புதுடில்லி-'அரசு ஆதரவு இருக்கும் வரை தான் சட்டவிரோதமாக செயல்பட முடியும். ஆட்சி மாறினால் காட்சி மாறிவிடும். இது போன்ற போலீஸ் அதிகாரிகளை சிறையில் அடைக்க வேண்டும்' என, சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான குர்ஜிந்தர் பால் சிங் மீது, பணம் கேட்டு மிரட்டியது உட்பட ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்வதற்கு தடை கோரி, அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டதாவது:மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். அவர்களது ஆதரவு இருக்கும்போது, இந்த அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.ஆட்சி மாறினால், முதலுடன் வட்டியையும் சேர்த்து அனுபவிக்க வேண்டியிருக்கும். புதிய ஆட்சியாளர்களால் பல வழக்குகள் தொடரப்படுகின்றன.

ஏற்கனவே இரண்டு வழக்குகளில் கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கக் கூடாது. அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இருப்பினும், இந்த வழக்கிலும் கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.