சிக்க மாட்டார்கள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

சிக்க மாட்டார்கள்!

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (1)
என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் வர வேண்டும் என கூறிய தி.மு.க., இப்போது ஆளுங்கட்சியாக வந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?' என்று நியாயம் கேட்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் பாலாறும் தேனாறும்
 இது உங்கள் இடம்

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் வர வேண்டும் என கூறிய தி.மு.க., இப்போது ஆளுங்கட்சியாக வந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?' என்று நியாயம் கேட்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட செய்வோம்' என்பது போல எத்தனையோ வாக்குறுதிகளை, தி.மு.க., அள்ளி வீசி இருக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் கூட, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்வோம்' என கூறியிருந்தது.ஆட்சிக்கு வந்ததும் என்ன ஆனது, 'அது சாத்தியம் இல்லை' என கையை விரித்து விட்டார், நிதி அமைச்சர் தியாகராஜன்.

காரணம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால், தமிழக அரசின் கஜானா காலியாகி விடுமாம்.'நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்வோம்' என மேடைதோறும் முழங்கினர், தி.மு.க.,வினர். ஆட்சிக்கு வந்ததும், 'நீட் தேர்வை துணிந்து எழுதுங்கள்' என்கின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த ஏழு கொலையாளிகளை விடுதலை செய்ய, தி.மு.க., எடுத்த முயற்சிகள் எல்லாம், 'அம்பேல்' ஆகி விட்டன.

'இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும்' என்ற வாக்குறுதியும், 'போண்டி' ஆகி விட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது, தமிழக மக்களுக்கு சேவை செய்ய அல்ல; முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் அழகிய நினைவு மண்டபம் கட்டவும், அவர் பெயரில் நுாலகம் அமைக்கவும் தான்.

இது புரியாமல், 'நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆச்சு' என மக்கள் கேட்டால், 'அது வேற வாய்; இது நாற வாய்' என, காமெடி நடிகர் வடிவேலு பாணியில் பதில் சொல்வர், தி.மு.க.,வினர்.'குடி'காரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல, அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள், ஆட்சியில் அமர்ந்ததும் காணாமல் போய் விடும்.

உறுதியாக ஒன்றை மட்டும் சொல்லலாம். ஐந்து ஆண்டுகள் முடிவில், தி.மு.க., அமைச்சர்கள் தங்கள் சொத்தை 1,000 சதவீதம் உயர்த்தி இருப்பர். விஞ்ஞான ரீதியாக கொள்ளை அடிப்பதால், அவ்வளவு சுலபமாக சிக்கி கொள்ளவும் மாட்டார்கள்.இத்திட்டம் வேலைக்கு ஆகாது!


கே.வி.எஸ்.தியாகராஜன், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: 'அரசு அலுவலகங்களில் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை' என்ற திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாம்.அதாவது, நான்கு நாட்களில் தினந்தோறும் 12 மணி நேரம் வேலை, மூன்று நாட்கள் முழுமையான விடுமுறை அளிக்க உள்ளனராம்.

தற்போது அரசு அலுவலகங்களில், வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வேலை நடைபெறுகிறது. வங்கிகளில், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறைகளாகும்.சாதாரண வாழ்க்கை தரம் அமைந்துள்ள தேசத்தில், மக்கள் பல விதங்களிலும் அரசு துறையை அணுக வேண்டியுள்ளது.

அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் பணி நடக்கும்போதே, ஆமை வேகத்தில் தான் கோப்புகள் நகரும். இதில், நான்கு நாட்கள் மட்டும் தான் பணி என்றால் கேட்கவே வேண்டாம்.பணி நாட்கள் குறைப்பால், அரசு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்; ஊழியர்களுக்கும் பதற்றத்தை தரும்.தினமும் 12 மணி நேர வேலை என்பதும், எந்த விதத்திலும் பயன்படாது. எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி செய்வது ஊழியர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும்; செயல் திறனை வெகுவாக குறைக்கும்.

சீனாவில் அத்தியாவசிய துறைகள் ஞாயிற்றுக்கிழமையிலும் செயல்படுகின்றன. அன்று நடக்கும் வேலைக்கு, 'ஹாலிடே பீஸ்' என தனியாக சிறு ஊதியம் அளிக்கின்றனர். இதனால் ஞாயிற்றுக்கிழமையிலும் பலர் வேலை செய்ய முன்வருகின்றனர்.இந்தியாவில் 70 சதவீத மக்கள் அன்றாட தேவைக்கே கஷ்டப்படும் போது, எல்லா சலுகைகளும், நல்ல வருமானமும் பெறும் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் தான் வேலை என தீர்மானிப்பது, மிகவும் வேதனையானது. மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.அனைத்து தேர்வுகளும் ரத்தாகுமா?


ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து, பிளஸ்- 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லுாரிக்கு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்' என, தி.மு.க., அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டது.

ஆக, தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது. இனி மத்திய அரசின் மீது பழியை துாக்கி போட்டு, தி.மு.க., தப்பித்து கொள்ளும். என்ன ஒரு ராஜதந்திரம்!தி.மு.க., ஆட்சியாளர்களிடம் சில கேள்விகள்...
* சட்ட நிபுணர்களான நளினி சிதம்பரமும், ஆ.ராஜாவும், 'நீட் தேர்வு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் முடிந்து விட்டது; இனி ஒன்றும் செய்ய முடியாது' என சொன்னதை, தி.மு.க.,வினர் நம்பவில்லையா?

* தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தோல்வியடையும் மாணவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி விட்டது. எனவே இந்த ஆட்கொல்லி தேர்வுகளும் இனி கிடையாது என, தி.மு.க., அரசு அறிவிக்குமா?
* டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி எழுதியே கையெல்லாம் தேய்ந்து போன லட்சக்கணக்கான இளைஞர்கள் விரக்தியின் விளிம்பில் இருக்கின்றனர். இனிமேல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா?
* பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையிலும், வயது மூப்பின் அடிப்படையிலும், அரசு பணி வழங்கப்படும் என, தி.மு.க., அரசு அறிவிக்குமா?l தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்தாலும், பிற மாநில மருத்துவ கல்லுாரிகளில் உள்ள 16 ஆயிரத்து 500 சீட்டுகளுக்கு நம் மாணவர்கள் எப்படி தேர்வாக முடியும்?
* நீட் தேர்வுக்கு முன் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 75 லட்சம் ரூபாய் நன்கொடை வசூலிக்கப்பட்டது. நீட் தேர்வை ஒழித்த பின், நன்கொடை வசூலிக்கும் மருத்துவக் கல்லுாரிகளை இழுத்து மூடுவோம் என அறிவிக்க, தி.மு.க., அரசுக்கு திராணி இருக்கிறதா?மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா தி.மு.க., ஆட்சியாளர்களே?


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X