பொது செய்தி

தமிழ்நாடு

விதையாய் விழுந்து... மரமாய் எழுந்து...

Added : செப் 27, 2021
Share
Advertisement
கோவை:முடியுமிடத்தில் தொடங்குகிறது கொழுந்து. பூமிக்குள்ளே புதைக்கப்பட்ட விதை, மண்ணை முட்டி முட்டி மோதி வெளியே வந்து துளிர் விடும்போது கொழுந்து ஆகிறது. ஆனால் கோவையின் 'கொழுந்து' அமைப்பு, இறந்தோரைப் புதைக்கும் பூமியை, விதைகளின் புதையல் காடாக மாற்றிக் கொண்டிருக்கிறது. புலியகுளம் கல்லறைத் தோட்டம்...கிறிஸ்தவர்களை அடக்கம் செய்யும் இந்த வளாகத்தின் பல பகுதிகள் புதர்
 விதையாய் விழுந்து... மரமாய் எழுந்து...

கோவை:முடியுமிடத்தில் தொடங்குகிறது கொழுந்து. பூமிக்குள்ளே புதைக்கப்பட்ட விதை, மண்ணை முட்டி முட்டி மோதி வெளியே வந்து துளிர் விடும்போது கொழுந்து ஆகிறது. ஆனால் கோவையின் 'கொழுந்து' அமைப்பு, இறந்தோரைப் புதைக்கும் பூமியை, விதைகளின் புதையல் காடாக மாற்றிக் கொண்டிருக்கிறது. புலியகுளம் கல்லறைத் தோட்டம்...கிறிஸ்தவர்களை அடக்கம் செய்யும் இந்த வளாகத்தின் பல பகுதிகள் புதர் மண்டிக் கிடந்தன. அதில் ஒரு பகுதியை சுத்தம் செய்து, அங்கு நர்சரி அமைத்து பல இடங்களிலும் மரங்களை நடுகிறது இந்த அமைப்பு.எந்தவொரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் தேடாமல் அமைதியாக இந்தப் பணியை பல ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறார் சிவக்கொழுந்து, 49.சொந்தமாக டெம்போ வைத்துள்ள சிவக்கொழுந்துவுக்கு, சிறு வயதிலிருந்தே மரங்களின் மீது மாறாத பற்றுதல். மரக்கன்றுகளை வாங்கி, ஓரிடத்தில் நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்ப்பதை தன் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரே விதைகளை வாங்கி, நாற்றுக்களாக மாற்றி, அவற்றை நடத்துவங்கிய போது முளைத்தெழுந்ததுதான் 'கொழுந்து' அமைப்பு.இயற்கையை நேசிக்கும் பலரும், இதில் இணைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர், சிறுமியர். அவர்கள்தான் மரங்களை வைத்து ஆர்வமாக வளர்ப்பதாகச் சொல்கிறார் சிவக்கொழுந்து.சுங்கம், புலியகுளம் பகுதிகளில் உள்ள கல்லறைத் தோட்டங்கள், மயானங்கள், பள்ளி மைதானங்கள், பூங்காக்கள் என பல இடங்களிலும் இதுவரை ஐந்தாயிரம் மரங்களை இவர்கள் வளர்த்தெடுத்துள்ளனர். புங்கன், வேம்பு, மலை வேம்பு, பூவரசு, சரக்கொன்றை, நாவல் என நம் மண்ணின் மரங்களைத்தான் நட்டு வளர்க்கிறது இந்த அமைப்பு. சுதந்திர தினம், குடியரசு தினம், கலாம் பிறந்தநாள், பிரதமர் மோடியின் பிறந்தநாள் உட்பட முக்கியமான நாட்களில் எல்லாம், இடங்களைத் தேடித்தேடி மரம் வைக்கிறார்கள். கோவையின் குளக்கரைகளில் பனை விதைகளையும் நட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.''என்னோட டெம்போவுக்கு நான்தான் ஓனர். ஓரளவுக்கு வருமானம் வருது. சொந்தமா வீடு இருக்கு. பெருசா கடன் இல்லை. அதனால மரக்கன்று வளர்க்குற வேலைக்கு எனக்குத் தடையா யாரும் இருக்குறதில்லை. கோவையில எங்கெங்கே மரம் வைக்க முடியுமோ, அங்கெல்லாம் மரம் வச்சு வளர்த்து, நம்ம ஊரை இன்னும் குளுமையாக்கணும்கிறதுதான் என்னோட ஆசை.சிட்டிக்குள்ள ஆடு, மாடு வளர்க்குறவுங்க, கொஞ்சம் கூட சமூக அக்கறையில்லாம ரோட்டுல விட்டுர்றாங்க. நாங்க கஷ்டப்பட்டு வளர்க்குற மரக்கன்றுகளை அந்த ஆடு, மாடுகள் மேய்ஞ்சு காலி பண்ணிருது. ஒரு நாள், 900 மரக்கன்றுகளை ஆடுகள் மேய்ஞ்சு துவம்சம் பண்ணிருச்சு. ரொம்பவே நொந்து போயிட்டோம்.நம்ம சுதந்திரத்தோட பவளவிழாவை முன்னிட்டு, அடுத்த ஆகஸ்ட்டுக்குள்ள மூவாயிரம் மரங்களை வச்சு வளர்க்க முடிவு பண்ணி, நாற்று போட்டிருக்கோம். இந்த ஆடு மாடுகள்ட்ட இருந்து காப்பாத்துறதுக்காக வேலி போட்டிருக்கோம்.எப்படியும் அடுத்த வருஷத்துக்குள்ள, மூவாயிரம் மரங்களை வைக்கணும்னு இப்போ சுந்தராபுரம், காளப்பட்டியில பல இடங்களைத் தேர்வு பண்ணிருக்கோம்.ஒண்ணு ரெண்டுன்னு, யார் நாற்று கேட்டாலும் இலவசமா கொடுக்குறோம். நாங்க அவுங்கள்ட்ட கெஞ்சிக் கேக்குறதெல்லாம், மரக்கன்று பெருமைக்கு வைக்கிறதில்லை. வச்சா அதை கடைசி வரைக்கும் வளர்த்து மரமாக்கணும்கிறதுதான்!'' என்று கோரிக்கையோடு முடித்தார் சிவக்கொழுந்து. (தொடர்புக்கு: 9585765660)அவர் சொல்வதை ஆமோதிப்பதைப் போல, தலையாட்டிக் கொண்டிருந்தன அவர் வளர்த்தெடுக்கும் மர நாற்றுக்கள்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X