பீஜிங்-'கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவே வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம். இது வெளிநாடுகளில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும்' என, சீன அரசு கூறியுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில் 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் துவங்கியதும், அங்கு படித்து வந்த மற்றும் பணியாற்றி வந்த இந்தியர்கள் நாடு திரும்பினர். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், மீண்டும் அவர்கள் சீனாவுக்கு திரும்புவதற்கு விசா வழங்குவதை சீனா நிறுத்தி வைத்துள்ளது. மேலும், வெளிநாட்டு விமானங்கள் வருகைக்கும் தடை விதித்துள்ளது.இதனால் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவர், தொழிலாளர் என, 21 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள், சீனாவுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
சமீபத்தில் நடந்த இந்தியா - சீனா உறவுகள் தொடர்பான பேச்சின்போது விசா வழங்க மறுக்கும் சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியத் துாதர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்திருந்தார்.இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனாவில் அறிவியல்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாட்டுக்குள் வருவோர் அனைவரும் கட்டாயமாக தனிமைபடுத்தப்படுவர். மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படியே இந்தியாவில் இருந்து வருவோருக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு எதிரானதல்ல. வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள சீனர்களுக்கும் இது பொருந்தும். அந்தந்த நாடுகளுடன் பேசி, கட்டுப்பாடுகளை விலக்கி கொள்வது குறித்து தகுந்த நேரத்தில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.