அணை பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ., கடிதம் - Jayalalitha | Dam safety bill 'detrimental' to TN interests | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணை பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ., கடிதம்

Updated : ஜூலை 30, 2011 | Added : ஜூலை 30, 2011
Share
Dam safety bill 'detrimental' to TN interests,அணை பாதுகாப்பு மசோதா: ஜெ., எதிர்ப்பு

சென்னை:"அணைகள் பாதுகாப்பு மசோதாவில், தமிழக நலனுக்கு எதிராக அமைந்துள்ள, சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை மாற்றியமைக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:நீர்வளத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கும், அணைகள் பாதுகாப்பு மசோதாவில், பல உட்பிரிவுகளை மாற்ற வேண்டும். மசோதாவில் 26(1) உட்பிரிவில், "அணைகளின் பாதுகாப்பு, அணை ஆய்வு, அறிக்கை தாக்கல், பரிந்துரைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள், அணை அமைந்துள்ள மாநிலத்தின் அணை பாதுகாப்பு கமிட்டியின் அதிகார எல்லைக்குட்பட்டது. இதற்கான முழு ஒத்துழைப்புகளும், சம்பந்தப்பட்ட மாநில அணை பாதுகாப்பு கமிட்டியல்லாத அமைப்புகள் மற்றும் அணையின் உரிமையாளர்களால் வழங்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.இதன்படி, அணை அமைந்துள்ள மாநிலம் மட்டுமே, அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் நேரடியாகத் தலையிட முடியும் என தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு மற்றும் பேருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள், தமிழகத்துக்கு சொந்தமானது மட்டுமின்றி, அணை பராமரித்தல் மற்றும் இயக்கப் பணிகளையும் தமிழக அரசே மேற்கொள்கிறது.


ஆனால், இந்த அணைகள், கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளன. இதனால், புதிய அணை பாதுகாப்பு மசோதா அமலுக்கு வரும் பட்சத்தில், இந்த அணைகள் தொடர்பாக, வருங்காலத்தில் தமிழகத்திற்கு எண்ணிலடங்காத பிரச்னைகள் ஏற்படும்.எனவே, இந்த மசோதாவில், 26(1) உட்பிரிவை, "அணைக்கு சொந்தமான மாநிலம், பராமரிக்கும் மற்றும் அணையை இயக்கும் மாநிலம் ஆகியவற்றின் அதிகாரத்தின் கீழ், அணை பாதுகாப்பு, மேம்படுத்துதல், பராமரித்தல், ஆய்வு போன்ற நடவடிக்கைகளை கொண்டு வரும்படி, மாற்றியமைக்க வேண்டும்.இதேபோல், அங்கீகாரம் பெற்ற மத்திய அணை பாதுகாப்பு கமிட்டியின் பிரதிநிதி, சம்பந்தப்பட்ட அணை இருக்கும் மாநிலத்தின் அணை பாதுகாப்பு கமிட்டி பிரதிநிதி, அணையை சொந்தமாக்கி, பராமரித்து இயக்கும் மாநில பிரதிநிதி ஆகியோர், அணை பாதுகாப்பு, ஆய்வு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அங்கீகாரம் தரும் வகையில், 26(2) உட்பிரிவை மாற்ற வேண்டும். இதேபோல், 26(3), 26(4) மற்றும் உட்பிரிவு 13 ஆகியவற்றிலும், இதே போன்ற மாற்றங்களை செய்ய வேண்டும்.மேலும், 26(6) உட்பிரிவில், "அணை பராமரிப்பு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர், அணை அமைந்துள்ள இடத்தின் வனப்பகுதிகள் மற்றும் சரணாலய பகுதிகளுக்குள் சென்று, அணை பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ளத் தடையில்லை' என்பதை சேர்க்க வேண்டும்.இதன்படி, தமிழக நலனை பாதுகாக்கும் வகையில், அணை பாதுகாப்பு மசோதாவில், திருத்தங்கள் மற்றும் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X