தேர்தலுக்காக நிகழ்ந்த முதல்வர் மாற்றங்கள்

Added : செப் 27, 2021
Share
Advertisement
குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திரபாய் படேல் சமீபத்தில் பதவியேற்றார். கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலை விஜய் ரூபானி கட்டுப்படுத்தவில்லை; கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் சரியாக செயல்படத் தவறியது உட்பட பல விஷயங்களில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்ததால், மாற்றப்பட்டதாகக்

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திரபாய் படேல் சமீபத்தில் பதவியேற்றார். கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலை விஜய் ரூபானி கட்டுப்படுத்தவில்லை; கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் சரியாக செயல்படத் தவறியது உட்பட பல விஷயங்களில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்ததால், மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. குஜராத் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழ்நிலையில் விஜய் ரூபானி தலைமையில் தேர்தலை சந்தித்தால் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்பதால் அவரை மாற்றி, பூபேந்திரபாய் படேலை பா.ஜ., மேலிடம் முதல்வராக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பூபேந்திரபாய் படேல் பாடிதார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் போது, அந்த சமுதாய ஓட்டுகளை அள்ளலாம் என்பதும் பா.ஜ., மேலிடத்தின் கணக்கு.

அதேபோல, பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் முதல்வராக பதவி வகித்த அமரீந்தர் சிங் மாற்றப்பட்டு, புதிய முதல்வராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் பதவியேற்றுள்ளார். இந்த மாநிலத்தில் பதவியேற்றுள்ள முதல் தலித் முதல்வர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அதனால் தான் இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த மாற்றத்தின் வாயிலாக, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நிலவிய கோஷ்டி பூசலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் தலித் சமூகத்தினர், 33 சதவீதம் பேர் உள்ளனர்.

காங்கிரசுக்கு போட்டியாக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், துணை முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவார் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பா.ஜ., கட்சியும், மக்கள் தங்களுக்கு ஆதரவாக ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தால், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக்கப்படுவார் எனக் கூறியுள்ளது. இப்படி தலித்துகளை மையமாக வைத்து கட்சிகள் அரசியல் செய்வதால், காங்கிரஸ் கட்சியும் வேறு வழியில்லாமல் இப்போதே அந்த ஆயுதத்தை கையில் எடுத்து, மற்ற கட்சிகளை முந்தி, தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்கியுள்ளது. இதனால், முதல்வராகியுள்ள சரண்ஜித் சிங், தலித் சமூக ஓட்டுகளை காங்கிரசுக்கு ஆதரவாக திரட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பிற்கும், எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பை முறியடிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகியுள்ளார்.

ஆனால், பகுஜன் சமாஜ் தலைவர் உள்ளிட்ட பஞ்சாப் எதிர்க்கட்சி தலைவர்களோ, காங்கிரசின் புதிய முதல்வர் தேர்வு தேர்தல் நேர நாடகம். காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மற்றொருவர் முதல்வராக்கப்படுவார். அதனால், அக்கட்சியை நம்ப வேண்டாம் என, பிரசாரம் செய்யத் துவங்கி உள்ளனர். எனவே பஞ்சாப் தேர்தலில் மட்டுமின்றி, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் கடும் சவால்களை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

உ.பி., மாநிலத்தில் ஒரு காலகட்டத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று வந்த காங்கிரஸ், 2017 சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 403 இடங்களில் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், அந்த மாநிலத்திலும் குறிப்பிட்ட அளவு இடங்களைப் பெற கடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்தத்தில், அடுத்த ஆண்டு நடைபெற சட்டசபை தேர்தலை சந்திக்க, மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.,வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தயாராகி விட்டன என்பதன் துவக்கமே இந்த மாற்றங்கள் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், பஞ்சாபில் காங்கிரசும், குஜராத்தில் பா.ஜ.,வும் மீண்டும் ஆட்சியை பிடிக்கவில்லை எனில், அது அக்கட்சிகளுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படும். இந்த விஷயத்தில் இரு கட்சிகளுக்குமே கவுரவ பிரச்னை உள்ளது. அதை மனதில் வைத்தே முதல்வர் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. இந்த மாற்றங்கள் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகுமா என்பது மக்களின் முடிவை பொறுத்தது என்றாலும், இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சியை பிடிக்க பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X