சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அன்னதானத்தால் யாருக்கு பலன்?

Added : செப் 27, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
அன்னதானத்தால் யாருக்கு பலன்?முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருத்தணி, திருச்செந்துார், சமயபுரம் கோவில்களில் மூன்று வேளை அன்னதானம் தரும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் துவக்கி வைத்துள்ளது; நல்ல விஷயம் தான்.'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்பது போல, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு சாப்பாடு போடுவது


அன்னதானத்தால் யாருக்கு பலன்?முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருத்தணி, திருச்செந்துார், சமயபுரம் கோவில்களில் மூன்று வேளை அன்னதானம் தரும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் துவக்கி வைத்துள்ளது; நல்ல விஷயம் தான்.
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்பது போல, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு சாப்பாடு போடுவது புண்ணியமான செயல் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால், தமிழக அரசின் இந்த திட்டத்தால், உண்மையில் பயனடைய போவது யார் என்பதில் சந்தேகம் உள்ளது.

உடுப்பி, தர்மஸ்தலா, சிருங்கேரி, மந்திராலயம், திருப்பதி போன்ற பிற மாநில ஆலயங்களில் அளிக்கப்படும் அன்னதானத்திற்கும், நம் தமிழக ஆலயங்களில் அளிக்கப்படும் அன்னதானத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
பிற மாநில கோவில்களில், பக்தர்களை இன்முகத்துடன் வரவேற்று, அன்பாக உணவு பரிமாறப்படுகிறது; உணவும் தரமாக, சுவையாக இருக்கிறது.
தமிழக கோவில்களில், பெரும்பாலும் பிச்சைக்காரர்களும், சுற்றியுள்ள கடைக்காரர்களும் தான் அன்னதானம் சாப்பிடுகின்றனர். இன்னும் சில கோவில்களில் தயாரிக்கப்படும் உணவு, அலுவலர்களின் வீட்டுக்கு தினமும் எடுத்து செல்லப்படுகின்றது.
இப்போது புதிதாக தமிழக அரசு துவங்கியுள்ள இந்த திட்டமும், அப்படித் தான் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தினமும் 7,500 பேருக்கு சாப்பாடாம். கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இதில், ஆளுங்கட்சியினரும், அரசு அதிகாரிகளும் அடிக்க போகும் கொள்ளையை நினைத்து பாருங்கள்.
கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் மூடப்பட்டிருக்கிறது. மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருவர். இப்போது, பக்தர்கள் வருகை மிக குறைவாக தான் இருக்கும்.
கோவிலில், ஒரு வேளைக்கு 2,500 பேருக்கு உணவு என்பதெல்லாம் அகலக்கால். நிச்சயமாக இத்தனை பேருக்கு உணவு தயாராக போவதில்லை. அதிகாரிகள் அப்படி கணக்கு காட்டி அரசு நிதியை, 'ஸ்வாஹா' செய்வர்.
நம் தமிழக கோவில்களில், பக்தர்களை விட, சோம்பேறியாய் சுற்றித் திரியும் கும்பல் உடல் வளர்க்க தான், அன்னதானம் திட்டம் உதவும்.சோம்பேறிகளை வளர்க்கும், அதிகாரிகள் மோசடி செய்ய வாய்ப்பை கொடுக்கும் இந்த அன்னதான திட்டத்தை நிறுத்துங்கள்.சாப்பாட்டுக்கு பதிலாக, வருகிற பக்தர்களுக்கு புளியோதரை, தயிர்சாதம்,பொங்கல் போன்ற பிரசாதங்களை பொட்டலமாய் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.
கோவிலுக்கு வரும் பக்தனிடம் தரிசனத்துக்கு பணம் வாங்குவதை நிறுத்துங்கள்; அதுஇந்த அன்னதானத்தை விடவும் உத்தமமானது.


'வாலை' ஒட்ட நறுக்கணும்!மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரையில் பெறப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதை, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக அளித்தபோதே, கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் பெற்றிருந்த மக்கள் அசலோ, வட்டியோ செலுத்தாமல், ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தனர்.
மக்கள் இப்படி இருந்தால், லஞ்சம், ஊழலில் பழம் தின்று கொட்டை போட்ட அதிகாரிகள் சும்மா இருப்பரா?போலி ஆவணங்கள் தயார் செய்து, பல லட்சம் ரூபாய் நகைக் கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.ஒரே, 'ஆதார்' எண்ணை பயன்படுத்தி, பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகைக் கடன் பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தோர், பல கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்து, வங்கி ஊழியர்களே மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
நகைக் கடனை செலுத்த முடியாமல் தவித்த விவசாயிகளுக்காக, முதல்வர் ஸ்டாலின் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். இதில் குறுக்கு புத்தி உடைய கூட்டுறவு வங்கி அதிகாரிகளும், செயலர்களும், அரசை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின், 'வாலை' ஒட்ட நறுக்க வேண்டியது, நேர்மையான, வலிமையான அரசின் கடமை.இவ்விஷயத்தில் அரசு காட்டும் கண்டிப்பு தான், மோசடி அதிகாரிகளுக்கு கிலியை ஏற்படுத்தும்.


தலித் ஓட்டுகள் மீது கண்!-வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சோஷியல் இன்ஜினியரிங் டெக்னிக்' என்ற சமூக பொறியியலை, முதல்வர் தேர்வு, மத்திய அமைச்சர் தேர்வு ஆகியவற்றில் பா.ஜ., பயன்படுத்தி வந்தது. இப்போது அந்த கலையை காங்கிரசும் கையில் எடுத்துள்ளது.தலித் சீக்கியரான சரண்ஜித் சிங் சன்னியை, பஞ்சாப் முதல்வராக ஆக்கியுள்ளது காங்கிரஸ். 2003 - -2004ல் முதல் தலித் முதல்வராக, மஹாராஷ்டிராவில் சுஷில்குமார் ஷிண்டேயை அமர்த்தியது காங்கிரஸ். பல ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும், 'தலித்துகளின் காவலன்' என்ற 'இமேஜை' தேடுகிறது காங்கிரஸ்.
சட்டசபை தேர்தல் நடக்க உள்ள உ.பி., மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் தலித் ஓட்டுக்களை கவர, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி முன்னிறுத்தப்படுவார். உ.பி.,யில் 21 சதவீதம்; உத்தரகண்டில் 18.7 சதவீதம் தலித் மக்கள் உள்ளனர்.

மாயாவதியின் அரசியல் குரு கன்ஷிராம், பல்வேறு காலக்கட்டங்களில் சமாஜ்வாதி, காங்., அல்லது பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தலித் ஒற்றுமையை அரசியல் சக்தியாக மாற்றினார். மாநில ஆட்சியையும், கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கைப்பற்றியது.ஆனால், உ.பி.,யில் கிடைத்த வெற்றியை வேறு மாநிலங்களுக்கு மாயாவதியால் எடுத்துச் செல்ல முடியவில்லை. அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சிகள் இன்று தலித் ஓட்டு வங்கியை குறி வைத்துள்ளன.அனைத்து அரசியல் கட்சிகளும், தலித் மக்களை கவர பல்வேறு யுக்திகளை கையாளுகின்றன.கடந்த 2015 - -2020களில் உயர் கல்வி நிலையங்களில் தலித் சேர்க்கை, 16 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, அவர்களின் முன்னேற்றத்தை காட்டுகிறது.அதே நேரம், இந்திய மக்கள் தொகையில் 16 சதவீதம் உள்ள தலித் மக்கள், தினக்கூலி தொழிலாளர்களில் 33 சதவீதம் உள்ளனர். இது, அவர்களின் சமூக பொருளாதார நிலைமையை
காட்டுகிறது.தலித் மக்கள் ஓட்டுகளை கவர, பா.ஜ., ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காங்கிரஸ் இப்போது தான் விழித்துள்ளது. பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறதென்று!

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
28-செப்-202122:49:23 IST Report Abuse
Anantharaman Srinivasan அன்னதானம் திட்டம் சோம்பேறிகளை வளர்க்கும். பக்கத்திலேயே ஆண்டிமடம் கூட கட்டினாலும் கட்டுவார்கள். அதிகாரிகள் மோசடி செய்ய வாய்ப்பை கொடுக்கும் இந்த அன்னதான திட்டத்தை நிறுத்துங்கள்.
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
28-செப்-202120:48:37 IST Report Abuse
veeramani கோவில்களில் அன்னதானம் .. கர்நாடகம், ஆந்திர போல அனைத்து பக்தர்களையும் சாப்பிடவைக்கும் பெருமுயற்சி. ஆனால் கோவிலில் உள்ள பூசாரிகளும், ஊழியர்களும் உடன்படுவார்களா?????
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-செப்-202115:29:52 IST Report Abuse
D.Ambujavalli கோவில் நிலங்களை மீட்டு நிர்வாகத்திடம் கொடுத்தாலே, தேசாந்திரி உணவு முன் போல செயல்படும் எத்தனை கோயில்களில் அர்ச்சகர்கள் தங்கள் வீட்டில் சமைப்பதையே நெய்வேத்யம் செய்யும் நிலையில் கோவில்கள் உள்ளன? அதையெல்லாம் கவனிப்பதை விட்டு, மூன்றுவேளையம் சோறு கிடைக்கும் என்று கோயிலி லே யே பழியாகக் கிடக்கும் கூட்டம் ஒன்றை ஊக்குவிக்கும் கைங்கர்யம்தான் இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X