அனைவருக்கும் சுகாதார அட்டை திட்டம் அறிமுகம்: டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்| Dinamalar

அனைவருக்கும் சுகாதார அட்டை திட்டம் அறிமுகம்: டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Updated : செப் 28, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (44)
Share
புதுடில்லி : நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதார அட்டை வழங்கும் 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' என்ற புதிய திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். ''மக்களின் உடல் நலன் குறித்த கையடக்க ஆவணமாக இந்த திட்டம் இருக்கும்,'' என, பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மக்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான விபரங்கள் அனைத்தையும், 'டிஜிட்டல்'
சுகாதார அட்டை திட்டம் ,அறிமுகம்:  டில்லி, மோடி துவக்கம்,

புதுடில்லி : நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதார அட்டை வழங்கும் 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' என்ற புதிய திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
''மக்களின் உடல் நலன் குறித்த கையடக்க ஆவணமாக இந்த திட்டம் இருக்கும்,'' என, பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மக்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான விபரங்கள் அனைத்தையும், 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைத்து, உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் என்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


43 கோடி பேர்



உடல் நலன் குறித்த கையடக்க ஆவணமாக கருதப்படும் இந்த திட்டம், சோதனை அடிப்படையில் ஆறு யூனியன் பிரதேசங்களில் ஏற்கனவே அமலில் உள்ளது.
தற்போது நாடு முழுதும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. டில்லியில் நேற்று இந்த திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சியில் புதிய அத்தியாயமாக 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம்' இருக்கும். நம் ஆரோக்கிய பராமரிப்பு வசதிகளில் புரட்சி கரமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் இத்திட்டத்திற்கு உள்ளது.

இன்று நம் நாட்டில் 130 கோடி பேரிடம் 'ஆதார்' அட்டை உள்ளது. 118 கோடி பேர் மொபைல் போன் சந்தாதாரர்களாக உள்ளனர். 'ஜன்தன்' வங்கி திட்டத்தின் கீழ், 43 கோடி பேர் வங்கிக் கணக்கை துவக்கியுள்ளனர். ஒன்றுடன் ஒன்று இணைந்த இந்த மூன்று வசதிகள், இந்தியா தவிர உலகில் வேறு எங்கும் இல்லை.தற்போது இந்த வசதி களுடன் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டமும் இணைவதால், நோயாளிகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சை, மருத்துவச் செலவில் சேமிப்பு, ஆரோக்கியம் தொடர்பான நம்பகமான தகவல்கள் ஆகியவற்றை ஒருங்கே பெற முடியும்.


ஆரோக்கிய விபரங்கள்



இந்த திட்டத்தின் கீழ், நாட்டு மக்கள் அனைவரும் டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இதில், ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கிய விபரங்கள் மின்னணு தொழில்நுட்பத்தில் பாதுகாக்கப்படும். மக்களின் உடல் நலன் குறித்த கையடக்க ஆவணமாக இந்த திட்டம் இருக்கும். நோயாளியின் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து விபரங்களையும், அவர்களின் அனுமதியின் அடிப்படையில், டாக்டர்கள் டிஜிட்டல் முறையில் பார்த்து, உரிய சிகிச்சையை விரைந்து வழங்க முடியும்.ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இது இருக்கும். நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஆரோக்கிய பராமரிப்பு சேவை வழங்குவோர் என அனைவரையும் இது ஒருங்கிணைக்கிறது. இதனால் காலதாமதமின்றி விரைவான மருத்துவச் சிகிச்சையை பெறலாம்.


சீர்திருத்தங்கள்



ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, ஏராளமான டாக்டர்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணியாளர்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மருத்துவக் கல்வியில் இதுவரை இல்லாத சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லுாரி வீதம் உருவாக்கி வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் நவீன சுகாதார மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் உடல் ஆரோக்கிய மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுபோல 80 ஆயிரத்திற்கும் அதிகமான மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.


சுகாதார அட்டை



ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, 'பான்' எனப்படும் வருமான வரி அட்டை போன்றது தான், மத்திய அரசு வழங்க உள்ள புதிய 'டிஜிட்டல்' சுகாதார அட்டை; இதில் ஒவ்வொருவருக்குமான பிரத்யேக எண் இருக்கும். ஒருவரின் உடல் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் மொபைல் செயலி வாயிலாக பதிவேற்றலாம். ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட எத்தகைய நோய்கள் குறித்த விபரங்களையும் பதிவேற்ற முடியும். அந்த விபரங்களை எந்த இடத்தில் இருந்தும் டாக்டர்கள் பார்த்து, தேவைப்படும் சிகிச்சை முறைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கலாம்.

ஆரோக்கிய பராமரிப்பு துறை நிபுணர்களின் விபரங்கள், பாரம்பரியம் மற்றும் நவீன மருத்துவச் சிகிச்சைகளை வழங்கும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் தகவல்களையும், சுகாதார அட்டை சார்ந்த செயலியில் பார்க்கலாம். இந்த ஒருங்கிணைப்பிற்காக, 'சாண்ட்பாக்ஸ்' என்ற நவீன தொழில்நுட்ப வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X