வீட்டிலிருந்த சித்ரா, சமூக வலைத்தளத்தில் மூழ்கியிருந்தாள்.
''ஹாய், அக்கா. என்ன பண்றீங்க?'' என கேட்டவாறு வந்தாள் மித்ரா.
''வா, மித்து. காங்கயத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒட்டு மொத்தமா திரண்டு வந்து, முனிசிபல் கமிஷனர் மேல, கலெக்டரிடம் கம்ப்ளைன்ட் பண்ணாங்க. அத பத்திதான் படிச்சுட்டு இருந்தேன்,''
''அது, என்னக்கா பிரச்னை?''
''காங்கயம் நகராட்சியில கொசு ஒழிப்பு பணியாளர்களை, திடீர்ன்னு வேலையில இருந்த நீக்கிட்டாங்களாம். இதுக்கு முன்னாடி இருந்த பொறியாளர் ஒருத்தரு, பணியாளர் மேல அனுசரணையா நடந்துக்கிட்டாராம்; அவர 'ரிலீவ்' பண்ணிட்டதால, அவரோட துாண்டுதல்ல தான், இப்படி பண்றாங்கன்னு கமிஷனர் தரப்புல இருந்து, பதில் வருது. இதனால தான், கலெக்டர்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணாங்களாம்...''
''முழுசா விசாரிச்சா தான் உண்மை தெரியவரும்,'' சொன்ன மித்ரா, ''ரேஷன் கடை சேல்ஸ்மேன்களுக்கு 'டார்கெட்' வச்சுட்டாங்களாம், தெரியுங்களா?'' என்றாள்.
''இல்லப்பா...''
இப்படி பண்றீங்களே...
''டவுன் பகுதியில இருக்கற ரேஷன் கடைல, ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மளிகை பொருட்களை விற்கணும்; இல்லைன்னா, 'மெமோ' கொடுப்போம்னு, 'நாகா'ஸ்திரம் மாதிரி, 'சேல்ஸ் மேன்களுக்கு, அதிகாரிங்க எச்சரிக்கை விடுத்திருக்காங்களாம்,''
''மக்கள் வாங்கினா தானே எங்களால விற்க முடியும். மொத்தமா விற்பனை செஞ்சா, பெரிய ஆபீசர்களுக்கு கணிசமான கமிஷன் கிடைக்கும்ங்றதுக்காக, எங்களை போட்டு 'அக்கப்போர்' பண்றாங்கன்னு, சேல்ஸ்மேன்கள் புலம்பறாங்க,''
''தரமான பொருட்கள் போட்டா, மக்கள் கண்டிப்பா வாங்குவாங்க,'' என்ற சித்ரா, ''ஏன்டி மித்து, உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கற மாதிரியே தெரியலையே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''ஆமாங்க்கா, அப்டித்தான், கலெக்டரேட்ல பேசிக்கறாங்க. காங்கயம், தாராபுரத்துல, வேட்புமனு விவரம், மனுக்கள் பரிசீலனைனு எந்த விவரமும் கலெக்டர் ஆபீசுக்கே தெரியறது இல்லையாம். மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கூட எந்த விவரமும் கொடுக்காம, 'ஆன்லைன்'ல பதிவு பண்ணிட்டு பேசாம இருந்துடறாங்களாம். போற போக்கை பார்த்தா காங்கயம், தாராபுரம் தாலுகா, நம்ம மாவட்டத்துல தான் இருக்குதான்னு சந்தேகம் வருது. இதைப்பத்தி ஹையர் அபிஷியல்ஸ் விசாரிச்சிட்டு இருக்காங்க,''
''அப்ப தானே உண்மை தெரியும். மித்து, பல்லடம் கடைவீதியில இருக்கற ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல தீ விபத்து ஏற்பட்டுச்சு. அந்த கட்டடம் சட்ட விதிப்படி இல்லையாம். தீயை அணைக்கிறதுக்கு, அன்டர்கிரவுண்ட் குடோனுக்குள்ள தீயணைப்பு வீரர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர மாட்டிக்கிட்டு தான், மீட்பு பணியில ஈடுபட்டிருக்காங்க. இதெல்லாம் வெளியே தெரியக்கூடாதுன்னு, பல லட்சம் ரூபாய் கைமாறிடுச்சாம்...'' என்றாள் சித்ரா.
''அதே ஊர்ல, பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம், பல்லடம் யூனியன் ஆபீஸ்ல நடந்திருக்கு. ஆனா, பெண் தலைவர்களுக்கு பதிலா அவங்க கணவன்மார்கள் அணிவகுத்து வந்திருக்காங்க. அதனால, கூட்டத்தையே ஒத்திவைச்சிட்டாங்களாம்'' என்று சொல்லி சிரித்தாள் சித்ரா.
கட் அண்ட் ரைட்
சித்ராவின் அம்மா டீ கொடுக்க, ''தேங்க்ஸ் ஆன்ட்டி'' என்ற மித்ரா, ''அக்கா, இழப்பை ஈடுகட்ட, அதிகமா கட்டணம் கேட்கிறாங்களாம்,'' என, கல் குவாரி மேட்டரை ஆரம்பித்தாள்.
''ஆமான்டி. நானும் கேள்விப்பட்டேன். சட்ட விரோத குவாரிகளால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய அபராதம் விதித்து வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தில், உரிமம் பெறாத குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை,''
''ஆனா, அதே நேரத்தில வசூலை அதிகரிக்க, 10 ஆயிரம் ரூபாய்க்கு பர்மிட்டுக்கு, 25 ஆயிரமும், 25 ஆயிரம் ரூபாய் வரை பெர்மிட் வாங்கும் குவாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாயும் தரணும்னு சொல்லி, ஆபீசர்கள் வசூல் பண்றாங்களாம். இதெல்லாம் என்ன 'லாஜிக்'னு தெரியலைன்னு சொல்லி புலம்பறாங்களாம்...''
''ஆபீசர்கள் எப்பதான் மாறப்போறாங்களோ. அதே மாதிரிங்க்கா, குப்பை அள்ளுற மேட்டரிலும், மீட்டரு போடறாங்க தெரியுங்களா?''
''அதென்ன மேட்டர்?''
''கார்ப்ரேஷன் ஏரியாவில், ஓடைகள் துார் வாரும் பணிக்கு தனியார் மெஷின்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளனர். ஏன்னா, கார்ப்ரேஷனுக்கு சொந்தமான மெஷின் பழுதாகி ஓரம் கட்டப்பட்டுள்ளது. சில ஆயிரம் ரூபாய் செலவு செய்து அதை சரி செய்து பயன்படுத்தாமல், லட்சக்கணக்கில் வாடகையாக கொடுத்துள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது,''
''இதனால், அதிர்ச்சியடைந்த கமிஷனர் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட ஆபீசர்கள் வெலவெலத்து போயிருக்காங்களாம்...''
தோழர்களின் 'டெக்னிக்'
''இருக்காதா பின்ன, விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை தண்டிச்சாதான், மீண்டும் இதுபோல நடக்காது,'' ஆவேசப்பட்ட சித்ரா ''தோழர்கள் போராட்டத்தில், சுருதி குறைஞ்சிடுச்சாம், தெரியுமா?'' என்றாள்.
''அதெப்படி சொல்றீங்க?''''வழக்கமாக தோழர்கள் எந்த போராட்டம் நடத்தினாலும், அரசுக்கு எதிராக எதுகை மோனையில கோஷம் போடுவது தான் வழக்கம். இப்ப, ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கறதால, கோஷம் போடுவதில் கூட கவனமாக உள்ளனர்,''
''எப்டின்னு கேட்டீன்னா, 'மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசே... ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்து,' என கோஷத்தை கூட கோரிக்கையை, 'டெக்னிக்லாக' மாற்றி விட்டனர்...''
''ஈயம் பூசுனா மாதிரி இருக்கோணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்,'னு, இதைத்தான் சொல்வாங்களோ'' என சிரித்த மித்ரா, ''மாவட்டத்திலுள்ள மதுக்கடை 'பார்'களை, ஆளுங்கட்சி நிர்வாகிகள் தங்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளனர்,'' என்றாள்.
''மித்து, அதானே பார்த்தேன்... என்னடா, இன்னும் அதில் கை வைக்கலையேன்னு நெனச்சேன்,''
''பார் நடத்தும் நபர்கள் குறிப்பிட்ட தொகையை ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு செலுத்தி விட்டு அவர்களே தொடர்ந்து நடத்துவது என்ற முடிவில் உள்ளனர். இதற்கான 'டீலிங்' முடிஞ்சு, முதல் கட்ட கப்பமும் செலுத்திட்டாங்க,''
தலை' உருளுமா?
''இதனால, ஆட்சி மாற்றம் வந்தால் 'பார்' நடத்தி பணம் பார்க்கலாம்னு நெனச்ச ஆளுங்கட்சி நிர்வாகிகள், எண்ணத்தில் மண் விழுந்து விட்டது. இதனால், முக்கிய நிர்வாகிகள் மீது கட்சியினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ரகசியமாக நடந்த 'பார்' விவகாரங்கள் எல்லாம் வெளியாகி, தலைமை வரை தகவல் போய் இருக்கிறது. விரைவில், முக்கிய தலை உருளப்போகுதாம்...''
''சிட்டி போலீஸ் அதிகாரி 'மைக்'கில் போய், 'குளுகுளு' அப்புறம், இன்ஸ்.,களை 'மைக்கில்' வெளுத்து வாங்கிட்டாரு. ஒவ்வொரு ஸ்டேஷன் லிமிட்டில், குட்கா, கஞ்சான்னு சட்டவிரோத செயல்கள் நடப்பதை, ஐ.எஸ்., போலீஸ்காரங்க பிடிக்கிறாங்க,''
''ஆனால், ஸ்டேஷன் போலீஸ்காரர்கள் பிடிப்பதில்லை. தெரிஞ்சுகிட்டு 'கம்'னு இருந்தா, என்ன அர்த்தம்,'னு ஒரு பிடிபிடிச்சிட்டாங்க. அவரின், கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம, 'யெஸ் மேடம், ஓ.கே., மேடம்'னு சொல்லி ஒரு வழியா சமாளிச்சிட்டாங்க...''
''ஆமாங்க்கா... அவங்களும் ரொம்ப பொறுமையாக பார்த்தாங்க. ஆனா, ஒன்னும் வேலைக்கு ஆகலை. அதனால, 'சாட்டையை' சுத்த ஆரம்பிச்சிட்டாங்க போல...''
''சிட்டி 'நார்த் ரேஞ்'சுக்கு, நெல்லையில் இருந்து ஒரு ஆபீசரை போட்டாங்க. அவரும் ஜாயின்ட் பண்ண இருந்தப்போ, அவரை மாத்திட்டு, திருச்சியில் இருந்து ஒருத்தரை அனுப்பினாங்க. அவரும் ஜாயின்ட் பண்ணிட்டாரு,''
''ஒரு வீட்டை பார்த்து, பொருட்களை எல்லாம் கொண்டு வர ரெடியானப்போ, திடீர்ன்னு, அவரை சென்னைக்கு மாத்திட்டாங்க. மறுபடியும், நெல்லைக்காரர் தான், வர்றாராம். எதுக்கு ஆபீசர் வராங்க. திடீரென மாத்துறாங்கனு ஒன்னும் புரியலடி,'' எல்லாம் மாயையாக உள்ளது,'' என்றாள் மித்ரா.
'பாச்சா பலிக்கலே'
''உழவர் சந்தை ஆபீசரை மாற்ற, எல்லா கட்சிக்காரங்களும் தீயாய் வேலை செய்றாங்க,'' என்றாள் சித்ரா.
''மார்க்கெட்டிலுமா...'' கேட்டாள் மித்ரா.
''எதுவாக இருந்தா என்னடி. எல்லாம் 'மனி மேட்டர்'தானடி. அங்கிருக்கிற ஆபீசர், வெளியே கடைகள் போடுவது உட்பட சில விஷயங்களுக்கு வளைந்து கொடுக்காம, ரொம்ப நேர்மையாக இருக்கிறாரு,''
''இதனால, ஆளுங்கட்சி தலைமையில, ஒன்னு சேர்ந்த அனைத்து கட்சிக்காரங்க, சந்தை செக்யூரிட்டி, ரோட்டோரம் சுற்றி திரியும் பெண்ணிடம் தவறாக நடந்ததாக நார்த் ஸ்டேஷனில், கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க. இந்த பிரச்னையை எப்படியாவது பெரிசு பண்ணோணும்னு முயற்சி செஞ்சாங்க,''
''ஆனா, விசாரிச்ச போலீசார், இந்த மேட்டரிலுள்ள 'அரசியலை' புரிஞ்சுகிட்டு, கண்டுக்காம விட்டுட்டாங்க,'' என சித்ரா சொன்னதும், ''ஓ.கே., சித்துக்கா, டைம் ஆயிடுச்சு. நான் கெளம்பறேன்,'' என புறப்பட்டாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE