அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவம், இன்ஜினியரிங் கல்விக்கு, 7.5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், ஏழை குழந்தைகள் பெரும்பாலானோர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு எவ்வித இட ஒதுக்கீடும் அளிக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
'இதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் கொடுத்து விடுவார். அவர் கேட்பதையும் கொடுப்பார்; கேட்காததையும் கொடுப்பார்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
ஒரு நாளைக்கு, 10 வீடுகளில் உள்ளவர்களை தொண்டர்கள் சந்தித்து, ஓட்டு சேகரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தான் சட்டசபையில், அ.தி.மு.க.,வுக்கு மதிப்பு கூடும்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி
'அப்போ, உள்ளாட்சி தேர்தல், அ.தி.மு.க.,வுக்கு அக்னிப்பரீட்சை என சொல்லுங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி பேச்சு.
இந்தியாவில், கொரோனாவின் இரண்டவது அலை இன்னும் முடியவில்லை என, மத்திய சுகாதாரச் செயலர் கூறியிருக்கிறார். எனவே, மக்கள் விழிப்புணர்வோடு செயல்படுவது மட்டுமல்லாமல், மத்திய, மாநில அரசுகளின் கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
- த.மா.கா., தலைவர் வாசன்
'எங்கே சார் பின்பற்றுகின்றனர்... எங்கு பார்த்தாலும் கூட்டமாகத் தான் இருக்கின்றனர். சமூக இடைவெளி போன்ற நெறிமுறைகளை தலைவர்களே பின்பற்றுவதில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.
'நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., அல்ல; தி.மு.க., எம்.பி.,' என நீதிமன்றத்தில் கூறிய ரவிகுமார் கலந்து கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சிகளில் அவர், வி.சி.,யை சேர்ந்தவர் என்றே குறிப்பிடப்படுகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

'இது தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்களுக்கும் உள்ள பிரச்னை; பா.ஜ.,வுக்கு தேவையில்லாதது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.
டில்லியில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் பிற காரணங்களால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் டில்லி மூச்சு திணறுகிறது. இதை அறியாமல், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளார் முதல்வர் கெஜ்ரிவால். காரணம் பட்டாசு தயாரிப்பாளர்கள் குரல் டில்லியில் எடுபடுவதில்லை.
- விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்
'உண்மை தானே... பழைய வாகனங்களை எல்லாம் ஓடக்கூடாது என நிறுத்தி விட்டார். புகை கக்கும் ஆலைகளை நிறுத்த முன்வரவில்லை...' என, சொல்லத் துாண்டும் வகையில், விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE