சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பெயர் பலகைகள் மற்றும் சுவர்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படம் மற்றும் கட்சி சார்ந்த விளம்பரங்கள் அதிகரித்துள்ளன. கட்சிக்காரர்களின் விதிமீறிய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் கீழ், சென்னையை அழகுபடுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள், சுவர்கள், சுரங்க பாலங்கள் உள்ளிட்டவற்றில் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு கலைகள் விழிப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில், சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்கள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

அதேசமயத்தில், பல்வேறு இடங்களில் சுவர்களில் அரசியல் கட்சிகளின் சார்பில் விளம்பரம் வரையப்பட்டுள்ளது. இதில், கட்சித் தலைவர்களின் படங்கள் மற்றும் அவர்களை வாழ்த்தி, ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதே போல், புறநகர் பகுதிகளில், தெரு பெயர் பலகை மற்றும் ஊராட்சி வரவேற்பு பலகைகளில், அரசியல் கட்சியினரை வாழ்த்தி, கட்சியினர், தனியார் சார்பில் விளம்பர அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சிகளில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தனியார் மற்றும் பொது இடங்களில் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது. அதே போல், சென்னை சேத்துப்பட்டு - செனாய் நகர் நோக்கி செல்லும், ஹாரிங்டன் சாலையில் பச்சையப்பன் கல்லுாரி மதில் சுவர் உள்ளது. இந்த சுவர் முழுதும், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதை அகற்றி, விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE