள உரையாடத்துவங்கியது. நான் இருந்த இடம் இதை விடப் பெரிய இடம், அங்கு கண்ணுக்கு
எட்டும் துாரம் வரை தண்ணீர் இருக்கும். மிக அரிய சுவையான பூச்சிகளும், புழுக்களும்
உண்ணக்கிடைக்கும் என்று பெருமை பேச ஆரம்பித்தது.

இதைக் கேட்ட மற்ற கிணற்றுத் தவளைகள் அப்படி ஒன்று இருக்கவே முடியாது, எங்கள்
இடம்தான் இருப்பதிலே சிறந்தது.நீ பொய் சொல்கிறாய் என்றன. கிணற்றைத் தவிர எதுவுமே
தெரியாத உங்களுக்கு நான் சொல்வது புரியாது என்று கூறியதுமே, மற்ற தவளைகளுக்கு கோபம் வந்தது, ஒருநாள் கிணற்று நீர் வற்றத் துவங்கியது.

அப்போது அந்தப் புதுத்தவளை மற்ற தவளைகளை என்னுடன் வாருங்கள் நான் இதைவிடப் பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்றது. ஆனால் அதை நம்பாத மற்ற தவளைகள் நீரின்றி உணவின்றி இறந்தன. அந்த புதுத்தவளை மட்டும் வேறு வழியில் தப்பி உயிர்
பிழைத்தது.

ஆம், நாம் உலகளாவிய அறிவைப் பெறும்போது நம்மைச் சுற்றிஇருப்பவர்களுக்கும்,
குடும்பத்தினருக்கும் அந்தப் புரிதலைத் தர வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில் கிணற்றுத் தவளையாகவே பலர் வாழ்ந்து மடிவதுண்டு.பயணங்கள் சிலரை பக்குவப்படுத்தும்; சிலருக்கு பாடமாகும். பயணப்படுங்கள்! மீண்டும் உங்கள் பயணங்கள் தொடரட்டும்!

- லாவண்ய ஷோபனா திருநாவுக்கரசு
எழுத்தாளர், சென்னை

shobana.thiruna@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X