விவசாயிகள் அறிவித்த பந்த்தினால் தென் மாநிலங்களில் பாதிப்பு இல்லை! வட மாநிலங்களில் சில பகுதிகள் மட்டும் ஸ்தம்பிப்பு | Dinamalar

விவசாயிகள் அறிவித்த 'பந்த்'தினால் தென் மாநிலங்களில் பாதிப்பு இல்லை! வட மாநிலங்களில் சில பகுதிகள் மட்டும் ஸ்தம்பிப்பு

Updated : செப் 29, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி : மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்த 10 மணி நேர 'பாரத் பந்த்' தென் மாநிலங்களில் பிசுபிசுத்தது. வட மாநிலங்களில் ரயில்கள் ரத்தாகின. தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் முடக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.மத்திய அரசின் மூன்று புதிய வேளாண்
விவசாயிகள் பந்த்   தென் மாநிலங்கள்,பாதிப்பு இல்லை!

புதுடில்லி : மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்த 10 மணி நேர 'பாரத் பந்த்' தென் மாநிலங்களில் பிசுபிசுத்தது. வட மாநிலங்களில் ரயில்கள் ரத்தாகின. தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் முடக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானவை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் கடந்த ஆண்டு நவம்பர் முதல் டில்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு - விவசாய சங்கத்தினர் இடையே நடந்த 11 சுற்று பேச்சில் முடிவு எட்டப்படவில்லை. கடந்த குடியரசு தினத்தன்று ஏற்பட்ட கலவரத்துக்கு பின் பேச்சு தொடரவில்லை.
மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி காலை 6:00 - மாலை 4:00 மணி வரை, 10 மணி நேர பாரத் பந்த் நடத்த, 40 விவசாய சங்கங்களை ஒன்றிணைக்கும் 'சம்யுக்த கிசான் மோர்சா' அமைப்பு அழைப்பு விடுத்தது. இந்த முழு அடைப்பினால் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. வட மாநிலங்களில் 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.


ஆதரவு



டில்லி, குர்கான், காஸியா பாத், நொய்டா எல்லையில் முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேற்கு உத்தர பிரதேசத்தின் காஸியாபூர், ஹரியானாவின் சோனிபட், பஞ்சாபின் பாட்டியாலாவில் இருந்து டில்லி வரும் சாலைகள் முடங்கின. பஞ்சாபின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்கு பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், ''முழு அடைப்பு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
''இந்த போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எங்களை மன்னிக்க வேண்டும்,'' என்றார்.காங்கிரஸ், ஆம் ஆத்மி, சவாஜ்வாதி, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ், இடதுசாரிகள், ஒய்.எஸ்.ஆர்., - காங்., உள்ளிட்ட கட்சிகள் பந்திற்கு ஆதரவு தெரிவித்தன.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்., அரசு, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக கூறியபோதிலும், வேலை நிறுத்தத்தில் இருந்து விலகி இருந்தது. இடதுசாரிகள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைநகர் ராஞ்சி மற்றும் தும்கா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
பீஹாரில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், பெரும்பாலான கடைகள், அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.

ஒடிசாவின் புவனேஸ்வர், பாலாசோர், ரூர்கேலா, சம்பல்பூர் மாவட்டங்களில் லேசான பாதிப்புகள் இருந்தன. கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்கட்சியான காங்., உள்ளிட்டவை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
மாநிலத்தில் அரசு பேருந்து போக்குவரத்து முடங்கியது. தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. தென் மாநிலங் களை பொறுத்தவரை போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டாலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கடை கள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின.


கடைகள் மூடல்



புதுச்சேரியில், காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அதன் தொழிற்சங்கங்கள் பந்திற்கு ஆதரவு தெரிவித்தன. தனியார் பஸ், ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படவில்லை.நகரில் சிறு கடைகள் முதல் பெரும் வர்த்தக நிறுவனங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், வங்கிகள் இயங்கின.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X